நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தற்போது வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்களை வைரஸ் நோக்கி தாக்கியதால், பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்படுவதாக பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திலும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று பயிர்களை தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 பயிர்கள் மஞ்சள் நிறமாக மாற நாற்றங்கால் பூச்சிகள், பச்சை தத்து பூச்சி ஆகியவற்றின் தாக்குதலே பெரும்பாலான காரணம். இந்த நாற்றங்கால் பூச்சிகளையும், பச்சைதத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் வட்டார அலுவலகங்களிலும் இதுகுறித்த ஆலோசனைகளைத் தெரிவிக்க உதவி இயக்குநர், வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் போன்ற அதிகாரிகள் உள்ளனர்.
 அந்த பூச்சி வகைகளில் முக்கியமானது இலைப்பேன் எனப்படும்.
இதன் அறிகுறிகள்: இந்த பூச்சிகள் இளம் இலைகளைச் சுரண்டி, சாற்றை உறிஞ்சுகிறது. தாக்கப்பட்ட இளம் நாற்றுகளில் மஞ்சள் அல்லது வெள்ளை நிற வரிகள் காணப்படும். தாக்கப்பட்ட இலைகளின் நுனி சுருண்டு இறுதியில் வாடி விடும். நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
 இந்த பூச்சிகளின் முட்டைகள் நிறமின்றியும், பின் முதிர்ச்சிடையும்போது, வெளிறிய மஞ்சள் நிறமாகவும் மாறிவிடும். இலைத்தாள் திசுக்களின் பிளப்புகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும். முட்டையின் மேல்பகுதியின் பாதி வெளிப்படுத்தியிருக்கும். இவ்வகை பூச்சிகளில் புதிதாக பொரிக்கப்பட்ட இளம் பூச்சிகள் தெள்ளத் தெளிவாக இருக்கும். ஆனால் முதல் தோல் உரித்தலுக்குப் பிறகு மஞ்சளான வெள்ளை நிறமாக மாறி பின் கருப்பான கால்கள், தலை மற்றும் உணர்கொம்புகளை உருவாக்குகிறது. திறக்கப்படாத இளம் இலைகளின் மென்மையான திசுக்களை இளம் புழுக்கள் உட்கொள்ளும். இவற்றின் கூட்டுப் புழுவை கண்டறியவது சுலபம். சுருண்ட இலைகளின் உள்ளே கூண்டுப் புழு ஏற்படும். மேலும் அதன் புடைவளர்ச்சி மற்றும் இறக்கைகள் வளர்ச்சி தெளிவாகக் காணப்படும்.  
 முதிர்ச்சியடைந்த பூச்சிகள் 1 மி.மீ. நீளம் கொண்டு கரும்பழுப்பு முதல் கருப்பு நிறத்துடன் மயிரிழைகளால் ஆன இறகுகளைக் கொண்டிருக்கும். ஆண் பூச்சிகள் பெண் இனப்பூச்சிகளைவிட சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும். பூச்சித் தொகையில் ஆண் இனப் பூச்சிகள் மிக அரிதாகக் காணப்படுவதால், கன்னி இனப்பெருக்க முறையைக் கொண்டுள்ளது. கன்னி இனப்பெருக்கம் என்பது பாலினச் சேர்க்கையில்லாத இனப்பெருக்கத்தை குறிக்கும்.
 பூச்சி தாக்கப்பட்ட பயிர்களை 1-2 நாள்கள் இடைவெளி விட்டு நீரில் மூழ்கச் செய்ய வேண்டும். நாற்றுகளின் மேல் ஈரத்துணியை போட்டு இழுக்க வேண்டும். உள்ளங்கையை நீரால் நனைத்து, பின் நாற்றங்காலில் 12 இடங்களில் பயிர்ச் செடிகளின் மேல் கையைக் கொண்டு செல்ல வேண்டும். 12 முறைகளில், செடிப்பேனின் தொகை 60 எண்ணிக்கையைக் கடந்துவிட்டால் (அ) 10 சதவீத நாற்றுகளில் முதல் மற்றும் இரண்டாம் இலைகளின் பாதி பரப்பு சுருண்டு காணப்படும். கொன்றுண்ணி செடிப்பேன்கள் இளம் பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகளை உட்கொண்டு அதனை அழிக்கின்றன. பொறி வண்டுகள், பூ நாவாய்ப்பூச்சி, செம்பலினிடு வண்டுகள் ஆகியவை இளம் பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகளை உண்ணும். நாற்றங்காலில் பாஸ்போமிடான 40 எஸ்எல் மருந்தை 50 மி.லி. தெளிக்க வேண்டும். மேலும் மோனோகுரோட்டோபாஸ் 35 எஸ்எல் மருந்தை 40 மி.லி. தெளிக்க வேண்டும்.
 நெற்பயிர்களை தாக்கும் மற்றொரு பூச்சி பச்சை தத்துப்பூச்சி.
இதன் அறிகுறிகள்: இலைகள் நுனி முதல் அடிப்பகுதி வரை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். பயிரின் வீரியம் குறைந்து வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படும்.
பயிர் வாடுதல் அல்லது முற்றிலுமாக காய்தல். பயிரை முழுவதுமாக தாக்கி அதன் சாற்றை உறிஞ்சுதல், இலையுறைகள் அல்லது நடுநரம்புகளுக்குள் வெள்ளையான அல்லது வெளிறிய மஞ்சள் நிறமான முட்டைகள் இருக்கும்.
 பயிரின் மேல்பகுதியில் வெளுத்த பச்சை நிற முதிர் பூச்சிகள் இருக்கும். இப்பூச்சிகள் துங்ரோ, நெல் மஞ்சள் குட்டை போன்ற வைரஸ் நோய்களைப் பரப்புகின்றன.
 பச்சையான ஒளி கசியும் தன்மையுடைய முட்டைகள், இலைத்தாளின் நடுநரம்பு அல்லது நெற்பயிர் உறை அல்லது பச்சைப்புல் ஆகியவற்றில் இடப்பட்டிருக்கும். ஒரு வரிசையில் 10-15 குவியல்களாக முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
இளம்பூச்சி: இளம் பூச்சிகள் மென்மையான உடலுடன் மஞ்சளான வெண்மை நிறத்தில் இருக்கும். படிப்படியாக இந்நிறம், பச்சையாக மாறி 5 இளம் பூச்சிகள் வளர்ச்சி நிலைகளுடனும் காணப்படும். பின்பு 18-20 நாள்களில் முதிர் பூச்சிகள் உருவாகிறது. பச்சை தத்துபூச்சியில் முதிர் பூச்சிகள் 3-5 மி.மீ. நீளம் கொண்டு, பிரகாசமான பச்சை நிறத்தில் வேறுபட்ட கருப்பு நிற அடையாளங்களுடன், கூம்புப் பலகை வடிவில் சிறப்பான விட்ட கோடு இயக்கத்துடன் காணப்படும். ஆண் பூச்சியின் முன் இறக்கையின் நடுப்பகுதியில் கருப்புநிறப் புள்ளி காணப்படும். ஆனால் பெண் இனப் பூச்சியில் அவை கிடையாது. ஜூலை - செப்டம்பர் மாதத்தில் பூச்சிகள் செயல்திறனுடன் விளங்கும். பெண் இனப்பூச்சிகள் 50-55 நாள்கள் வரை வாழக் கூடியவை.
 முதிர் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சி எதிர்ப்பு ரகங்களான ஐ.ஆர்.50, சி.ஆர்.1009, கோ 46 பயிரிட வேண்டும்.
 அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு 12.5 கிலோவை நாற்றங்காலில் அளித்தால் பச்சை தத்துப் பூச்சியின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம். 6025 வலை வீச்சுகள் (அ) 5 குத்து தழைப்பருவத்தில் (அ) பூத்தல் பருவத்தில் 10 குத்து (அ) துங்ரோ உட்பரவல் இடங்களில் 2 குத்து. வயலில் துங்ரோ மற்றும் பச்சைத் தத்துப் பூச்சிகள் இருப்பைக் கண்காணிக்க வேண்டும். நடவு செய்யப்பட்ட வயலின் குறுக்கில், பக்கவாட்டில் நடக்கும்போது 20 குத்துக்களைச் சரிபார்க்க வேண்டும்.
 பென்தியான் 500 மி.லி. (அ) மோனோகுரோட்டாபாஸ் 1000 மி.லி (அ) பாஸ்போமிடான் 1000 மி.லி. மருந்து இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தெளித்து தத்துப்பூச்சியின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம். ஸ்ட்ரெப் ஸிப்டீரன்ஸ், சிறு குளவிகள், மற்றும் நுôற் புழுக்கள் ஆகியவை தத்துப்பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகளில் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அதனைக் கொன்றுவிடும். மேலும் நீர்வாழ் நாவாய்ப்பூச்சிகள், ஊசித்தட்டான், தட்டான் பூச்சிகள், மற்றும் சிலந்திகள் ஆகிய பூச்சிகளாலும் பச்சைத் தத்துப்பூச்சி தாக்கப்படுகிறது. பூசண நோய்க் காரணிகள் பச்சைத் தத்துப்பூச்சியின் இளம் உயிரிகள் மற்றும் முதிர் பூச்சிகளைத் தாக்குகிறது. விளக்குப் பொறிகளை பயன்படுத்துவது பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான மிக சிக்கன முறையாகும். அதிகாலை நேரத்தில் விளக்குப் பொறியைச் சுற்றி பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தோ அல்லது தூவியோ கவரப்பட்ட பச்சைத் தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
 இவை அதிகமாக காணப்படும் மாவட்டங்களில் அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள அரசுப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டால் நாற்றங்கால் பூச்சிகளையும், பச்சை தத்துப்பூச்சிகளையும் அழிப்பது குறித்து செயல்முறை விளக்கங்களுடன் தெரிவிப்பர். மேலும் ஒரே கிராமத்தில் பல விவசாயிகளின் நூற்றுக்கும் மேலான ஏக்கர் நிலங்ளில் உள்ள நெற்பயிர்கள் இந்த பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவானால் உடனடியாக வட்டார வேளாண் உதவி இயக்குநரை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com