நீட் நுழைவுத் தேர்வுக்கு மாறுபட்ட கேள்வித் தாள்கள்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

நீட் எனப்படும் தேசிய மருத்துவ தகுதிகாண் நுழைவுத் தேர்வை பிராந்திய மொழிகளில் எழுதிய மாணவர்களுக்கு மாறுபட்ட
நீட் நுழைவுத் தேர்வுக்கு மாறுபட்ட கேள்வித் தாள்கள்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

நீட் எனப்படும் தேசிய மருத்துவ தகுதிகாண் நுழைவுத் தேர்வை பிராந்திய மொழிகளில் எழுதிய மாணவர்களுக்கு மாறுபட்ட கேள்வித்தாள்களை அளித்ததற்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ), உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியைத் தெரிவித்தது.
நாடு முழுவதும் மருத்துவ பொது தகுதிகாண் நுழைவுத் தேர்வை சிபிஎஸ்இ அமைப்பு கடந்த மே மாதம் 7- ஆம் தேதி நடத்தியது. எனினும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இத்தேர்வை எழுதிய மாணவர்களுக்கு தனி கேள்வித்தாளும், பிராந்திய மொழிகளில் எழுதியவர்களுக்கு தனி கேள்வித்தாளும் வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. ஆங்கில, ஹிந்தி கேள்வித்தாள்களை விட பிராந்திய கேள்வித்தாள்கள் மிகவும் கடினமாக இருந்தததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே, இந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இத்தேர்வை ரத்து செய்ய கடந்த மாதம் 15-இல் மறுத்து விட்டனர்.
அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறுகையில், 'இத்தேர்வை எழுதிய 11.35 லட்சம் பேரில் 6.11 லட்சம் பேர் தேறி விட்டனர். அவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் இத்தேர்வை ரத்து செய்தால் இத்தேர்வில் வெற்றி பெற்ற 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரை அது பாதித்துவிடும்' என்று தெரிவித்தது.
இந்நிலையில், நீட் தேர்வை பிராந்திய மொழிகளில் எழுதிய மாணவர்களுக்கு மாறுபட்ட கேள்வித்தாள்களை அளித்ததற்காக சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தனது அதிருப்தியைத் தெரிவித்தது. மேலும், இத்தேர்வை எழுதும் அனைவருக்கும் ஒரே பொதுவான கேள்வித்தாள் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com