சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களும்,
சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை


சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களும், அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், சபரிமலை தொடர்பான தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 
கேரள மாநிலம், சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வில், பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். 4:1 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இத்தீர்ப்பை, பெண்ணியவாதிகள் சிலர் வரவேற்றனர். அதேவேளையில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை சபரிமலையில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, ஐயப்ப பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீர்ப்புக்கு பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டபோது, சில பெண்கள் வழிபடுவதற்காக வந்தனர். எனினும், பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனிடையே, சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சேவை சமூகம் அமைப்பு உள்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தமாக 48 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை பரிசீலித்தது. வழக்குரைஞர்கள் யாருமில்லாமல், நீதிபதி அறையிலேயே இப்பரிசீலனை நடைபெற்றது. இதையடுத்து நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், சபரிமலை தீர்ப்புக்கு எதிரான அனைத்து மறுஆய்வு மனுக்களும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள இதர மனுக்களும், உரிய அமர்வு முன் ஜனவரி 22-ஆம் தேதி விசாரிக்கப்படும். அதேவேளையில், கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எந்த தடையும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க, உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 9-ஆம் தேதி மறுத்துவிட்டது.

தந்திரி வரவேற்பு
சபரிமலை தீர்ப்புக்கு எதிரான அனைத்து மறுஆய்வு மனுக்களும் ஜனவரி 22-இல் முறைப்படி விசாரிக்கப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவிப்புக்கு, ஐயப்பன் கோயிலின் தந்திரி கண்டரரூ ராஜீவரு வரவேற்பு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு பின்னால், ஐயப்பனின் ஆசியும், பக்தர்களின் வேண்டுதலும் உள்ளன என்றார்.

சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு இடைக்கால தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், மண்டல-மகரவிளக்கு பூஜைகளின்போது அந்த தீர்ப்பு அமல்படுத்தப்படுமா? என்று கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு, இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

நல்ல முடிவு
மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறுகையில், உச்சநீதிமன்றம் நல்லதொரு முடிவை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த கேரள மக்களும் ஓரணியில் உள்ளனர். ஜனநாயகத்தில் மக்களே மிக உயர்ந்தவர்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com