தில்லியில் போராட்டம்: தமிழக விவசாயிகளுக்கு வைகோ நேரில் ஆதரவு
தில்லியில் கடந்த 14-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆதரவு தெரிவித்தார்.
விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; அனைத்து நதிகளையும் நீர்வழிப் பயணத் திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும்; விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வைகோ ஆதரவு: இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
வறட்சியாலும், கடன் சுமையாலும் இதுவரை 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க ரூ.39,565 கோடி, வர்தா புயல் நிவாரணத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும் என்று மாநில அரசு கோரியது. ஆனால், கேட்ட தொகையில் 4 சதவீதத்தை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
ஆந்திர மாநிலமும் வறட்சி நிவாரணம் கேட்டது. அந்த மாநிலத்துக்கு கேட்ட தொகையில் 25 சதவீதத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது. பாஜகவும், தெலுங்கு தேசமும் கூட்டணி வைத்திருப்பதால் இதுபோன்ற அணுகுமுறையா? உத்தர பிரதேசத்துக்கு ஒரு நீதி, ஆந்திரத்துக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா?
"வறட்சி நிவாரணத்துக்காக தமிழக அரசு கோரிய நிதியை அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நதிகள் இணைப்புக்காக சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்த ஒரே நபர் நான்தான் என்றார் வைகோ.
பதிலளிக்க மறுப்பு: இதைத் தொடர்ந்து, ஆங்கில ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் சிலர் நடிகர் ரஜினி காந்த் இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளது குறித்து வைகோவிடம் கருத்து கேட்டனர்.
அப்போது அவர் கூறுகையில், "இலங்கை விவகாரத்தை இங்கு கொண்டுவர வேண்டாம். உங்களது கேள்விக்கு பதில் அளிக்கமாட்டேன். இங்குள்ள விவசாயிகளை பிரதமரின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

