கருப்புப் பணத்தை தடுக்க புதிய மசோதா: தாமாக அறிவித்தால் 50% வரி; பிடிபட்டால் 85% வரை அபராதம்

கருப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்கான மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, கணக்கில் வராத பணத்தைக் குறித்து தாமாக தெரிவிப்பவர்களுக்கு அந்தத் தொகையில் 50 சதவீத வரிவிதிப்புடன்
கருப்புப் பணத்தை தடுக்க புதிய மசோதா: தாமாக அறிவித்தால் 50% வரி; பிடிபட்டால் 85% வரை அபராதம்

கருப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்கான மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, கணக்கில் வராத பணத்தைக் குறித்து தாமாக தெரிவிப்பவர்களுக்கு அந்தத் தொகையில் 50 சதவீத வரிவிதிப்புடன் அவர்களது கணக்கில் செலுத்துவதற்கு அனுமதியளிக்கும் புதிய மசோதாவை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்படும் தொகைக்கான வருவாய் ஆதாரம் கேட்கப்படமாட்டாது.
பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்படும்பட்சத்தில், அந்தத் தொகையில் 85 சதவீதம் வரையிலான அபராதம் விதிக்கவும் அந்த மசோதா பரிந்துரைக்கிறது.
50 சதவீத வரி தவிர, அறிவிக்கப்பட்ட கருப்புப் பணத்தில் 25 சதவீதத் தொகையை கட்டாய வைப்பு நிதியாக 4 ஆண்டுகளுக்குப் பிடித்து வைக்கவும் அந்த மசோதா பரிந்துரைக்கிறது.
நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொணரும் முயற்சியாக, புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்தார்.
செல்லாத நோட்டுகளை பொதுமக்கள் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தங்களிடமிருந்த செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகக் கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் சட்ட விரோதமான முறையில் பிறரது வங்கிக் கணக்குகள் வாயிலாக அந்தப் பணத்தை வங்கிகளில் செலுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அவ்வாறு முறைகேடாக செலுத்துவதற்குப் பதில், கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பெரும் அபராதத்துடன் அந்தப் பணத்தை தாங்களே தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பு வழங்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போதைய வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வரி விதிக்க முடியாத நிலை உள்ளது.
இந்தச் சூழலில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி "2-ஆவது வரிவிதிப்புச் சட்டத் திருத்த மசோதா 2016' என்ற மசோதாவை மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினார்.
அந்த மசோதா குறித்த விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள், தாமாக முன்வந்து அதனை அறிவிப்பதற்கான "பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டம் 2016' (பிபிஎம்ஜிகேஒய்) என்ற புதிய திட்டத்தை உருவாக்க 2-ஆவது வரிவிதிப்புச் சட்டத் திருத்த மசோதா பரிந்துரைக்கிறது.
அந்தத் திட்டத்தின்படி, கருப்புப் பணத்தைத் தாமாக முன்வந்து அறிவிப்பவர்கள், அறிவிக்கப்பட்ட தொகையில் அபராதம் உள்பட 50 சதவீத வரி பிடிக்கப்பட்டு, மீதியை தங்களது வங்கிக் கணக்கில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
அந்தத் தொகை எவ்வாறு ஈட்டப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை அவர்கள் அளிக்கத் தேவையில்லை.
அறிவிக்கப்பட்ட கருப்புப் பணத்தில் 30 சதவீத வருமான வரி, 10 சதவீத அபராத வரி, வரிகளில் 33 சதவீதம் கூடுதல் கட்டணம் (அதாவது அறிவிக்கப்பட்ட தொகையில் 10 சதவீதம்) என 50 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படும்.
இதுதவிர, அறிவிக்கப்பட்ட தொகையில் 25 சதவீதம், "பிரதமரின் ஏழைகள் நலவாழ்வுத் திட்டத்துக்கான' கட்டாய வைப்பு நிதியாக 4 ஆண்டுகளுக்குப் பிடித்து வைக்கப்படும்.
கருப்புப் பணத்தைக் குறித்து தாமாக அறிவிக்காமல் அதிகாரிகளின் சோதனையின்போது அது பிடிபட்டால், அந்தத் தொகையில் 75 சதவீதம் அபராத வரி விதிக்கப்படும்.
அதுதவிர, ஆய்வு நடத்திய அதிகாரி முடிவு செய்தால் 10 சதவீத கூடுதல் கட்டணமும் விதிக்கப்படும்.
ஏழை எளிய மக்களுக்கான நீர்ப் பாசன வசதி, வீட்டு வசதி, கழிப்பிட வசதி, உள்கட்டமைப்பு வசதிகள், ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதற்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.
இவ்வாறு வரி மற்றும் கட்டணங்களை வசூலிப்பதற்கு ஏற்ற வகையில், தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தின் 115பிபிஇ பிரிவிலும், 271ஏஏபி பிரிவிலும் திருத்தம் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 10-ஆம் தேதியிலிருந்து வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட பெருந்தொகைகள் பிஎம்ஜிகேஒய் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும்.
இந்தத் திட்டத்துக்கான இறுதித் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், அது டிசம்பர் 30-ஆம் தேதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com