

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வருகிறார்.
தில்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இந்தியா கடந்த வாரம் முடிவெடுத்தது. இதையடுத்து முறையே ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை ஆகிய சார்க் உறுப்பு நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் சார்க் மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இலங்கைப் பிரதமரின் இந்தியப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை சந்தித்துப் பேசுகிறார். அன்று மாலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவர் சந்திக்கிறார்.
தொடர்ந்து இந்தியப் பொருளாதார உச்சி மாநாட்டில் வியாழக்கிழமை பங்கேற்கும் அவர் அன்று மாலையே இலங்கை திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.