உலகம் சுற்றும் வாலிபர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்: அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்

2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றதை அடுத்து 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 56 வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
உலகம் சுற்றும் வாலிபர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்: அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்


புது தில்லி: 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றதை அடுத்து 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 56 வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்காவுக்குச் சென்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியது உட்பட 6 கண்டங்களில் உள்ள 45 முறை 56 நாடுகளுக்கு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். 

மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்புக்கு உள்ளான போதும், சமூக ஊடகங்களில் நக்கலடித்து ஏராளமான கருத்துகள் பதிவு செய்யப்பட்ட போதும், மோடியின் சுற்றுப் பயணம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.  

அதே சமயம், மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பிரதமர் மோடியின் இந்த வெளிநாட்டுப் பயணங்கள் பெரிதும் உதவுகின்றன என்றே மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்ட மோடி, அடுத்த இரண்டாவது நாள் அதாவது நவம்பர் 10ம் தேதி ஜப்பானுக்கு பறந்துவிட்டார். நாட்டு மக்கள் கையில் இருக்கும் பணம் செல்லாது என்ற அறிவிப்பால் கொந்தளித்துக் கொண்டிருந்த போது, பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி தனது சுற்றுப் பயணித்தின் போது ஏராளமான சாதனைகளையும், முதல் முறை என்ற வரலாற்று நிகழ்வையும் பதிவு செய்துள்ளார்.

பெண் தொழிலதிபர்கள்
சௌதி அரேபியா சென்ற பிரதமர் மோடி, அங்கு பெண் தொழிலதிபர்களை நேரில் சந்தித்துப் பேசினார். வெளிநாட்டு பிரமுகர் ஒருவர் பெண் தொழிலதிபர்களை சந்தித்துப் பேசியது அதுவே முதல் முறை என்பது இந்திய வரலாற்றில் மட்டும் அல்ல சௌதி அரேபிய வரலாற்றிலும் இடம்பிடித்தது.

இங்கிலாந்து நாடாளுமன்றம்
2015ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.

அயர்லாந்தில் புதிய சாதனை
1956ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவுக்குப் பிறகு சுமார் 60 ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய பிரதமர் மோடி, அயர்லாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு அதாவது 34 ஆண்டுகளுக்குப் பின் 2015 ஆகஸ்டில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்க விஷயமாக அமைந்தது.

1973ம் ஆண்டு இந்திராகாந்தி பயணித்த கனடாவுக்கு 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி சென்றது வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தது.

நமது அண்டை நாடான இலங்கைக்கு 2015 மார்ச் மாதம் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.  கடந்த 29 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை சாட்சாத் மோடியே பெற்றார்.

இனி மோடி பயணம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலை சுருக்கமாகப் பார்க்கலாம்.

பிரதமராக பொறுப்பேற்ற மோடி, ஜூன் 15ம் தேதி தான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கினார். அதுவும் நமது அண்டை நாடான பூடானுக்கு. 

அதன்பிறகு, பிரேசில், நேபாள், ஜப்பான், அமெரிக்கா, மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி, நேபால், செசல்லஸ், மொரீஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சீனா, கொரியா, மங்கோலியா...

சற்று மூச்சு விடுவோம்..

வங்கதேசம், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, துர்க்மேனிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பெல்ஜியம், அமெரிக்கா, சௌதி அரேபியா, ஈரான், ஆப்கானிஸ்தான், கட்டார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ, உஸ்பெகிஸ்தான், மொசாம்பிக், தென்னாப்ரிக்கா, தான்சானியா, கென்யா, தாய்லாந்து என 55 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட மோடி, 56வதாக ஜப்பான் நாட்டுக்கு சென்றார்.

2015 - 16ம் நிதியாண்டில் மட்டும் பிரதமர் மோடி மற்றும் அவரது சகாக்களின் வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.567 கோடி செலவிடப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

195 உலக நாடுகளில், பிரதமர் மோடி 56 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com