உலக செஸ் சாம்பியன்ஷிப்: தொடர்ந்து 3-ஆவது முறையாக மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 3-ஆவது முறையாக நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: தொடர்ந்து 3-ஆவது முறையாக மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன்
Published on
Updated on
1 min read

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 3-ஆவது முறையாக நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
12 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் நடப்பு சாம்பியனான கார்ல்சன், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் ஆகிய இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து வெற்றியைத் தீர்மானிப்பதற்காக டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் கார்ல்சன் 3-1 என்ற கணக்கில் செர்ஜி கர்ஜாகினை தோற்கடித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான கார்ல்சனும், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினும் மோதினர். 12 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியின் முதல் 7 சுற்றுகள் டிராவில் முடிந்த நிலையில் 8-ஆவது சுற்றில் கர்ஜாகின் வெற்றி கண்டார். இதன்பிறகு 10-ஆவது சுற்றில் கர்ஜாகினுக்குப் பதிலடி கொடுத்தார் கார்ல்சன். அடுத்த இரு சுற்றுகள் டிராவில் முடிய, இருவரும் 6-6 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. ரேபிட் முறையில் நடைபெற்ற இந்த சுற்றில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதில் முதல் இரு சுற்றுகள் டிராவில் முடிந்த நிலையில் அடுத்த இரு சுற்றுகளில் கார்ல்சன் வெற்றி கண்டார். இதன்மூலம் டைபிரேக்கர் சுற்றில் 3-1 என்ற கணக்கில் வெற்றி கண்ட கார்ல்சன், தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக சாம்பியனாகியிருக்கிறார். கார்ல்சன் தனது 26-ஆவது பிறந்த நாளில் உலக செஸ் போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை மிக எளிதாக தோற்கடித்தார் கார்ல்சன். அதனால் செர்ஜி கர்ஜாகினையும் கார்ல்சன் எளிதாக வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபாரமாக ஆடிய செர்ஜி கர்ஜாகின் இந்தப் போட்டியை டைபிரேக்கர் வரை இழுத்துச் சென்றதன் மூலம் அனைவருடைய கணிப்பையும் பொய்யாக்கினார்.
சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ.4 கோடியும், கர்ஜாகினுக்கு ரூ.3.25 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன. முன்னதாக சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 60 சதவீத பரிசுத் தொகையும், 2-ஆவது இடம்பிடிப்பவருக்கு 40 சதவீத பரிசுத் தொகையும் வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் போட்டி டைபிரேக்கர் வரை சென்றதால், கார்ல்சனுக்கு 55 சதவீத பரிசுத் தொகையும், கர்ஜாகினுக்கு 45 சதவீத பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.
செஸ் விளையாட்டுக்குப் பெயர் பெற்ற ரஷியாவில் இருந்து கடைசியாக 2007-இல் விளாதிமிர் கிராம்னிக் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பிறகு இதுவரை யாரும் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com