2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடுத்த வழக்கில் அதன் சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடுத்த வழக்கில் அதன் சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்.
2ஜி அலைக்கற்றை வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்களுக்கு சிபிஐ தரப்பு வாதத்தை சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் முன்வைத்து வருகிறார்.
இதையொட்டி, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆனந்த் குரோவர் ஆஜராகி, "அலைக்கற்றை ஒதுக்கீடுக்காக தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை ஆ.ராசா சரிவர கடைப்பிடிக்கவில்லை. அலைக்கற்றை எவ்வளவு உள்ளது? என்பதை முறைப்படி ஆராயாமல் தன்னிச்சையாக ராசா எடுத்த நடவடிக்கையால்தான் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, "யூனிடெக்' நிறுவனத்துக்கு சாதகமாக உரிமம் வழங்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டு அதற்கு சாதகமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டை மேற்கொள்ள ராசா நடவடிக்கை எடுத்தார்' என்று குறிப்பிட்டார்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான ஆ.ராசா, ஆனந்த் குரோவரின் குற்றச்சாட்டுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். "அலைக்கற்றை எவ்வளவு உள்ளது என்பதை அறிந்த பிறகுதான் அதை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சட்டத்தை வளைக்கும் வகையில் தீவிரமாக நீங்கள் வாதிடலாம். ஆனால், நீதிமன்றத்துக்கு உள்ளே கோப்பில் உள்ள விவரத்தை மறைக்கும் வகையில் தவறான தகவலைத் தெரிவித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்காதீர்கள்' என்று ராஜா குறிப்பிட்டார்.
இதையடுத்து, "எனக்கே சட்டம் பற்றி போதிக்க முயற்சிக்கிறீர்களா? நான் ஒரு நேர்மையான வழக்குரைஞர்' என்று ஆனந்த் குரோவர் கூறினார். இதற்குப் பதிலளித்த ராசா, "நீங்கள் பெரிய நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக இருக்கலாம். நானும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்குரைஞர் தொழிலை செய்து வந்தவன். அதற்காக எனக்கு எதிராக நீங்கள் கண்மூடித்தனமாக முன்வைக்கும் பொய்யான தகவலை "சரி' என்று என்னால் எவ்வாறு அனுமதிக்க முடியும். குற்றம்சாட்டப்பட்டுள்ளவன் என்ற முறையில் எனது தரப்பு விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த வழக்கு தொடர்புடைய கோப்பிலேயே ஐந்து இடங்களில் முறைப்படி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு முன்பு அதன் அளவு குறித்து ஆராய்ந்த விவரம் உள்ளது. முறையாக வழக்கின் கோப்பை படிக்காமல் பொய் உரைத்தால் அதை ஏற்க முடியாது' என்றார்.
இதையடுத்து, ஆனந்து குரோவர் "எனக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கக் கூடாது' என்றார். இதைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி சைனி தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார். இந்த வழக்கில் ராசாவுக்கு வாய்ப்பு வரும் போது அவர் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறி, வழக்கின் அடுத்த விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com