

"ஃபோர்ப்ஸ்' பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் மிகப் பெரும் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து 9-ஆவது ஆண்டாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவரது ரிலையன்ஸ் நிறுவனம் அண்மையில் அதிரடியாக அறிமுகப்படுத்திய 4ஜி தொலைத்தொடர்பு சேவை வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 21 சதவீதம் வளர்ச்சியடைந்தது.
இதன்மூலம் கடந்த ஆண்டு 1,890 (சுமார் ரூ.1.2 லட்சம் கோடி) கோடி டாலராக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, இந்த ஆண்டு 2,270 கோடி டாலராக (சுமார் ரூ.1.5 லட்சம் கோடி) உயர்ந்தது.
முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய இடைவெளியில் சன் ஃபார்மா நிறுவன அதிபர் திலீப் சாங்வி 1,690 டாலர் (சுமார் ரூ.1.1 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
1,520 கோடி டாலர் (சுமார் ரூ.1.01 லட்சம் கோடி) சொத்து மதிப்பு கொண்ட ஹிந்துஜா சகோதரர்கள் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினர்.
அந்த இடத்தில் கடந்த ஆண்டு இருந்த விப்ரோ நிறுவனத்தின் அஸிம் பிரேம்ஜி நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அவரது சொத்து மதிப்பு 1,500 கோடி டாலராக (சுமார் ரூ.1 லட்சம் கோடி) உள்ளது.
யோகா குரு ராம்தேவுக்கு நெருக்கமான பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன அதிபர் ஆச்சாரிய பாலகிருஷ்ணா, யாரும் எதிர்பாராத வகையில் பட்டியலில் இடம் பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
250 கோடி டாலர் (சுமார் ரூ.16,600 கோடி) சொத்து மதிப்பு கொண்ட அவருக்கு இந்தப் பட்டியலில் 48-ஆவது இடம் கிடைத்துள்ளது.
பட்டியலில் 29-ஆவது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, இந்த முறை 340 கோடி டாலருடன் (சுமார் ரூ.22,700 கோடி) 32-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 38,100 கோடி டாலர் (சுமார் ரூ.25.5 லட்சம் கோடி) என "ஃபோர்ப்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
4 பெண்கள்: இந்தப் பட்டியலில் ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால், உயிரி தொழில்நுட்ப முன்னோடி கிரண் மஸþம்தர்-ஷா, ஹேவல்ஸ் நிறுவனர் கீமத் ராய் குப்தாவின் மனைவி வினோத் குப்தா, யுஎஸ்வி ஃபார்மா தலைவர் லீனா திவாரி ஆகிய 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.