காவிரி நீர் மாநிலத்துக்கு ஜீவாதாரமாகத் திகழ்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கு இறுதி விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்தது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. கர்நாடகம், கேரள அரசுகளின் வாதம் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், 11-ஆவது நாளாக திங்கள்கிழமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதி விசாரணை நடைபெற்றது.
அப்போது, தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே ஆஜராகி முன்வைத்த வாதம்:
காவிரி நடுவர் மன்றம் மட்டுமே நதி நீர் பங்கீட்டைத் தீர்மானிக்க முடியும். மாநிலத்தின், மாநில மக்களின் நலன் பாதிக்கப்படும் போதும், பாரபட்சமாக நடத்தப்படும் போதும் இதுபோன்ற பிரச்னைகள் எழுகின்றன. காவிரி நீர் பயன்பாடு, விநியோகம், கட்டுப்பாடு ஆகியவற்றில் ஒப்பந்தத்தின் விதிகளை கர்நாடகம் பின்பற்றவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தின் கதவுகளை 26 முறை தமிழகம் தட்டியுள்ளது. 21 ஆண்டுகளாக தமிழகத்துக்கு நீதி கிடைக்கவில்லை. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காத்து வருகிறது.
காவிரி ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது எனத் தெரிவித்து கர்நாடகம் இஷ்டம் போல நடந்து கொள்கிறது. கர்நாடக அரசே நிதி ஒதுக்கி பாசனத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. காவிரி நதி நீர்ப் பிரச்னையில் கூட்டாட்சி தத்துவத்தை கர்நாடகம் பின்பற்றவில்லை. காவிரி ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாக எடுத்துக் கொண்டாலும், சட்டக் கோட்பாட்டையும், தொழில்நுட்ப தரவுகளையும் ஆராய வேண்டும். இந்த விவகாரத்தில் மதிப்பீட்டாளர்களின் கருத்தும், விமர்சன ரீதியிலான பகுப்பாய்வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. காவிரி நடுவர் மன்றத்துக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் உள்ளது.
இந்த விவகாரத்தில் உத்தரவை காவிரி நடுவர் மன்றம் 2007-இல் பிறப்பித்தது. அந்த உத்தரவை அரசிதழில் வெளியிட மத்திய அரசு 6 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. இந்த விவகாரத்தில் யாருக்கும் பொறுப்புணர்வு ஏற்படவில்லை. நதி நீர்ப் படுகை என்பதை நீரியியல் அலகாகவே எடுத்துக் கொள்ள முடியும். நதி நீரை சம அளவில் பங்கிடும் போது, படுகையின் புவியியல், நீரியியல், சுற்றுச்சூழல் பாதிப்பு, படுகையின் கடந்த கால நீர்ப் பயன்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், இவ்வாறு நீரை சமமாகப் பங்கிடும் பட்சத்தில், மாநிலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் ஜீவாதார நதியாக காவிரி இருந்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் பாசனப் பகுதிகளைக் குறைக்க வேண்டும் எனக் கேட்பதும், நிலத்தடி நீரை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்துக்கு அளிக்கப்படும் நீரை குறைக்கக் கேட்பதும் மாநிலத்தின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். கர்நாடகத்தில் நெல் சாகுபடிக்கு ஏற்ற மண் வளம் இல்லை. இதற்கு ஏற்றாற்போல மானாவாரி பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். இதுபோன்ற புவியியல் கூறுகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றன. காவிரி நதி நீர்ப் பிரச்னை நாட்டிற்கு புதிதான ஒன்றாகும்.
பெங்களூரின் குடிநீர்த் தேவையை ஈடுசெய்ய காவிரியிலிருந்து போதுமான நீரை அளிக்க முடியவில்லை என்று கர்நாடகம் கூறுகிறது. பெங்களூர் மாநகர விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு திட்டங்களையும், குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் கர்நாடக அரசு திட்டமிடவில்லை என்றார் சேகர் நாப்டே.
அவரது வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை வியாழக்கிழமையும் (ஆகஸ்ட் 3) தொடரும் எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.