இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பாருங்கள் இந்தியா தெரியும்: ராகுலுக்கு அமித்ஷா அறிவுரை

இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரியும் என்று ராகுல்காந்திக்கு பாஜக
இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பாருங்கள் இந்தியா தெரியும்: ராகுலுக்கு அமித்ஷா அறிவுரை
Updated on
1 min read

ராய்ப்பூர்: இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரியும் என்று ராகுல்காந்திக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ராமன்சிங் தலைமையிலான பாஜக அரசின் 13-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, அம்மாநில தலைநகரான ராய்ப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது:
பிரதம்ர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக என்ன செய்திருக்கிறது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார். அவருக்கு முதலில் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
நாங்கள் பேசக்கூடிய பிரதமரை தந்திருக்கிறோம். நீங்கள் நாட்டுக்கு தந்த பிரதமர்(மன்மோகன்சிங்) குரலை நாட்டு மக்கள் கேட்டதே இல்லை. அவரது குரல் உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் (சோனியா) மட்டுமே தெரியும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முந்தைய மத்திய அரசின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தின் போது சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றன. எங்கள் தலைமையிலான பாஜக அரசின் மீது எதிர்க்கட்சிகளால் இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட சுமத்த முடியவில்லை.
அந்த அளவுக்கு தூய்மையான, வெளிப்படையான ஆட்சியை நாங்கள் வழங்கி வருகிறோம்.
மக்களின் பிரச்சினைகளை தனது பிரச்சினையாக ஏற்று செயல்படக்கூடிய பிரதமரை நாங்கள் தந்திருக்கிறோம். எங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஏழை, எளியவர்களுக்கு நன்மை தரும் 92 நலத்திட்டங்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.
சமீபகாலம் வரை கருப்புப்பணத்துக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று எங்களைப் பார்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
ஆனால், நவம்பர் மாதம் 8-ஆம் தேதிக்கு பிறகு இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை ஏன் எடுத்தீர்கள் என்று கேட்க தொடங்கி விட்டனர்.
கடந்த 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வேரூன்றிப் போன கருப்புப்பணத்துக்கு ஒரேயொரு அதிரடி நடவடிக்கையின் பிரதமர் மோடி முடிவு கட்டியுள்ளார். இதன்மூலம் லஞ்சம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கருப்புப்பணத்துக்கு எதிரான இந்தப்போர் இனியும் தொடரும்.
இந்த நடவடிக்கையின் மூலம் கிடைக்கும் பணம் விவசாயிகள், தலித்மக்கள், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காக செலவிடப்படும்.
கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசு என்ன செய்திருக்கிறது? எங்களைப் பார்த்து ராகுல்காந்தி கேட்கிறார். ஓய்வுக்காக அதிக நாட்களை செலவிடுவதால் உங்களால் நாட்டில் நடக்கும் நல்ல செய்திகளை அறிந்துகொள்ள முடிவதில்லை.
அதுமட்டுமின்றி, நீங்கள் அணியும் மூக்கு கண்ணாடி (கூலிங்கிளாஸ்) இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்டது. அதை கழற்றி வைத்துவிட்டு, இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட மூக்கு கண்ணாடி (கூலிங்கிளாசை) அணிந்துகொண்டு பாருங்கள். அப்போதுதான், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எல்லாம் உங்களுக்கு தெளிவாக தெரியவரும் என்று கூறினார் அமித்ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com