'நீட்' அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும்

'நீட்' அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும்

மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தகுதி காண் நுழைவுத் தேர்வு ('நீட்') அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்துமாறு தமிழக

மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தகுதி காண் நுழைவுத் தேர்வு ('நீட்') அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்துமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனே தொடங்கி செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் அவசர சட்டமும் இயற்றப்பட்டது. இந்நிலையில்தான் அண்மையில் சென்னை வந்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் 'நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கிடைக்காது. ஆனால், ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில், மாநில அரசு அவசர சட்ட மசோதா இயற்றினால் மத்திய அரசு உதவி செய்யும்' என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு மட்டும் விலக்கும் அளிக்கும் அவசரச் சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 'நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, 'நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கூடாது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது' என்றார்.
மத்திய அரசின் வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''நீட்' தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 'நீட்' தேர்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட வேண்டும். இது தொடர்பான மனு முடித்து வைக்கப்படுகிறது. மேலும், தமிழகத்துக்கு மட்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை செப்டம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அனைத்துப் பாடத் திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு பாரபட்சம் காட்டாமல், 'நீட்' அடிப்படையிலே மருத்துவர் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்ûகான கலந்தாய்வை உடனே தொடங்கி செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' என தெரிவித்தனர். மேலும், இது தொடர்பான வழக்கையும் நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே, 'ஒவ்வொரு சட்டத் திருத்தமும், ஒரு சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். அதற்காக மாநில அரசு சட்டம் இயற்றக் கூடாதா?' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நீதிபதிகள், 'தமிழக அரசு காலம் கடத்திவிட்டது. இதை முன்னரே செய்திருக்க வேண்டும்' என்றனர்.
இதற்கு சேகர் நாப்டே, 'நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் சாதகமான பதிலை அளித்துள்ளார்' என்றார்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'நீட் விலக்கு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவரசச் சட்டம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) நிறைவேற வாய்ப்புள்ளது' என தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் நீட் தேர்வு முறையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் நாம் மேற்கொள்ளும் எந்தவொரு செயல்பாடும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்று 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள் விவரம், 'நீட்' தேர்வு முடிவு, கிராமப்புற மாணவர்களின் பின்னணி குறித்த தகவல்கள் ஆகியவற்றை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரையிலும் தற்போதுள்ள நிலையே தொடரும்' என தெரிவித்து வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஆகஸ்ட் 22) ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது 'நீட்' அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை மருத்துவ கலந்தாய்வு


தமிழகத்தில் 'நீட்' தேர்வு தகுதி அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) வெளியிடப்பட உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்றம் மருத்துவக் கலந்தாய்வை நடத்த செப்டம்பர் 4-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இந்த உத்தரவின்பேரில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள மாணவர்களுக்கான 'நீட்' தேர்வு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படும்.
தமிழகத்தில் 3,536 பொது மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோன்று, 100 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோன்று, சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் உள்ளன. குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,445 இடங்கள் உள்ளன. மீதமுள்ள இடங்கள் தமிழக அரசுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஒப்பளிக்கும் இடங்களாகும். முதல் கட்டமாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆகஸ்ட் 25-ஆம் தேதியில் இருந்து வழக்கமான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும். மாநில ஒதுக்கீட்டில் உள்ள மாணவர்களுக்கும் புதன்கிழமை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பர் 10-ஆம் தேதி வரை பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை முடிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com