

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி, தமிழக விவசாயிகளை புதுவை முதல்வர் வி.நாராயணசாமி, திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்யும் புதுவை அமைச்சரவையின் முடிவுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் புதுச்சேரி மாநில விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த எட்டு தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுவை மாநில முதல்வர் வி.நாராயணசாமி, அம்மாநில அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம், எம்.கந்தசாமி, எஃப். ஷாஜகான், ஆர்.கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அந்தக் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.செந்தில்குமார், செயலர் ஊமைத்துரை, பொருளாளர் தனபூபதி உள்ளிட்டோரை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் முதல்வர் வி.நாராயணசாமி கூறியதாவது: புதுவை மாநில விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு, துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கோப்பை செயல்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை என ஆளுநர் கூறினார். இதையடுத்து, மாநில சட்டத் துறையிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பிறகும், அந்த கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் வழங்கவில்லை, மாறாக வங்கிக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அதற்கான அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. அதேவேளையில் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது.
இந்நிலையில், கடன் தள்ளுபடி தொடர்பான கோப்புகளை துணைநிலை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். இதனால், புதுவை விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக புதுவை அமைச்சர்கள் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். அவர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் என்றார் முதல்வர் நாராயணசாமி. இதன் பின்னர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மற்றொரு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளையும் அவர்கள் சந்தித்தனர்.
மீனவர்கள் போராட்டம்: இதனிடையே, மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, தில்லி ஜந்தர் மந்தரில் தர்னாவில் ஈடுபட்டு வரும் ஆந்திரம், தெலங்கானா மாநில மீனவர்கள் கூட்டமைப்பினரை முதல்வர் நாராயணசாமி, மீன்வளத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திமுக எம்பிக்கள்: இதேபோன்று, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி, தமிழக விவசாயிகளை மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் புதன்கிழமை காலையில் நேரில் சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஏற்கெனவே தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். ஆனால், அதன் பிறகும் உரிய தீர்வு கிடைக்காததால் அவர்கள் மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 18 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை தமிழக அரசும், மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. அதேபோன்று, விவசாயிகளின் ரூ.20 கோடி கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்ய புதுச்சேரி அரசு விரும்பிய போதிலும், அதற்கான கோப்பில் துணைநிலை ஆளுநர் கையெழுத்திடாமல் தடையாக இருந்து வருகிறார். இதனால், இந்த விவகாரம் தொடர்பாக புதுவை விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் நடவடிக்கையானது தமிழக விவசாயிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைப் பாதிக்கச் செய்வதாக உள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.