வாக்காளர்களுக்குப் பணம் அளிக்கப்படுவதால் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது மக்கள் கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சிதைத்து விடும் வகையில்தான் உள்ளன.
பாமக சார்பில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 2 நாள்களாக பிரசாரம் செய்தேன்.
இரு தொகுதிகளிலும் அதிமுகவும், திமுகவும் போட்டிப்போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி இறைத்து வரும் நிலையில், அதைத் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதைத் தடுக்க தேர்தல் பார்வையாளர்களோ, காவல்துறையினரோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டால் அது ஜனநாயகப் படுகொலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்ததாகவே அமையும். எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் 324 - ஆவது பிரிவு தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியுள்ள வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். இந்தத் தொகுதிகளின் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.