கேரள பெண் மருத்துவர் இங்கிலாந்தில் கரோனாவுக்கு பலி

இங்கிலாந்தில் பிஷப் ஆக்லாந்தில் உள்ள ஸ்டேஷன் வியூ மருத்துவ மையத்தில் பணியாற்றி வந்த கேரளத்தின் பெண் மருத்துவர் பூர்ணிமா நாயர் (56) செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். 
கேரள பெண் மருத்துவர் இங்கிலாந்தில் கரோனாவுக்கு பலி

திருவனந்தபுரம்: இங்கிலாந்தின் பிஷப் ஆக்லாந்தில் உள்ள ஸ்டேஷன் வியூ மருத்துவ மையத்தில் பணியாற்றி வந்த இந்தியாவின் கேரள பெண் மருத்துவர் பூர்ணிமா நாயர் (56) செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து இங்கிலாந்தில் தொற்றுக்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கை 10 -ஆக உயர்ந்துள்ளது.

வேறு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லாத நிலையில் மருத்துவர் பூர்ணிமா நாயருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மார்ச் 20 ஆம் தேதி வடக்கு டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவரைக் காப்பாற்ற சக மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இருப்பினும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சை பலனின்றி மருத்துவர் பூர்ணிமா உயிரிழந்தார். 

கேரளத்தை பூர்வீகமாக கொண்டவ மருத்துவருக்கு தாய், கணவர் மற்றும் வருண் என்ற ஒரு மகன் உள்ளனர். 

தாயின் மறைவுக்கு அவரது மகன் வருண் முகநூல் பக்க பதிவில், எனது தாய் எந்த வலியையும் உணரவில்லை, அவரின் இறுதி தருணங்களில் என் தந்தை உடன் இருந்தார். உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். 

மருத்துவர் பூர்ணிமா நாயரின் கணவர் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.

பதனம்திட்டாவைச் சேர்ந்த மருத்துவர் பூர்ணிமா தில்லியில் உள்ள பிராங்க் அந்தோணி பொதுப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், தில்லியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரியில் மருத்துவப் படிப்பையும் முடித்தார். இங்கிலாந்து செல்வதற்கு முன்பு தில்லியில் உள்ள சப்தர்ஜாங் மருத்துவமனையில் பணிபுரிந்தார்.

மருத்துவர் பூர்ணிமா நாயர் மறைவுக்கு ஏராளமான தலைவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், பொதுமக்கள் என அனைத்து பகுதிகளிலிருந்தும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றனர். 

அனைவரால் நேசிக்கப்பட்டவரும், மதிப்புமிக்கவருமான மருத்துவர் பூர்ணிமா நாயர் மறைந்துவிட்டார் என்ற செய்தியை அறிவிப்பதில் மிகவும் வருந்துகிறோம். மிகுந்த மன வலிமையுடன் அவர் உயிருக்கு போராடி வந்த நிலையில் அது பலனற்று பேரழிவை ஏற்படுத்தி விட்டது. மருத்துவர் பூர்ணிமா நாயர் எங்கள் நினைவுகளிலும், வேண்டுதல்களிலும் என்றும் இருப்பார் என்று ஸ்டேஷன் வியூ மருத்துவ மையம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com