
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தடகள குழு உறுப்பினர்களில் ஒருவராக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள அரிய கெüரவங்களில் இதுவும் ஒன்றாகும்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் அனுப்பிய நியமனம் தொடர்பான கடிதம் சாய்னாவுக்கு திங்கள்கிழமை கிடைக்கப்பெற்றது.
அதில், "ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் நீங்கள் (சாய்னா) போட்டியிட்டீர்கள். உரிய கலந்தாலோசனைகளுக்குப் பிறகு தற்போது, ஐஓசி தடகள குழுவின் உறுப்பினராக உங்களை நியமிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஐஸ் ஹாக்கி வீராங்கனை ஏஞ்செலா ருக்கைரோ தலைமையிலான ஐஓசி தடகள குழுவில் 9 துணைத் தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக் குழுவின் அடுத்தகட்டக் கூட்டம் நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த சாய்னா, மீண்டும் தனது பயிற்சியை தொடங்க உள்ள நிலையில் அவருக்கு இத்தகயை கெüரவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாய்னாவின் தந்தை ஹர்வீர் சிங் கூறுகையில், "இது மிகவும் உணர்ச்சிகரமான தருணமாகும். சாய்னாவை அங்கீகரித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் அவர் அங்கம் வகிக்க வழங்கப்பட்டிருக்கும் இந்த வாய்ப்பு தனிச்சிறப்பானதாகும். சாய்னாவுக்காக பெருமைப்படுகிறோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.