பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கட்டுமானப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது கேரளம்

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பதற்கான கட்டுமானப் பணியை, கேரள அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் தடுப்பணைப் பணிகள்.
பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் தடுப்பணைப் பணிகள்.

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பதற்கான கட்டுமானப் பணியை, கேரள அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, பவானி ஆற்றில் இருந்து கூடுதலாக தண்ணீரை எடுத்து கேரளம் பயன்படுத்தி வருகிறது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பவானி, சிறுவாணி ஆறுகளின் குறுக்கே அணை கட்டுவதற்கு கேரளம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனைகட்டியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் கேரள எல்லையில் ஓடும் பவானி ஆற்றில் தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய பகுதிகளில் தடுப்பணைகளைக் கட்டும் பணியை கேரள அரசு தொடங்கியுள்ளது. மேலும், சில இடங்களிலும் தடுப்பணைகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேக்குவட்டை பகுதியில் தடுப்பணை கட்டுவதற்காக கட்டுமானப் பொருள்களை இறக்கி பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பணிகளை சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
ஆனால், கேரள அரசின் முயற்சியைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, தடுப்பணை விவகாரம் தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு தவறான தகவலை அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கேரள அரசின் முயற்சியைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அண்மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கடந்த 21-ஆம் தேதி கேரள அரசைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மேலும், ஜனவரி 29-ஆம் தேதி தடுப்பணை கட்டும் பகுதியில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணி தீவிரம்: தேக்குவட்டை பகுதியில் அமைக்கப்பட உள்ள தடுப்பணைக்கான கட்டுமானப் பணியை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக ஆற்றின் குறுக்கே கான்கிரீட் தளம் அமைக்க நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இரவு, பகலாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பணிகள் நடைபெற்று வரும் வேகத்தைக் கணக்கிட்டால் ஒரு சில நாள்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுவிடும் என தெரியவருகிறது.
போலீஸார் குவிப்பு: தேக்குவட்டை பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி அப்பகுதியில் அதிக அளவிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதிக்கு செல்லும் சாலைகளான சாவடியூர், சாலையூர் ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அவ்வழியாக செல்லும் தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கின்றனர்.
இது குறித்து மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் கூறும்போது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் காவிரி, அதன் கிளை நதிகளில் எந்தவித கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என்பது விதியாகும்.
தற்போது, பவானியின் குறுக்கே தேக்குவட்டை பகுதியில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவது, அங்கு எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் மூலம் உறுதியாகியுள்ளது.
இதில், தமிழகத்தின் ஒப்புதலைப் பெறாமலும், நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும் கட்டுமானப் பணிகளைக் கேரள அரசு தொடங்கியுள்ளது கண்டனத்துக்குரியது. ஆனால், தடுப்பணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து கவலைப்படாமல் தமிழக அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
இப் பணியை விரைந்து தடுக்காவிட்டால், ஒரு சில தினங்களில் கேரள அரசு தடுப்பணையை அமைத்துவிடும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com