சென்னை உள்ளிட்ட 5 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்: 35 நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை

சென்னை உள்ளிட்ட 5 உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய நீதிபதிகளை நியமிப்பதற்காக 35 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலிஜீயம்) பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 5 உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய நீதிபதிகளை நியமிப்பதற்காக 35 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலிஜீயம்) பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து, அந்த பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜீயத்தின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
சென்னை, கர்நாடகம், கேரளம், ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய 5 மாநில உயர் நீதிமன்ற கொலிஜீயம் அமைப்புகள், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு 35 நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளன. 35 பேரில் பெரும்பாலானோர், கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியாற்றியவர் ஆவர்.
இந்த 35 பேரின் பின்னணி குறித்த விவரத்தை புலனாய்வுத் துறை மூலம் ஆய்வு செய்த மத்திய சட்ட அமைச்சகம், உச்ச நீதிமன்ற கொலிஜீயம் அமைப்பின் ஒப்புதலுக்காக அந்த பட்டியலை அனுப்பி வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற கொலிஜீயம் அமைப்பு ஒப்புதல் அளித்தால், 5 மாநில உயர் நீதிமன்றங்களில் இவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.
மத்திய சட்ட அமைச்சகத்திடம் இருக்கும் புள்ளிவிவரத்தில், கடந்த 1ஆம் தேதி நிலவரப்படி, சென்னை, கர்நாடகம், கேரளம், ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய 5 உயர் நீதிமன்றங்களில் 97 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
நாடு முழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில், மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 1,079 ஆகும். ஆனால் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பதாலும், அந்த இடங்களில் புதிய நீதிபதிகளை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாலும் தற்போது 24 உயர் நீதிமன்றங்களில் 665 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதிகள் பணியிடங்களில் புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் அதிகப்பட்சமாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 126 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமிக்க
வேண்டும் - கேஹர் பரிந்துரை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தனது பதவி ஓய்வுக்குப் பிறகு, தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவை தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவைடகிறது. இதையடுத்து, அந்தப் பதவியில் எந்த நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யும்படி கேஹருக்கு மத்திய சட்ட அமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு மத்திய சட்ட அமைச்சருக்கு ஜே.எஸ். கேஹர் தனது பதிலை தெரிவித்துள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தில் தனக்கு அடுத்து மிகவும் மூத்த நீதிபதியான தீபக் மிஸ்ராவை தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று கேஹர் பரிந்துரை செய்துள்ளார். மேற்கண்ட தகவலை மத்திய சட்ட அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கேஹருக்குப் பிறகு, தீபக் மிஸ்ராவே மூத்த நீதிபதியாவார். அவருக்கு தற்போது 63 வயது ஆகிறது. அவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com