
ஆக்ரா - லக்னெள விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் தொடக்க விழா உத்தரப் பிரதேச மாநிலம், உன்னூவ் மாவட்டம் பங்கர்மெளவில் திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 6 போர் விமானங்கள் அந்த நெடுஞ்சாலையைத் தொட்டுவிட்டு மீண்டும் விண்ணில் பறந்து சென்றன.
லக்னெளவில் இருந்து தில்லி வரை 302 கிலோ மீட்டர் தொலைவுக்கு 6 வழி விரைவு நெடுஞ்சாலை அமைக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் அந்த நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறைய உள்ளது.
மேலும், போர்ச் சூழல்களிலும், அவசர காலங்களிலும் இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் விமானங்களைத் தரையிறக்க முடியும்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த சாலைத் திட்டத்தின் பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, அந்தச் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 3 மிராஜ்-2000 ரக ஜெட் விமானங்களும், 3 சுகோய்-30 ஜெட் விமானங்களும் அந்த நெடுஞ்சாலையின் தரையைத் தொட்டுவிட்டு பறந்து சென்றன. விமானங்களை தரையிறக்குவதற்கான சோதனை ஓட்டமாக இது கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.