சமையல் எரிவாயு மானியம் மார்ச் மாதத்துக்குள் ரத்து: விலையை மாதந்தோறும் ரூ.4 உயர்த்த அரசு உத்தரவு

சமையல் எரிவாயு உருளைகளுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து மானியங்களையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரத்து செய்வதென்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமையல் எரிவாயு மானியம் மார்ச் மாதத்துக்குள் ரத்து: விலையை மாதந்தோறும் ரூ.4 உயர்த்த அரசு உத்தரவு

சமையல் எரிவாயு உருளைகளுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து மானியங்களையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரத்து செய்வதென்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், மானிய விலை சமையல் எரிவாயு உருளை மீதான விலையை மாதந்தோறும் ரூ.4 உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீடுகளுக்கு மானியத்துடன் ஆண்டுக்கு 14.2 கிலோ எடை கொண்ட 12 சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்பிறகு, வீடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயு உருளைகள் சந்தை விலையிலேயே அளிக்கப்படுகின்றன. அதாவது, 12 எண்ணிக்கை வரையிலான சமையல் எரிவாயு உருளைகளுக்கு சந்தாதாரர்களால் அளிக்கப்படும் தொகையில், மானியத் தொகை மட்டும், அவர்களது வங்கிக் கணக்கில் எண்ணெய் நிறுவனங்களால் நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றன. 12 எண்ணிக்கைக்குப் பிறகு வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளுக்கு, மானியம் அளிக்கப்பட மாட்டாது.
இந்நிலையில், சமையல் எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்படும் அனைத்து வகை மானியங்களையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரத்து செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மானிய சமையல் எரிவாயு உருளைகள் மீதான விலையை மாதந்தோறும் ரூ.4 உயர்த்தும்படியும், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் மானிய விலை சமையல் எரிவாயு உருளைகளின் விலையை மாதந்தோறும் தலா ரூ.2 உயர்த்திக் கொள்வதற்கு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி பிறப்பித்த மற்றொரு உத்தரவில், 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் மானிய விலை சமையல் எரிவாயு உருளைகளின் விலையை மாதந்தோறும் தலா ரூ.4 உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சமையல் எரிவாயு உருளைக்கு அரசால் வழங்கப்படும் மானியங்கள் பூஜ்யம் என்ற அளவுக்கு வரும் வரையிலோ அல்லது 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்லது மத்திய அரசின் அடுத்த உத்தரவு வரும் வரையிலோ இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, மானிய சமையல் எரிவாயு உருளைகளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள், இரு முறை உயர்த்தின. கடைசியாக ஜூலை மாதம் 1-ஆம் தேதியன்று, மானிய சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.32 வரையிலும் உயர்த்தின. கடந்த 6 ஆண்டுகளில், மிகப்பெரிய அளவில் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்த அதிகப்படியான விலை உயர்வுக்கு, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் ஒரு காரணமாகும்.
தில்லியில் மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது ரூ.477.46 -ஆக உள்ளது. இந்த விலையானது, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.419.18-ஆக இருந்தது. மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது ரூ.564 ஆகும்.
கடந்த ஜூலை மாத நிலவரப்படி, வீடுகளுக்கான மானிய விலை சமையல் எரிவாயு உருளை ஒன்றுக்கு எண்ணெய் நிறுவனங்களால் ரூ.86.54 மானியமாக வழங்கப்பட்டது என்றார் தர்மேந்திர பிரதான்.


* நாடு முழுவதும் மானிய விலை சமையல் எரிவாயு உருளைகளை 18.11 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதில், பிரதமமந்திரி உஜ்வலா யோஜனா திட்டத்தின்கீழ், ஏழை பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 2.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளும் அடங்கும்.
இதுதவிர, 2.66 கோடி பேர், மானியமில்லா சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.*

கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு


அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சமையல் எரிவாயு உருளைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களை ரத்து செய்வதென்று எடுத்துள்ள முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு (2016) ஜூலை மாதத்தில் இருந்து சமையல் எரிவாயு உருளைகளின் விலை குறைந்தபட்சம் 10 தடவையாவது உயர்த்தப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் (ஜூலை) மட்டும் எரிவாயு உருளைகளின் விலை ரூ.32 வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.420-ஆக இருந்த உருளைகளின் விலை தற்போது ரூ.480-ஆக உள்ளது.
தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவானது, சாமானிய மக்களின் சிரமங்களை மேலும் அதிகரிக்கும். ஏனெனில், இதனால் ஏற்படும் விலை உயர்வால் அவர்களின் தினசரி செலவுகள் கணிசமாக அதிகரிக்கும்.
எனவே, மத்திய அரசு தனது முடிவை திரும்பப் பெறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com