

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இணையதளம் மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கியதில் கடந்த பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது தொடர்பாக தேவஸ்தான கண்காணிப்பாளர் உள்பட 10 பேரை திருமலை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு என தேவஸ்தானம் தனிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் தேவஸ்தானத்துக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களின் விவரங்களைப் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு, அவர்களின் குடும்பத்தினர் 5 பேருக்கு ஆண்டுக்கு இருமுறை விஐபி பிரேக் தரிசனத்துக்கு அனுமதி இலவசமாக வழங்கப்பட்டது.
நன்கொடையாளர் தரிசனத்துக்கு வரும் தேதியை அதற்கு முந்தைய நாள் தேவஸ்தானத்துக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து விட்டால், அவர்களின் டிக்கெட் தயார் நிலையில் வைக்கப்படும். அவர்களின் டிக்கெட்டுகளை ஊழியர்கள் பரிசோதிப்பதில்லை. இதில் சில நன்கொடையாளர்கள் தேவஸ்தானம் வழங்கும் இலவச தரிசனங்களைப் பெற முன்வருவதில்லை.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தேவஸ்தானத்தின் தரிசன சலுகையை ஏற்றுக்கொள்ளாத நன்கொடையாளர்களின் விவரங்களை தேவஸ்தான செயல் இணை அதிகாரி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்த தர்மய்யா சேகரித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வேணுகோபால், திருப்பதி வெங்கடேஷ் (எ) ராஜூ ஆகியோருடன் இணைந்து கள்ளச் சந்தையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். ரூ.500 மதிப்புள்ள ஒவ்வொரு டிக்கெட்டையும் ரூ.4,000 முதல் ரூ. 5,000 வரை விற்றுள்ளனர்.
2015-ஆம் ஆண்டு இணையதளத்தில் நன்கொடையாளர்களுக்கென தனிப்பிரிவை ஏற்படுத்தி அனைத்து விவரங்களையும் தேவஸ்தானம் பதிவு செய்யத் தொடங்கியது. மேற்கண்ட மூவரும் ஹைதராபாதைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள் இருவருடன் இணைந்து, தேவஸ்தானத்தின் இணையதளத்தை ’ஹேக்' செய்து நன்கொடையாளர்களின் விவரங்களைத் திரட்டியுள்ளனர். அவர்கள் பெயரில் 1,500 போலி பாஸ் புத்தகத்தைத் தயாரித்தனர். அதை வைத்து விஐபி பிரேக் டிக்கெட்டுகளைப் பெற்று கள்ளச் சந்தையில் விற்று வந்துள்ளனர்.
2016-ஆம் ஆண்டு தேவஸ்தானம் தன் சேவையை மேலும் விரிவுபடுத்தி, இணையதளம் மூலம் நன்கொடை வழங்கும் சேவையைத் தொடங்கியது. நன்கொடை வழங்கிய 48 மணி நேரத்தில் இணையதளம் மூலம் பாஸ் புத்தகம் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியது. அவர்களின் விஐபி பிரேக் டிக்கெட்டில் பார்கோட் பிரிண்ட் செய்யும் முறையைத் தொடங்கியது. அதையும் ’ஹேக்' செய்து போலி டிக்கெட்டுகளைத் தயாரித்து விற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் தேவஸ்தானம் நன்கொடையாளர்களின் விஐபி பிரேக் டிக்கெட்டுகளை ’ஸ்கேன்' செய்யும் முறையை முன்னறிவிப்பின்றி அதிரடியாகத் தொடங்கியது. அதில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி 5 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் விஐபி பிரேக் தரிசனத்துக்கு வந்தனர். அந்த டிக்கெட்டுகளைப் பரிசோதனை செய்த ஊழியர்கள் டிக்கெட்டுகள் ’ஸ்கேன்' ஆகாததைக் கண்டனர். மேலும் பார்கோடும் தவறு என சுட்டிக் காட்டியதால் அவர்கள் இதுகுறித்து தேவஸ்தான கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், விஐபி பிரேக் டிக்கெட் வழங்கிய இடைத்தரகர்களின் விவரம் தெரியவந்தது. அவர்களுக்கு டிக்கெட் வழங்க உதவிபுரிந்த இடைத்தரகர்களை விசாரித்ததில், விஐபி தரிசன டிக்கெட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது.
இதன் மூலம் கடந்த ஆண்டுகளில் போலி பாஸ் புத்தகங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்று, கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் குறித்து திருமலை கண்காணிப்பு போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர்.
இந்த ஊழலில் தொடர்புடைய தேவஸ்தான கண்காணிப்பாளர் தர்மய்யா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வேணுகோபால், திருப்பதி வெங்கடரமணா, பார்த்தசாரதி, நாகபூஷணம், வி.ஜி.நாயுடு, கணேஷ், சீனிவாசலு, ராஜு, வெங்கடாசலபதி உள்ளிட்ட 10 பேர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்ய உள்ளதாகவும், விரைவில் அவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இன்னும் இரண்டு நாள்களில் நீதிமன்றக் காவலில் உள்ள 10 பேரையும் அனுமதி பெற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். வெகுவிரைவில் இந்த முறைகேடு குறித்த அனைத்துத் தகவல்களும் புள்ளி விவரத்துடன் வெளியிடப்படும் என திருமலை இரண்டாவது காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கட் ரவி தெரிவித்தார்.
பாராட்டு... பரிசு
திருப்பதி ஏழுமலையான் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதைக் கண்டறிய உதவி புரிந்த தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஆந்திர வங்கி ஊழியர்கள் ஹரிகிருஷ்ணா, ஸ்ரீபாபு பிரசாத் இருவரையும் பாராட்டி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு செவ்வாய்க்கிழமை மாலை பரிசு வழங்கி கௌரவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.