தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஏற்கும் அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள்.
தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஏற்கும் அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள்.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு: முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் முதல் முறையாக பங்கேற்றனர்.
சட்டப் பேரவை கூட்டத் தொடர் இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, திங்கள்கிழமை காலை 10 மணிக்குக் கூடியது. கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றது. காலை 10.45 மணியளவில், மூன்று கேள்விகள் முடிவுற்ற நிலையில் பேரவையை காலை 11.15 மணி வரை பேரவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
தியாகிகள் தினத்தை ஒட்டி, முதல்வர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்வில் அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களும் பங்கேற்கும் வகையில், பேரவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவிப்புச் செய்தார்.
தீண்டாமை உறுதிமொழி:
பேரவைத் தலைவரின் அறிவிப்பைத் தொடர்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ வீரர்கள் மைதானத்தில் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அனைத்து அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் என அனைவருக்கும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்து வைத்தார்.
அதன்படி, இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகனாகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.
அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்துக்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதை உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றுக்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் உளமார உறுதியளிக்கிறேன் என உறுதிமொழியை முதல்வர் செய்து வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்: பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களும், இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இதுபோன்ற உறுதிமொழி ஏற்பில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பது நீண்ட காலங்களுக்குப் பிறகு இப்போது நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com