உத்தரகண்ட் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்

உத்தரகண்ட் மாநிலம் பராஹோத்தி பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அத்துமீறல் கடந்த 25-ஆம் தேதி நிகழ்ந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் பராஹோத்தி பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அத்துமீறல் கடந்த 25-ஆம் தேதி நிகழ்ந்துள்ளது.
ஏற்கெனவே, சிக்கிம் மாநிலம் டோகாலாம் எல்லைப் பகுதி தொடர்பாக இந்தியா-சீனா இடையே கடந்த ஒரு மாதத்துக்கு மேல் பிரச்னை நீடித்து வருகிறது. அப்பகுதியில் இருநாடுகளும் ராணுவத்தைக் குவித்துள்ளன. இந்நிலையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லையில் அத்துமீறல்: இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்ட எல்லையான பராஹோத்தி பகுதிக்குள் கடந்த 25-ஆம் தேதி காலை 9 மணியளவில் சீன ராணுவ வீரர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களை அங்கிருந்து செல்லும்படியும் வலியுறுத்தியுள்ளனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினர் 2 மணி நேரம் வரை அங்கு இருந்துவிட்டு மீண்டும் தங்கள் நாட்டு எல்லைக்குத் திரும்பிவிட்டனர்.
ஆயுதங்களுக்கு அனுமதியில்லை: சீன ராணுவம் ஊடுருவிய பராஹோத்தி பகுதி உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில் இருந்து 140 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. 80 சதுர கி.மீ. பரப்பளவுள்ள பராஹோத்தி பகுதி முழுவதும் சரிவான மேய்ச்சல் நிலமாகும். இங்கு பாதுகாப்புக்காக ராணுவம் நிறுத்தப்படுவது இல்லை. இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் கூட இங்கு செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
பிரச்னைக்குரிய பகுதி: 1958-ஆம் ஆண்டு இந்தியாவும், சீனாவும் இதனை பிரச்னைக்குரிய பகுதியாக அறிவித்தன. எனவே, இரு நாடுகளுமே தங்கள் ராணுவத்தை இப்பகுதிக்கு அனுப்புவது இல்லை. 1962-ஆம் ஆண்டு இந்திய-சீன போரின்போது கூட மத்தியப் பகுதியான பராஹோத்தியில் சீன ராணுவம் நுழையவில்லை. மேற்கே லடாக்கிலும், கிழக்கில் அருணாசலப் பிரதேசத்திலும்தான் போர் நடத்தினர்.
போருக்குப் பிறகு இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இப்பகுதியில் ஆயுதங்களுடன் ரோந்துப் பணி மேற்கொண்டனர். எனினும், துப்பாக்கிகளை அவர்கள் உயர்த்திப் பிடிக்காமல், தரையை நோக்கிதான் வைத்திருப்பார்கள்.
மீண்டும் ஒப்புதல்: 2000-ஆம் ஆண்டில் இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான பேச்சு நடைபெற்றபோது பராஹோத்தி, ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள எல்லைகளான கெளரில், ஷிப்கி ஆகியவற்றில் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியின்போது ஆயுதங்களை எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்று இந்தியா ஒப்புக் கொண்டது.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் பராஹோத்தி பகுதியில் சாதாரண உடையிலேயே ரோந்துப் பணி மேற்கொள்வார்கள். இந்திய எல்லையில் உள்ள கிராம மக்கள் தங்கள் ஆடுகளை அப்பகுதியில் மேய்ப்பதுபோல, திபெத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு முன்பு கடந்த 19-ஆம் தேதி சீன ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று உத்தரகண்ட் மாநில வான் எல்லைக்குள் வந்து சென்றுள்ளது.
கடந்த ஆண்டும் நிகழ்ந்தது: முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அப்போது, இந்திய அதிகாரிகள் அப்பகுதிச் சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர், பராஹோத்தி பகுதியில் எல்லை தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் வந்தது அத்துமீறல்தான், ஆனால் ஆக்கிரமிக்கும் முயற்சி அல்ல என்றார்.
அண்மையில், பிரிக்ஸ் நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அஜித் தோவால் பங்கேற்றார். அவர் சீனா செல்வதற்கு இருநாள்களுக்கு முன்பு இந்த ஊடுருவல் நிகழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com