

ரூபாய் நோட்டு விவகாரத்தை மையமாக வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
வாக்கெடுப்புடன் விவாதம் கோரி...: மக்களவை காலையில் கூடிய உடன் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கான நோட்டீஸை வழங்கினார். ஆனால், அதனை ஏற்க மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் மறுத்துவிட்டார்.
அதே நேரத்தில் விதி 193-ன்படி வாக்கெடுப்பு நடத்தாமல் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்தார். இதனை
ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், அமளியில் ஈடுபட்டனர். இதற்கு நடுவே கேள்வி நேரம் தொடங்கியது. எனினும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் பகல் 12.30-க்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், "வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும்' என்று மீண்டும் வலியுறுத்தினர்.
ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம்: அப்போது பேசிய அனந்த குமார், "மக்கள் பிரதமர் மோடியின் பக்கம் இருக்கிறார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. அமளியில் ஈடுபடுவதைத் தவிர்த்து ஆக்கப்பூர்வ விவாதத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்' என்று எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொண்டார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய சுதீப் பந்தோபாத்யாயா, "ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டுள்ளன. மத்திய அரசின் நடவடிக்கையை நாங்கள் வலுவாகவும் ஒட்டுமொத்தமாகவும் எதிர்க்கிறோம்' என்றார்.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றுகூடி, பிரதமர் தங்களுக்கு பதிலளிக்க வேண்டுமென்று கோஷமிட்டனர். தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் மக்களவை நாள் முழுவதுக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையும் ஒத்திவைப்பு: மக்களவையில் கூட கேள்வி நேர அலுவல் சிறிது நேரம் நடைபெற்றது. ஆனால், மாநிலங்களவையில் வியாழக்கிழமை எந்த அலுவல்களும் நடைபெறவில்லை.
ரூபாய் நோட்டு விவாதம் தொடர்பாக விவாதத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மாநிலங்களவைக்கு வரவில்லையெனில் அவையை நடத்தவிடப்போவதில்லை என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை அலுவல்கள் முற்றிலுமாக முடங்கின.
ஆசாத் பேச்சால் அமளி: முன்னதாக மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத், "நீங்கள் (பாஜகவினர்) பாகிஸ்தானுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்கள். உங்களுக்கு அங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆனால் அது எங்களுக்காகத்தான் என்று கூறுகிறீர்கள்' என்றார். பிரதமர் மோடி கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானுக்கு திடீரென சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸை சந்தித்ததை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
இதற்கு அமைச்சர் வெங்கய்ய நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் தொடர்ந்து பேசிய குலாம் நபி ஆசாத், "உரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களை விட, ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் தவறான முடிவால் வங்கி வாசலில் காத்திருந்து இறந்தவர்கள்தான் அதிகம். இதுவரை 40 பேர் பணத்துக்காக காத்திருந்து வெயிலில் சுருண்டு விழுந்து இறந்துவிட்டனர். இந்த மரணங்களுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு. பிரதமர் மோடி மாநிலங்களவைக்கு வந்து உரிய பதிலளிக்க வேண்டும்' என்றார்.
பிரதமர் விளக்கமளிக்க வலியுறுத்தல்: இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சியினர் பதிலுக்கு குற்றம்சாட்டிப் பேசியதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது, பிரதமர் அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனால் அவை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.