ஆதார் இல்லை என்றால்.. புதிதாக சிம் கார்டு கூட வாங்க முடியாதாம்!

புதிதாக சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால்,  அடையாள அட்டையாக ஆதார் கார்ட்டை இணைக்க வேண்டும். இல்லையென்றால் சிம் கார்டு கிடையாது. 
ஆதார் இல்லை என்றால்.. புதிதாக சிம் கார்டு கூட வாங்க முடியாதாம்!


சென்னை: புதிதாக சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால்,  அடையாள அட்டையாக ஆதார் கார்ட்டை இணைக்க வேண்டும். இல்லையென்றால் சிம் கார்டு கிடையாது. 

அது மட்டும் அல்ல, நாம் பயன்படுத்தும் செல்போன் எண் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகும் தொடர்ந்து நீடிக்கவும், ப்ரீபெய்ட் எண்ணை போஸ்ட் பெய்ட் எண்ணாக மாற்றவும் கூட ஆதார் எண் மிக மிக அவசியம்.

பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பலவும் அடையாள அட்டையாக ஓட்டுநர் உரிமம், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்றுக் கொண்டு சிம் கார்டு கொடுப்பதை குறைத்து வருகிறது.

அதே போல, செல்போன் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்து வருவதையும் காண முடிகிறது.

அதாவது, தங்களது தனிப்பட்ட விவரங்களை செல்போன் சேவை மையங்களிடம் பகிர்ந்து கொள்வதை விட, தங்களது செல்போன் எண்கள் முடக்கப்படுவதுதான் மிக மோசமான விஷயமாக அனைவருமே கருதுகின்றனர்.

அதையும் மீறி, செல்போன் சேவை மையங்களுக்கு எங்களது ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் என்ன என்று சில வாடிக்கையாளர்கள் கேட்டாலும், "இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு" என்று தான் பதில் வருகிறது.

என்னிடம் ஆதார் எண் இல்லை, அதே சமயம் எனக்கு புதிய சிம் கார்டு தேவைப்படுகிறது. ஆனால், எனக்கு சிம் கார்டு கிடைக்கவில்லை. சிம்கார்டை கொடுத்தால் ஆதார் எண் வந்த பிறகு இணைத்து விடப் போகிறேன். இதில் என்ன கஷ்டம் இருக்கிறது என்று தெரியவில்லை என்கிறார் சென்னை வேப்பேரியை சேர்ந்த இளைஞர்.

எனது செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. ஆனால், எல்லோரும் செய்யும் போது நானும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறேன் என்கிறார் பொதுமக்களில் ஒருவர்.

இந்த புதிய திட்டத்தால் வாடிக்கையாளர்களைப் போலவே, தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இந்தியாவில் மட்டும் பல லட்சம் சிம்கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். நிச்சயமாக இதனால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை என்கிறார் ஏர்டெல் அதிகாரி எஸ். சுவாமிநாதன்.

ஏற்கனவே, டேட்டாக்களுக்கான கட்டணம் சரிந்திருப்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் அதிருப்தியில் உள்ளன. தற்போது இது மேலும் சங்கடத்தையே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இதுபோன்ற சமயங்களில், நீண்ட நேரம் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எங்களை மிரட்டுகிறார்கள், திட்டுகிறார்கள். இதனால் நாங்கள் ஒரு அச்சத்துடனேயே வேலை செய்கிறோம் என்கிறார் தாம்பரம் அடுத்த சேலையூரில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியர்.

செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவ்வளவு சீக்கிரம் நடக்காது. அது கணினி மற்றும் இணையத்தின் வேகத்தைப் பொருத்தது. அதோடு, சில சமயங்களில் ஆதார் எண்ணில் இருக்கும் கை ரேகை சில வாடிக்கையாளர்கள் செல்போன் சேவை மையங்களில் அளிக்கும் ரேகையோடு ஒத்துப் போவதும் இல்லை. இதனால், பல நேரங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்களில் கூட்டம் அதிகரிப்பதும், வாக்குவாதங்கள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது.

2015ம் ஆண்டு முதலே ஆதார் அட்டை அவசியம் என்பது சூடுபிடிக்கத் தொடங்கி, தற்போது வங்கி கணக்குத் தொடங்க முதல் சிம்கார்டு வாங்க என்பது வரை நீண்டு கொண்டிருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே தனது சேவையை தொடங்கிய முதல் நாளில் இருந்தே சிம்கார்டு பெற ஆதார் அட்டை அவசியம் என்பதை கட்டாயமாக்கி தனது வேலையை எளிதாக்கிக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com