
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் (24) புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சூளைமேட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன மென்பொறியாளர் சுவாதி ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதில் எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், குற்றவாளியின் மேம்படுத்தப்பட்ட புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர். இந்த நிலையில் சூளைமேட்டில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ராம்குமார் மீது சந்தேகம் உள்ளதாக விடுதியின் காவலர் தகவல் அளித்தார்.
ஜூலை 1-இல் கைது: விடுதியின் பதிவேட்டில் இருந்த விலாசத்தின்பேரில், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் பதுங்கியிருந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைது செய்தனர். அப்போது தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி ராம்குமாரை விசாரணைக்குப் பிறகு சென்னை புழல் சிறையில் போலீஸார் அடைத்தனர்.
அங்கு மன அழுத்தத்தில் இருந்து வந்ததால், மனநல ஆலோசனை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.
மின்சார கம்பியை வாயில் செருகினார்: இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ராம்குமார் வழக்கம்போல் சிறை வளாகத்தில் உலாவ அனுமதிக்கப்பட்டார். அப்போது சமையல் அறைக்கு அருகே உள்ள மின்சாரப் பெட்டியின் அருகே திடீரென சென்றுள்ளார். அங்கு இருந்த மின்கம்பிகளைத் துண்டித்து தனது வாய், மார்பு உள்பட உடலின் பல்வேறு பகுதிகளில் செருகிக் கொண்டாராம். உடலில் மின்சாரம் பாய்ந்ததால் ராம்குமார் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த கைதிகளும், சிறைக்காவலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
நாடித் துடிப்பு குறைந்த நிலையில்...: மயங்கிக் கிடந்த ராம்குமாரை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. நாடித்துடிப்பு மிகவும் குறைவாக இருந்ததால், அவர் பலத்த பாதுகாப்புடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாலை 5.45 மணிக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் வழியிலேயே இறந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
உடனடியாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போராட்டம்: தகவலறிந்த வழக்குரைஞர்கள், ராம்குமாரின் உறவினர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் கூறினர்.
இதனால் அந்தப் பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிரேத பரிசோதனை: ராம்குமாரின் சடலம் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இன்று நீதி விசாரணை:
ராம்குமார் தற்கொலைச் சம்பவம் குறித்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் திருவள்ளூர் மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது. இதற்காக இரண்டு தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை விடியோ பதிவு செய்யப்படும். இதைத் தொடர்ந்து, புழல் சிறைக்கு நீதிபதி நேரடியாகச் சென்று சிறைத் துறை அதிகாரிகள், காவலர்கள், ஓட்டுநர்கள், மருத்துவர்களிடம் விசாரணை நடத்துகிறார்.
விசாரணைக்குப் பிறகு அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கைது முதல்... தற்கொலை வரை...
ஜூன் 24: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை.
ஜூன் 27: கொலை வழக்கு விசாரணை ரயில்வே போலீஸாரிடமிருந்து சென்னை பெருநகரக் காவல் துறைக்கு மாற்றம்.
ஜூலை 1: செங்கோட்டையில் ராம்குமாரை கைது செய்ய முயன்றபோது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி.
ஜூலை 4: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் கொண்டு வரப்பட்டார்.
ஜூலை 5: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு ராம்குமார் மாற்றம்.
ஜூலை 6: நீதிமன்றத்தில் ராம்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி.
ஜூலை 12: புழல் சிறையில் நீதித்துறை நடுவர் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு.
ஜூலை 28: ராம்குமாரை விடியோ, புகைப்படம் எடுக்க போலீஸாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி.
ஆக.13: புழல் சிறையில் ராம்குமாரை போலீஸார் விடியோ, புகைப்படம் எடுத்தனர்.
ஆக.18: கையெழுத்துப் பரிசோதனைக்கு, கையெழுத்திட ராம்குமார் மறுப்பு.
ஆக.25: சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
ஆக.30: சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி.
செப்.18: புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.