வங்கக் கடலில் "நடா' புயல்: கடலோர மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள "நடா' புயல் கடலூர் அருகே வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும். இந்த புயலால் கடலோர மாவட்டங்களில்
'நடா' புயல் கரையைக் கடக்கும் வரைபடம்.
'நடா' புயல் கரையைக் கடக்கும் வரைபடம்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள "நடா' புயல் கடலூர் அருகே வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும். இந்த புயலால் கடலோர மாவட்டங்களில்
பலத்த மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும். அதன் பின்பு மழையின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சுமார் 10 நாள்கள் தாமதித்து அக்டோபர் 30 -ஆம் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மத்திய வங்கக் கடலில் "கியாந்த்' புயல் உருவானது. இந்தப் புயலின் காரணமாகவே வடகிழக்கு பருவமழை தாமதமானது. நவம்பரில் வழக்கத்தைவிட 70 சதவீதம் மழை குறைவாக இருந்தது.
நடா புயல்: இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதத்துக்குப் பின்பு வங்கக் கடலில் தற்போது நடா புயல் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதன் பின்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்தது.
இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் புயலாக மாறியது. 2004 -ஆம் ஆண்டிலிருந்து அரபிக்கடல், வங்கக்கடலில் உருவாகும் புயல்களின் வரிசையில் இது 45 -ஆவது புயலாகும். இந்தப் புயலுக்கு நடா என பெயரிடப்பட்டுள்ளது. நடா என்பது ஓமன் நாட்டின் பெயராகும்.
இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: "நடா' புயலானது சென்னைக்கு தென் கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகக் கடலோர மாவட்டங்களில் தொடங்கி உள் மாவட்டங்கள் வரை மழை பரவும். வியாழக்கிழமை அதிகாலையிலேயே மழை பெய்யத் தொடங்கி, மழையின் வேகம் மேலும் மேலும் அதிகரிக்கும்.
இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை அல்லது மிகக் கன மழை பெய்யக்கூடும்.
கரூர், தேனி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
பனி குறையும்: வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் ஆகியும் போதிய அளவில் மழை பெய்யாததால் வடமாநிலங்களில் உள்ள குளிர்காற்று தெற்கு நோக்கி நகர்ந்து வந்ததால், வெப்பத்தின் அளவு வெகுவாகக் குறைந்து குளிர்காற்று வீசியது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களிலும், அதிகாலை வேளைகளிலும் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக, தொடர்ந்து மழை பெய்யும் சூழ்நிலையில் பனிப்பொழிவு குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளை கரையைக் கடக்கும்
"நடா' புயலானது சென்னைக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கடலூர் அருகே வெள்ளிக்கிழமை (டிச.2) அதிகாலையில் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரை சூரைக்காற்றுடன் மழை பெய்யக்கூடும்.
நடா புயலானது டிசம்பர் 2 -ஆம் தேதியளவில் கரையைக் கடந்த பின்பு, டிசம்பர் 4 -ஆம் தேதியளவில் வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசிவருவதையடுத்து துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டன.
பாம்பன் கடல் பகுதியில் புதன்கிழமை அதிகாலை பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இதனால் துறைமுகத்தில் காலையில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்ததால் மாலையில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை துறைமுக அலுவலகத்திலும், காரைக்கால் தனியார் துறைமுகத்திலும் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதேபோல் சென்னை, எண்ணூர் துறைமுகங்களிலும் 2}ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மணிக்கு 60 முதல் 100 கி.மீ. வேகத்திற்கு பலத்த காற்று வீசும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படைகள்


தமிழகத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவசர உதவிக்கு 1070, 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் கனமழையை எதிர்கொள்ள 3 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு:
நடா புயல் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என அறியப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த இரண்டு குழுக்களும், மாநில பேரிடர் மீட்பு படை ஒன்றும் ஏற்கெனவே அங்கு முகாமிட்டுள்ளன. மேலும், நாகப்பட்டினம், சென்னை மாவட்டங்களில் தலா ஒரு குழு முகாமிட்டுள்ளது.
தாழ்வான மற்றும் பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைப்பட்டால் வெளியேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அவசர காலங்களில் பொது மக்கள் 1070 அல்லது 1077 ஆகிய கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். படகுகளை பாதுகாப்பான இடங்களில் நங்கூரமிட்டு இருக்கச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை


வங்கக் கடலில் உருவாகியுள்ள நடா புயலின் காரணமாக கடலில் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும். கடற்பகுதியில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
மேலும் ஆழ்கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும் உடனடியாக கரைக்குத் திரும்பவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com