மே 7-இல் "நீட்' நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 80 நகரங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய பள்ளிக் கல்வி வார
மே 7-இல் "நீட்' நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு
Published on
Updated on
1 min read

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 80 நகரங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்) மற்றும் பல் மருத்துவ (பிடிஎஸ்) படிப்புகளுக்கான இடங்களை "நீட்' தேர்வு மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அத்தகைய நுழைவுத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து, மாணவர் சேர்க்கையில் பழைய நடைமுறையையே பின்பற்ற தமிழகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே, நுழைவுத் தேர்வுகளின்றி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த வகை செய்யும் சட்ட முன்வடிவை தமிழக அரசு சட்டப் பேரவையில் தாக்கல் செய்தது.
இந்தச் சூழலில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான தேதியை சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன்படி, இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டவர் என அனைவரும் இந்தத் தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ள சிபிஎஸ்இ, நுழைவுத் தேர்வில் பங்கேற்பவர்கள் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு விலக்கு உண்டு.
ஜனவரி 31-ஆம் தேதி முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1,500 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ள இந்த நுழைவுத் தேர்வில், 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com