
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், டி.டி.வி. தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டன.
இதுகுறித்த விவரம்: அதிமுக துணைப் பொதுச் செயலரான டி.டி.வி. தினகரன், லண்டனில் டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்த அவர், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி இந்தியாவில் இருந்து 1 கோடியே 4 லட்சத்து 95 ஆயிரத்து 313 அமெரிக்க டாலரை பிரிட்டனில் உள்ள ஒரு வங்கியின் கணக்குக்கு அனுப்பினார்.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு, டி.டிவி. தினகரனிடம் அமலாக்கத்துறை நோட்டீஸ் அளித்தது. அதற்கு டி.டி.வி.தினகரன் தான் சிங்கப்பூர் குடிமகன் என்று பதில் அளித்தார். அந்தப் பதிலை அமலாக்கத்துறை ஏற்காமல், தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தும்படி, உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்காக ஏற்கெனவே நீதிமன்றத்தில், 12 சாட்சிகள், 85 ஆவணங்களை அமலாக்கத்துறை சமர்ப்பித்திருந்தது. இவ்வழக்கு புதன்கிழமை காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தரப்பு வழக்குரைஞர்கள், இந்த வழக்குத் தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதால், வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி வாதிட்டனர். அதற்கு நீதித்துறை நடுவர் மலர்மதி மறுப்புத் தெரிவித்தார். இருப்பினும் வழக்கின் விசாரணையை மாலை 3 மணி வரை ஒத்தி வைத்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக, டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
குற்றச்சாட்டுப் பதிவு: மாலையில் நடைபெற்ற விசாரணையில் தினகரன் ஆஜரானார். அப்போது நீதித்துறை நடுவர் மலர்மதி, தினகரனிடம் அந்நியச் செலாவணி மோசடி வழக்கின் விவரத்தையும், அமலாக்கத்துறை தெரிவித்துள்ள 6 குற்றச்சாட்டுகளையும் வாசித்துக் காட்டிப் பதிவு செய்தார்.
குற்றச்சாட்டுகளை ஏற்கிறீர்களா, மறுக்கிறீர்களா என தினகரனிடம் நீதித்துறை நடுவர் கேட்டார். அதற்கு தினகரன், குற்றச்சாட்டுகளை மறுப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து நீதித்துறை நடுவர், அரசுத் தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்கிறீர்களா எனக் கேட்டார். குறுக்கு விசாரணை செய்ய உள்ளதாக தினகரன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை மே 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் மலர்மதி உத்தரவிட்டார்.
இதேபோல ரிசர்வ் வங்கி அனுமதியின்றி லண்டனில் ஹோட்டல் கட்டுவதற்கு 36 லட்சத்து 36 ஆயிரம் அமெரிக்க டாலர், 10 ஆயிரம் பவுண்ட் முதலீடு செய்ததாக தினகரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த மற்றொரு வழக்கின் விசாரணை வியாழக்கிழமை (ஏப்.20) இதே நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
சசிகலா வழக்கு: ஜெ.ஜெ. டி.வி.க்கு அப்லிங்க் கருவிகளை வாடகைக்கு வாங்கியதில் அந்நியச் செலாவணி சட்ட விதிகளை மீறியதாக அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா மீது அமலாக்கத்துறை கடந்த 1996-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, எழும்பூர் முதலாவது பொருளாதாரக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெறுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா சார்பில் அவரது வழக்குரைஞர்கள், இவ்வழக்கு விசாரணையை விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இதற்கு அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்புத் தெரிவித்து, சசிகலா வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள், மனு மீதான விசாரணையை தள்ளிவைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நீதித்துறை நடுவர் ஏ.ஜாகீர் உசேன் வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஏப்.20) ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.