கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு: காவிரி நதி நீர் வழக்கில் தமிழக அரசு வாதம்! 

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று காவிரி நதி நீர் பங்கீடு வழக்கின் இறுதி வாதத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு: காவிரி நதி நீர் வழக்கில் தமிழக அரசு வாதம்! 
Published on
Updated on
1 min read

புதுதில்லி: கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று காவிரி நதி நீர் பங்கீடு வழக்கின் இறுதி வாதத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் 14-ஆவது நாளாக கடந்த வியாழக்கிழமை அன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதி விசாரணை நடைபெற்றது.

அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே ஆஜராகி, 'தமிழகத்தின் சரிபாதி வேளாண்மை, காவிரியைச் சார்ந்தே நடைபெறுகிறது. தமிழகத்தின் ஜீவாதார நதியாக காவிரி இருந்து வருகிறது. காவிரி விவகாரத்தில் மழைப் பொழிவு, பருவமழை உள்ளிட்ட மாறுபட்ட காரணிகளை காவிரி நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை. மண்ணுக்கேற்ற வேளாண்மையை கர்நாடகம் செய்யவில்லை. காவிரி விவகாரத்தை நடுவர் மன்றம் இயந்திரத்தனமாக அணுகியது. தமிழகத்தின் கோரிக்கைகளைப் பரிசீலக்கவில்லை. தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் பெய்யும் வட கிழக்கு பருவமழையால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் காவிரியிலிருந்து திறக்கப்படும் நீர் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதில் முக்கியவத்துவம் உள்ளது' என்றார்.

அவரது வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வாதங்களை தமிழக அரசு ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தெரிவித்து இறுதி விசாரணையை புதன்கிழமைக்கு ( ஆகஸ்ட் 16 ) ஒத்திவைத்தனர்.

அதன்படி இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, தமிழக அரசின் சார்பில் வாதங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டதாவது:

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் புதிதாய் பெரிய   அணைகளை கட்டுவதற்கு முன்பாக கர்நாடகா உரிய அனுமதியினை பெற்வில்லை. வானளாவிய அதிகாரங்கள் கையிலிருந்தும்,மத்திய அரசு  இந்த விவகாரத்தில் எதுவும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com