வருமான வரிச் சலுகை; ஏழைகளுக்கு 1 கோடி வீடுகள்

எதிர்வரும் நிதியாண்டுக்கான (2017-18) மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
வருமான வரிச் சலுகை; ஏழைகளுக்கு 1 கோடி வீடுகள்
Published on
Updated on
3 min read

எதிர்வரும் நிதியாண்டுக்கான (2017-18) மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக வருமான வரிவிதிப்பில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏழைகளுக்கு 1 கோடி வீடுகள் புதிதாகக் கட்டித் தரப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதைத்தவிர, விவசாயம், ரயில்வே, சிறு தொழில் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதேவேளையில், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள், செல்லிடப்பேசி உதிரி பாகங்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நான்காவது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார். இதுவரை தனியாகத் தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட், இம்முறை பொது பட்ஜெட்டுடன் ஒருங்கிணைத்து வெளியிடப்பட்டது.
அதேபோல, பிரிட்டீஷார் காலந்தொட்டு பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழைய நடைமுறையை மாற்றி பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

வரிவிதிப்பில் சலுகை: மக்களவை கூடியவுடன், கேரளத்தைச் சேர்ந்த எம்.பி. இ.அகமதுவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு:
வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் இந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேவேளையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு விதிக்கப்படும் வரி விகிதம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர்களுக்கு இதுவரை 10 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டு வந்தது. அந்த விகிதத்தை 5 சதவீதமாகக் குறைப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் பல கோடிப் பேர் பயன்பெறுவர் என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு இத்தகைய வரிச் சலுகைகளை மத்திய அரசு வழங்கிய அதேவேளையில், ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டுவோருக்கு கூடுதலாக 10 சதவீத உபரி வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 15 சதவீத உபரி வரி விதிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறுதொழில் நிறுவனங்கள்: சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான வரிச் சலுகைகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு மிகாமல் விற்றுமுதல் (Turnover) ஈட்டும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 30 சதவீத வருமான வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 6.6 லட்சம் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: நிழல் பொருளாதாரமாக விளங்கும் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் முக்கியமாக, ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர, அரசியல் கட்சிகள், தனிநபரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக நன்கொடை வசூலிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட தொகைகளை காசோலைகளாகவோ, வரைவோலைகளாகவோ அல்லது மின்னணு பணப் பரிவர்த்தனை வாயிலாகவோ மட்டுமே பெற வேண்டும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி, வங்கி அட்டைகள் வாயிலாகவும், ஆதார் சுய விவரங்கள் வாயிலாகவும் பணம் செலுத்துவதற்கான கையடக்க மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, அத்தகைய சாதனங்களை உற்பத்தி செய்வதற்கு விதிக்கப்பட்டு வந்த வரிகள் அனைத்தையும் ரத்து செய்வதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் ஊரக மேம்பாடு: வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் வெளியாகியுள்ளது.
அதன்படி, அடுத்த நிதியாண்டுக்குள் ரூ.10 லட்சம் கோடிக்கு வேளாண் கடன்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்துக்காக ரூ.9,000 கோடியும், நுண் நீர்ப் பாசனத் திட்டத்துக்காக ரூ.5,000 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ஊரக - வேளாண் துறை மேம்பாட்டுக்காக ரூ.1,87,223 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது நிகழ் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டைக் காட்டிலும் 24 சதவீதம் அதிகமாகும்.
ஏழைகளுக்கு 1 கோடி வீடுகள்: உறைவிட வசதியில்லாத ஏழை மக்களுக்கு புதிதாக 1 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தை வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு ரூ.64,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறை அறிவிப்புகள்: ரயில்வே துறையில் அதிக அறிவிப்புகள் வெளியாகாவிடினும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பயணிகள் பாதுகாப்பு நிதிக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்குவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, ரயில்வே துறையை மேம்படுத்தவும், நவீனமயமாக்கவும் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி உயர்வைப் பொருத்தவரையில் புகையிலை, சிகரெட், செல்லிடப்பேசியில் பயன்படுத்தப்படும் பிரிண்டட் சர்க்கியூட் போர்டு ஆகியவை மீதான வரிவிதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் பான் மசாலா பொருள்கள், சிகரெட்கள், புகையிலைப் பொருள்கள் மற்றும் செல்லிடப்பேசிகளின் விலை உயரும்.
முன்னதாக, மக்களவையில் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கியபோது, அகமதுவின் மறைவையொட்டி அவையை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்கள் அமைதியாகி பட்ஜெட் தாக்கல் செய்ய ஒத்துழைத்தனர். மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் பட்ஜெட்டை ஜேட்லி தாக்கல் செய்தார்.

முக்கிய அம்சங்கள்

ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 5 சதவீதமாக குறைப்பு. எனினும், வருமான வரி விலக்கு உச்ச வரம்புகளில் எந்த மாற்றமும் இல்லை.
ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத உபரி வரி.
ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீத உபரி வரி.
நாடு முழுவதும் ரூ.3 லட்சத்துக்கு அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு தடை.
ஆண்டுக்கு ரூ.50 கோடி வரை விற்றுமுதல் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கான வருமான வரி 25 சதவீதமாக குறைப்பு.
திரவ நிலை இயற்கை எரிவாயு (எல்என்ஜி) மீதான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைப்பு.
அரசியல் கட்சிகள் இனி ரூ.2,000க்கு மேலான நன்கொடைகளை ரொக்கமாக பெற முடியாது. அதற்கு பதிலாக, காசோலைகள், மின்னணு வழிமுறைகள் மற்றும் ஆர்பிஐ-யால் வெளியிடப்படும் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடைகளை பெறலாம்.
மூத்த குடிமக்களுக்கு, ஆதார் அடிப்படையிலான உடல்நல அட்டைகள் மற்றும் 8 சதவீத உத்தரவாத வட்டியுடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
2017-18ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும். அதற்கடுத்த ஆண்டில் இது 3 சதவீதமாக இருக்கும்.
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணம் கிடையாது.
ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக ரூ.1 லட்சம் கோடியில் தனி நிதியம். வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் ஆளில்லா கடவுப்பாதைகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்.
2017-18 நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும். விவசாயிகளின் வருமானத்தை, 5 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடிக்கு விவசாயக் கடன் வழங்க இலக்கு.
உள்கட்டமைப்புத் துறையில் ரூ.3.96 லட்சம் கோடிக்கு முதலீடு செய்யப்படும்.
பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் நலத்திட்டங்களுக்கு ரூ.31,920 கோடி, சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு ரூ.4,195 கோடி ஒதுக்கீடு.
ஊரக மேம்பாடு, விவசாயம், அதுசார்ந்த துறைகளுக்காக ரூ.1.87 லட்சம் கோடி ஒதுக்கீடு.
வீடில்லாதவர்களுக்காக 2019-ஆம் ஆண்டுக்குள் 1 கோடி புதிய வீடுகள் கட்டப்படும்.
2018, மே மாதத்துக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

விலை உயரும்

  • சிகரெட், பீடி பான் மசாலா, புகையிலைப் பொருள்கள்
  • செல்லிடப்பேசிகள்
  • எல்இடி விளக்குகள்
  • அலுமினியப் பொருள்கள்
  • கண்ணாடி இழை கேபிள்களில் பயன்படுத்தப்படும் பொருள்கள்
  • வெள்ளி நாணயங்கள் மற்றும் பதக்கங்கள்

விலை குறையும்

  • இணையவழி ரயில்வே டிக்கெட்டுகள்
  • குடிநீர் சுத்திகரிப்பு (ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ்) சாதனங்கள்
  • சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனத்துக்கான கண்ணாடித் தகடுகள்
  • காற்றாலை மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள்
  • பணம் செலுத்துவதற்கான கையடக்க மின்னணு இயந்திரங்கள் (பிஓஎஸ்)
  • பாதுகாப்புப்  படையினருக்கான குழு காப்பீட்டுத் திட்டங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com