நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு "நீட்' போன்ற தேர்வை நடத்த வேண்டும்

கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு, "நீட்' போன்ற தேர்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது.
நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு "நீட்' போன்ற தேர்வை நடத்த வேண்டும்

கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு, "நீட்' போன்ற தேர்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது.
மத்திய அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் ஒன்று, நாடு முழுமைக்கும் கீழமை நீதிமன்றங்களில் 4,452 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கிறது. நாடு முழுமைக்கும் இருக்கும் கீழமை நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 20,502 ஆகும். ஆனால், 16,050 பேரே தற்போது பணிபுரிந்து வருகின்றனர் என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற பொதுச் செயலருக்கு மத்திய சட்ட அமைச்சகத்திலுள்ள செயலர் (நீதித்துறை) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மருத்துவ பட்டப்படிப்பு, மருத்துவ மேல்படிப்பு ஆகியவற்றுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) நடத்துகிறது. நீட் தேர்வைத் தொடர்ந்து, நுழைவுத் தேர்வு நடத்துவது, அதன் முடிவை வெளியிடுவது, அனைத்து இந்திய ரேங்க் பட்டியலை வெளியிடுவது ஆகியவற்றையும் சிபிஎஸ்இ மேற்கொள்கிறது. எனவே, கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு "நீட்' போன்ற தேர்வை நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ், ஆள் தேர்வு அமைப்பின் மூலமாக, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்தலாம். நீதிபதிகளை தேர்வு செய்வதற்கானத் தேர்வை நடத்துமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும் (யுபிஎஸ்சி) உச்ச நீதிமன்றம் கேட்கலாம். வங்கி மற்றும் பணியாளர் தேர்வு சார்ந்த அமைப்பு பின்பற்றும் நடைமுறையை நீதிபதிகள் தேர்வுகளுக்கு பின்பற்றலாம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் சுமார் 3 கோடி வழக்குகள் தேக்கமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு பிரதிநிதிகள், உச்ச நீதிமன்ற பிரதிநிதிகள் கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி சந்தித்துப் பேசினர்.
அப்போது காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்களில் நீதிபதிகளை நியமித்து, தேக்கமடைந்திருக்கும் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பது குறித்து ஆலோசித்தனர். அதன் தொடர்ச்சியாகவே, உச்ச நீதிமன்றத்தின் பொதுச் செயலருக்கு மத்திய சட்ட அமைச்சகத்தின் செயலர் (நீதித்துறை) கடிதம் அனுப்பியுள்ளார்.
கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளைத் தேர்வு செய்ய தற்போது மாநில உயர் நீதிமன்றங்கள், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவையே தேர்வுகள் நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com