நெருக்கடியில் காங்கிரஸ்: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சி தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய மிகத் தீவிரமான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
நெருக்கடியில் காங்கிரஸ்: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சி தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய மிகத் தீவிரமான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
"நாம் (காங்கிரஸ்) நமது அணுகுமுறையில் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கா விட்டால் அரசியலுக்கு ஒவ்வாதவர்களாக ஆகிவிடுவோம். இந்தியாவும் மாறி விட்டது என்பதை காங்கிரஸ் உணர வேண்டும். அதற்கேற்ப காங்கிரஸýம் மாற வேண்டும். பழைய கோஷங்களும், பழைய சூத்திரங்களும், பழைய மந்திரங்களும் பயனளிக்காது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ், கேரள மாநிலம், கொச்சியில் பிடிஐ செய்தியாளருக்கு திங்கள்கிழமை பேட்டி அளித்தார். அப்போது, மாநிலங்களவைத் தேர்தலில் அகமது படேலின் வெற்றியை உறுதிசெய்வதற்காகவும், எம்எல்ஏக்களைக் கவர்ந்திழுக்கும் பாஜகவின் அச்சுறுத்தல் காரணமாகவும்தான் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கர்நாடகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்களா? என்று செய்தியாளர் கேட்டார். அதற்குப் பதிலளித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியானது கடந்த 1996 முதல் 2004-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இல்லாமல் இருந்தபோது, தேர்தல் ரீதியிலான நெருக்கடியைச் சந்தித்தது. அதற்கு முன்பு, நெருக்கடி நிலையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்தலில் தோல்வியடைந்தபோதும் இதே போன்ற நெருக்கடியை கட்சி சந்தித்துள்ளது. ஆனால் இன்று, கட்சி தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. காங்கிரஸ் தற்போது தீவிரமான நெருக்கடியில் உள்ளது.
தனது எம்எல்ஏக்கள் 44 பேரை கர்நாடகத்துக்கு அனுப்பி வைப்பது என்ற குஜராத் காங்கிரஸின் முடிவு சரியானதுதான். பாஜகவின் வலைவீச்சு நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாஜகவும் கடந்த காலங்களில் தனது எம்எல்ஏக்களை இவ்வாறு வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
மோடியின் வித்தியாசமான சிந்தனை, செயல்பாடு: தேர்தல்கள் நடைபெறும்போது, பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் மோடி அரசுக்கு எதிரான அலை தானாகவே நல்ல பலனளிக்கும் என்று காங்கிரஸ் நினைத்தால் அது தவறாக இருக்கும். மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் நாம் எதிரானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கின்றனர். வித்தியாசமாக செயல்படுகின்றனர்.

ராகுல் தலைவராக வேண்டும்

அடுத்த ஆண்டில் (2018) பல்வேறு மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என்று நம்புகிறேன்.
அவர் தலைமைப் பொறுப்புக்கு வருவது 2015-இல் நடக்கும் என்றும், 2016-இல் நடக்கும் என்று நான் ஏற்கெனவே நினைத்தேன். ஆனால் அப்போதெல்லாம் அது நடக்கவில்லை. எனினும், 2018-இல் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களும், 2019-இல் மக்களவை பொதுத் தேர்தலும் நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாக, தலைவர் பதவி குறித்த நிச்சயமற்ற தன்மையைப் போக்கி, ராகுல் பொறுப்பேற்க வேண்டும்.
வரும் 2019 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு வலுவான போட்டியை அளிக்கக் கூடிய யாராவது காங்கிரஸில் இருக்கிறார்களா? என்று கேட்கிறீர்கள். மோடியை காங்கிரஸின் கூட்டு பலமும், கூட்டு முயற்சிகளும் எதிர்கொள்ளும் என்று நான் ஏற்கெனவே கூறியுள்ளேன்.
நாம் இன்னும் ஆட்சியில் இருப்பதைப் போலவே காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நடந்து கொள்கின்றனர். அந்தப் போக்கை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com