1. மண்டோதரி

பராக்கிரம சாலியும், யாழிசைப்பதில் வல்லவனும் மிகச் சிறந்த சிவ பக்தனுமான ராவணின் மனைவியாக நமக்கு அறிமுகமாகிறாள் மண்டோதரி.
1. மண்டோதரி

பராக்கிரம சாலியும், யாழிசைப்பதில் வல்லவனும், மிகச் சிறந்த சிவ பக்தனுமான ராவணின் மனைவியாக நமக்கு அறிமுகமாகிறாள் மண்டோதரி. ராவணனுக்கு சற்றும் சளைத்தவள் அல்ல இந்த மாதரசி. சிறந்த சிவ பக்தனும் யாரும் வெல்ல முடியாத வீராதி வீரனுமாகத் திகழ்ந்தான் ராவணன். ஆனால் தன் சகோதரியின் வேட்கையால், பிறன்மனை விழைந்து, தன் சுய மதியை இழந்து, அருமை பெருமைகளையெல்லாம் துறந்து மாண்டு போனான். ஒரு குடம் நிறைய பால் இருந்தாலும், ஒரு துளி விஷம் போதுமே அக்குடம் முழுவதும் பாழாக.

இக்காலத்தைப் போலல்லாது, அன்று பெண்கள் தம் தகப்பனாரைக் கொண்டோ அல்லது கொண்ட கணவனைக் கொண்டு தான் பெயர் அறியப்படுவார்கள். ராமாயணத்தில் ராமனின் மனைவி என்பதாலும் சீதை அனைவராலும் இன்றும் அறியப்பட்டவளாகிறாள். நாயகனின் புகழ் ஓங்க எதிராளி ஒருவரின் இருப்பு தேவைப்படுகிறது இல்லையா? எதிர் நாயகனின் மனைவியை யாரேனும் தெரிந்து கொள்ள விரும்புவார்களா? போலவே மண்டோதரி எனும் சிறந்த பெண்மணியை, ஒழுக்கத்தில், கற்பில் சிறந்தவளை சீதையைக் கொண்டாடும் உலகம் அறிய மறுத்து வருகிறது.

மயன் எனும் தேவதச்சனின் மகளாகப் பிறந்தவள் மண்டோதரி. சிறந்த சிவபக்தையாக திகழ்ந்த மண்டோதரி அழகியாகவும், செல்வ வளம் பொருந்தியவளாகவும் வளர்க்கப்பட்டாள். ராவணன் இலங்கையை மிக அழகானதொரு நகரமாக உருவாக்கிட எண்ணி மயனை அணுகினான். அங்கே அடக்கமும் அழகும் பொருந்திய மண்டோதரியிடம் மனத்தைப் பறி கொடுத்து, மயனின் சம்மதத்துடன் அவளை மணந்து கொண்டான் ராவணன். அசுர குலத்தில் அவதரித்தவளாயினும் சிவ பக்தையாக, தன் கணவனுக்கு சிறந்த துணையாக, பதிவிரதா தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்து வந்தாள் மண்டோதரி. இவளுடைய பதிவிரதத்தின் காரணமாகத் தான் அசுரகுணம் கொண்ட ராவணன், பல்வேறு தவறான செயல்களைச் செய்தபோதும் அதற்கான தண்டனைகளில் இருந்து காப்பாற்றபட்டான் என செவி வழிக் கதைகள் பலவற்றில் கூறப்படுகிறது. மண்டோதரியால் ராவணனுக்கும் பெருமை சேர்ந்தது.

ஸ்ரீராமனின் மனைவி சீதையை தன் கணவன் சிறையெடுத்து வந்ததையறிந்த மண்டோதரி அளவில்லா துயரினுள் ஆழ்ந்தாள்.  ராவணனிடம் இது அறமல்ல, மீண்டும் ராமனிடமே சீதையை ஒப்படைக்கும்படி பல வழிகளில் அறிவுறுத்திப் போராடினாள். விதி வலிது அல்லவா? எளியவர்களின் சொற்கள் அம்பலம் ஏறுமா? மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை உள்ளிட்ட இச்சைகளை அடைய முறையற்ற வழிகளைப் பின்தொடர்ந்து செல்லும் அதர்மம் எக்காலத்திலும் இருந்தவொன்றுதானே? மண்டோதரியின் சொற்கள் யாவும் ராவணின் காதில் விழுந்ததே தவிர மனத்தை எட்டவில்லை. தன் கணவன் என்ன செய்தாலும் சரி என்று ஏற்காமல், தனக்கென்ன என்று விலகியும் செல்லாமல், அவன் உடனிருந்தே அவன் மனத்தை மாற்ற முயன்றவள் மண்டோதரி. தன் கணவன் வீரத்துக்குப் பெயர் போனவன் ஆயினும் அறத்துக்குப் புறம்பாக நடப்பதை சகியாதவள் அப்பேதைப் பெண்.

மண்டோதரி எனும் சொல்லுக்கு மெல்லிய (மிருதுவான) வயிற்றை உடையவள் என்று பொருளாம். அவள் மனதும் கூட மென்மையானது தான். அதனால் தான் தன் கணவன் என்றாலும் தன்னையொத்த பெண்ணான சீதைக்கு அவன் செய்த தீங்கையும், அதனால் சீதை அடைந்த சொல்லொண்ணாத்  துயரையும் அவளால் தாள முடியவில்லை. தன்னால் இயன்றவரை கணவனுக்கு புத்தி புகட்ட முயன்றாள்.

சீதாதேவியைத் தேடிவந்த அனுமன் கூட ராவணனின் அந்தப்புரத்தில் மண்டோதரியைப் பார்த்தவுடன் இவள்தான் சீதாதேவியோ எனத் தவறாக எண்ணி விட்டான் என வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடுகிறார். அத்தகைய மேன்மை பொருந்தியவளும், அறவழி நடப்பவளுமான மண்டோதரி தன் கணவனுக்காக நிறையவே தியாகம் செய்கிறாள். பெற்ற  மகன்களை கொடும் போரில் ஒருவர் பின் ஒருவராக இழக்கிறாள். தான் அப்பழுக்கற்றவளாக இருந்த போதிலும், கணவனின் தகாத செயல் தனக்கும் அவப்பெயரை வாங்கித் தரும் என்பதையும் பொறுத்துக் கொண்டாள்.

போரில் வெற்றி பெற  ராவணன் பெரும் யாகத்தை நடத்துகிறான். அதைக் கலைக்க வானரப் படைகள் முயற்சி செய்தும் சற்றும் கலங்காமல் யாகத்தை தொடர்கிறான் ராவணன். அச்சமயத்தில் அங்கதன் ராவணனை திசை திருப்ப மண்டோதரியின் கூந்தலைப் பற்றி ராவணன் முன்பே இழுத்துச் செல்கிறான். அவனைக் கடக்கும் போது மண்டோதரி ‘நீ சீதையை  இழுத்து வந்தது போல் உன் மனைவியாகிய என்னை அங்கதன் இழுத்துச் செல்கிறான் பார்’ என்றாள். அதைக் கண்ட ராவணன், யாகத்தை தொடர முடியாமல் தாளொன்னாத கோபத்துடன் அங்கதனை கொன்றுவிடத் துடித்தபடி அவன் பின்னே ஓடுகிறான். வந்த காரியம் நிறைவேறிய திருப்தியில் அங்கதன் அவன் கைக்கு அகப்படாமல் தப்பித்து ஓடுகிறான்.

தான் செய்த தவறை கணவன் உணர வேண்டும் என்பதற்காக அங்கதனின் பிடியில் சிக்கி தன்னைத் தானே வருத்திக் கொண்ட மாதர் குல மாணிக்கம் மண்டோதரி. பின்னர் போர்க்களத்தில் கணவன் இறந்து கிடப்பதை காணச் சகியாத மண்டோதரி இவ்வாறு புலம்புகிறாள்.

ஆகப் பெரும் பாராக்கிரம சாலியான உன்னை  ஒரு சாதாரண மனிதனின் அம்பு வீழ்த்தியதா? அவ்வாறு  வீழ்த்தவும் முடியுமோ ? வரம் வாங்கி வந்த கணவனை யாராலும் வீழ்த்திவிட முடியாது என்றது அவளது மூளை. ஆனால் வீழ்த்தியது ராமனின் அம்பு அல்ல ராவணன் செய்த தவறுகளே என்றுணர்கிறது அவள் புத்தி. தன் கணவனின் மரணத்திற்கு காரணம் ராமனின் வீரம் மட்டுமல்ல  சீதையின் பேரழகும், சீதையின் கற்பும், ராவணன் அவள் மேல் கொண்ட மோகமும், சூர்ப்பனகை இழந்த மூக்கும், தசரதன் போ என்று ராமனிடம் கூறிய சொல்லும் எல்லாம் சேர்த்துதான் இந்திரனின் தவத்திற்கு துணை நின்று ராவணனை கொன்று விட்டது என்கிறாள் மண்டோதரி.

கீழ்க்கண்ட பாடலில் வரிகளில் இதை அறிய முடிகிறது.

'காந்தையருக்கு அணி

அனைய சானகியார் பேர் அழகும்,

அவர்தம் கற்பும்

ஏந்து புயத்து இராவணனார் காதலும்

அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்

வேந்தர் பிரான்  தயரதனார்

பணியதனால் வெங் கானில்

விரதம் பூண்டு போந்ததுவும்

கடைமுறையே

புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!

என்று ராவணனின் உடல் மேல் விழுந்து புலம்புகிறாள்.

அந்தத் தருணத்திலும் தன் கணவனை தவறாக எண்ணாதவளாகவும், விட்டுக் கொடுக்காதவளாகவும் திகழ்கிறாள். கணவன் இன்னொரு பெண்ணை விரும்புகிறான் என்றால், எந்தப் பெண்ணும் அதை காமமாகத்தான் பார்ப்பாள்.  ஆனால் மண்டோதரி, ராவணன் சீதை மேல் கொண்டது காதல் என்கிறாள். ராவணனுக்கு மிக நெருங்கியவள், புத்திசாலி அவள். காமத்தினால் தன் கணவன் சீதையை அணுகவில்லை அவள் மேல் கொண்ட காதலாலே எனச் சொல்லி மரணத்திலும் களங்கத்தை தன் கணவனுக்குச் சேர்க்க விரும்பாதவளாகிறாள் மண்டோதரி.

பலவாறு புலம்பி அழுது துக்கம் தாளாமல் ராவணனின் மார்பினைத் தன்னுடைய பூப்போன்ற கரங்களால் தழுவிக் கொண்டே அவன் மீது வீழ்ந்து உயிர் நீத்தாள் மண்டோதரி. சிறந்த சிவ பக்தை, பண்பானவள், சத்தியம் மாறாதவள், பிறருக்கு கனவிலும் தீங்கு நினையாதவள்  என எண்ணற்ற நற்குணங்கள் கொண்டிருந்த போதும், தனது கணவனின் தீய குணத்தினால் மிகத் துயரமானதொரு முடிவை அடைந்தாள். சீதைக்கு நிகராக இருந்த போதிலும், மண்டோதரியின் நற்குணங்களை அறியப்படாமல் போனது ராவணின் துரதிர்ஷ்டம் மட்டுமன்று கால காலமாக வாழ்ந்தும் மறைந்தும் விட்ட எண்ணற்ற பெண் சக்திகளின் ஒட்டுமொத்த துயரம் எனலாம்.

இசைக்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com