இந்தியத் தூதரை பாகிஸ்தான் அரசு அவமதித்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து, இதுதொடர்பாக கடும் ஆட்சேபம் தெரிவிக்க இந்தியாவில் உள்ள அந்நாட்டுத் தூதர் அப்துல் பாஸித்துக்கு மத்திய அரசு அழைப்பாணை அனுப்பியது.
கராச்சி வர்த்தக அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும், உரையாற்றுவதற்கும் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் உரையாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே எந்தக் காரணமும் தெரிவிக்காமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவிக்கும் வகையில், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் பாஸித்துக்கு மத்திய அரசு புதன்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
இந்த அழைப்பாணையை வெளியுறவுத் துறை (மேற்கு) செயலர் சுஜாதா மேத்தா அனுப்பி வைத்ததாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் பணிகளைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்று நம்புவதாக அப்துல் பாஸித்திடம் தெரிவிக்கப்பட்டது' என்றார்.
முன்னதாக, கராச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற கௌதம் பம்பாவாலே, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.