20 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்: வேலூர் 110 டிகிரி; சென்னை 108 டிகிரி

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெயிலில் இருந்து தப்ப சென்னை அண்ணாசாலையில் ஸ்கூட்டரில் செல்லும் தாயின் துப்பட்டாவுக்குள் அடைக்கலம் புகுந்த பள்ளி மாணவி.
வெயிலில் இருந்து தப்ப சென்னை அண்ணாசாலையில் ஸ்கூட்டரில் செல்லும் தாயின் துப்பட்டாவுக்குள் அடைக்கலம் புகுந்த பள்ளி மாணவி.

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான எச்சரிக்கையை குறிப்பிட்ட 20 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதவிர தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பின் இயக்குநர் ஜி.லதாவும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைக் குறிப்பிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கோடைக்காலம் ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. தொடக்கம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. கடற்காற்று நுழைந்ததால் கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வந்தது.
மழை பதிவு: அதிக வெப்பத்தின் காரணமாக உருவாகும் இடிமேகங்களால் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, ஈரோடு மாவட்டம் தாளவாடி, திருப்பத்தூர் மூலனூரில் 30 மி.மீ., விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சேலம் மாவட்டம் ஏற்காடில் 20 மி.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 10 மீ.மீ. மழை பெய்துள்ளது.
20 மாவட்டங்களில் அனல் காற்று: தமிழகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வடதமிழகத்தைச் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 20 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர புதுச்சேரிக்கும் அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளியே வரவேண்டாம்: பகலில் அனல் காற்று வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். நண்பகலில் தேவையற்ற பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டாம். மேலும் பள்ளிகளில் திறந்த வெளியில் வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது: மேற்கு திசையில் ஆந்திரத்தில் இருந்து வறண்ட காற்று தமிழகத்துக்குள் நுழைவதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். வடதமிழகத்தைச் சேர்ந்த 20 மாவட்டங்களில் இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும். வெப்பம் அதிகரிக்கும் நிலை அனல் காற்று என்று குறிப்பிடப்படுகிறது.
வறண்ட காற்று வீசுவதால், கடற்காற்று நிலத்துக்குள் நுழைவதிலும் தாமதம் ஏற்படும். இதனால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை உள்ளிட்டவற்றிலும் வெயில் அதிகரிக்கும். ஆனால் வடதமிழகத்தைக் காட்டிலும் தென்தமிழகத்தில் 2 அல்லது 3 டிகிரி வெப்பம் குறைவாகக் காணப்படும். கோடை மழைக்கு எங்கும் வாய்ப்பு இல்லை என்றார்.
13 இடங்களில் சதம்: திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி பதிவானது. புதுச்சேரியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. புதுச்சேரிக்கும் அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை பதிவான வெயில் (ஃபாரன்ஹீட்டில்)
வேலூர் 110
சென்னை 108
மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி 107
பரங்கிப்பேட்டை,
திருப்பத்தூர் 106
தருமபுரி,கரூர் பரமத்தி,
சேலம் 105
புதுச்சேரி, நாகப்பட்டினம் 103
கடலூர் 102
தொண்டி 100
காரைக்கால், கோவை 99

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com