மெட்ரோ ரயில்களில் "பிக்பாக்கெட்': கைதானவர்களில் 91% பேர் பெண்கள்

மெட்ரோ ரயில்களில் "பிக்பாக்கெட்': கைதானவர்களில் 91% பேர் பெண்கள்

தில்லி மெட்ரோ ரயில் பயணிகளிடம் "பிக்பாக்கெட்' அடித்து கைதானவர்களில் 91 சதவீதம் பேர் பெண்கள் என மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
Published on

தில்லி மெட்ரோ ரயில் பயணிகளிடம் "பிக்பாக்கெட்' அடித்து கைதானவர்களில் 91 சதவீதம் பேர் பெண்கள் என மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கான பாதுகாப்பு பணியை சிஐஎஸ்எஃப் மேற்கொண்டு வருகிறது. ரயில் பயணிகளிடம் "பிக்பாக்கெட்' அடித்ததாக, நிகழாண்டில் 479 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 438 பேர் பெண்களாவர்.
மெட்ரோ ரயில்களில் "பிக்பாக்கெட்டில்' ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கைதாகும் பெண்களை, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக தில்லி காவல்துறையினரிடம் ஒப்படைக்கிறோம்.

அண்மையில் மெட்ரோவில் பயணித்த அமெரிக்க பெண் பயணியின் நகைகள் மற்றும் பொருள்களை திருடிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண்கள் ஒரு குழுவாக சென்று, பயணிகளின் பொருள்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்தது. இதுபோன்ற பெண்கள் கைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு சாதாரண பயணிகள் போல வருவதால், எவருக்கும் சந்தேகம் எழுவதில்லை. ஆனால், பயணிகள் கவனிக்காத நேரத்தில், அவர்களது பொருளை நைசாக திருடிக் கொண்டு தப்பிவிடுகின்றனர்.

பிக்பாக்கெட் சம்பவங்களை தடுப்பதற்காக, சாதாரண உடையணிந்த சிஐஎஸ்எஃப் வீரர்களும், வீராங்கனைகளும் ரயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

மெட்ரோவில் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டில் பிடிபட்டவர்களில் 93 சதவீதம் பேர் பெண்களாவர். 2014-ஆம் ஆண்டில் பிடிபட்டோரில் 94 சதவீதமும், அதற்கு முந்தைய ஆண்டில் பிடிபட்டவர்களில் 90 சதவீதமும் பெண்களாவர்.

106குழந்தைகள் மீட்பு: மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது குடும்பத்தினரை பிரி ந்து தவித்த 106 குழந்தைகள் நிகழாண்டில் மீட்கப்பட்டு, மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டனர் என்றார் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com