

சிவசேனை வேட்பாளர் விஸ்வநாத் மகாதேஷ்வர் பிருஹன் மும்பை மாநகராட்சியின் புதிய மேயராக வார்டு உறுப்பினர்களால் புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
பிருஹன் மும்பை, புணே, தாணே உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றது. எனினும், மும்பையில் சிவசேனை அதிக இடங்களை கைப்பற்றியது. இருப்பினும், அக்கட்சியின் வேட்பாளர் மேயராக வேண்டுமானால் மற்றொரு கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது.
ஏற்கெனவே மத்திய அரசிலும், மகாராஷ்டிர அரசிலும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனை, மாநகராட்சித் தேர்தலில் மட்டும் கூட்டணி அமைத்துக் கொள்ளாமல் தனித்துப் போட்டியிட்டது. எஞ்சியுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கொள்கை ரீதியாக முரண்பாடு கொண்டிருப்பதால், மேயர் பதவிக்கு அக்கட்சிகள் சிவசேனைக்கு ஆதரவளிக்க வாய்ப்பில்லாத சூழல் நிலவி வந்தது.
இந்த நிலையில், மும்பை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு பாஜக போட்டியிடாது என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, சிவசேனை வேட்பாளருக்கு பாஜக ஆதரவு கிடைப்பது உறுதியானது.
புதிய மேயரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு பிருஹன்
மும்பை மாநகர மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மகாதேஷ்வரை எதிர்த்து மேயர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விட்டல் லோகரே வெறும் 31 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.
பாஜக உறுப்பினர்களின் ஆதரவுடன் மகாதேஷ்வர் 171 வாக்குகளைப் பெற்று புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
மகாதேஷ்வர் மும்பை மாநகராட்சியின் 76-ஆவது மேயர் ஆவார். 56 வயதாகும் இவர், மும்பை மாநகராட்சியின் கல்விக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.
சிவசேனை வேட்பாளார் ஹேமங்கி ஒர்லிக்கர் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, புதிய மேயரை தேர்வு செய்வதற்காக அவையில் உறுப்பினர்கள் ஒன்று கூடியபோது பாஜக உறுப்பினர்கள் "மோடி-மோடி' என்ற கோஷம் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.