ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பாடநூல்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை விலையில்லா மற்றும் விற்பனை பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பாடநூல்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை விலையில்லா மற்றும் விற்பனை பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தேவையான விலையில்லா பாடநூல்கள், விற்பனை பாடநூல்களை கீழ்கண்டவாறு அச்சிட்டு தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் விவரம் (பிரதிகளில்):
முதல் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை (முதல் பருவம் மட்டும்): விலையில்லா பாடநூல்கள் - 1.22 கோடி பிரதிகள், விற்பனை பாடநூல்கள்- 79.77 லட்சம் பிரதிகள், பிற மொழி பாடநூல்கள்- 1.35 லட்சம் பிரதிகள்.
10-ஆம் வகுப்பு (ஆண்டு பதிப்பு): விலையில்லா பாடநூல்கள்- 39.48 லட்சம் பிரதிகள், விற்பனை பாடநூல்கள்- 15.51 லட்சம் பிரதிகள்.
பிளஸ் 1 வகுப்பு (ஆண்டு பதிப்பு): விலையில்லா பாடநூல்கள்- 59.12 லட்சம் பிரதிகள், விற்பனை பாடநூல்கள் 20.50 லட்சம் பிரதிகள்.
பிளஸ் 2 வகுப்பு (ஆண்டு பதிப்பு): விலையில்லா பாட நூல்கள்- 59.45 லட்சம், விற்பனை பாட நூல்கள் - 23.59 லட்சம்.
விலையில்லா பாட நூல்கள் அனைத்தும் தொடர்புடைய 67 கல்வி மாவட்ட அலுவலகங்களின் தேவைக்கேற்ப 100 சதவீதம் அனுப்பப்பட்டு அந்தப் பாடநூல்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் நேரடியாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளி திறக்கும்போது பாட நூல்கள் மாணவர்களுக்கு உறுதியாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விற்பனை பாட நூல்கள்: கடந்த ஆண்டு முதல் விற்பனை பாடநூல்களை சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 12,240 பள்ளிகள் பாடநூல்களின் தேவையை ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ளன. அதற்கேற்ப பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இணையதளம் மூலம்...: பாடநூல்களை www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பெறலாம். தமிழகத்தில் உள்ள பாடநூல் கழகத்தின் 22 வட்டார கிடங்குகளிலும் 100 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடநூல்கள் நிகழாண்டு ஏப்ரல் 14 முதல் இணையதளத்தின் மூலமும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான ஒன்று முதல் பத்தாம் வகுப்புக்கான தமிழ் பாடநூல்கள் ஏப்ரல் 25-ஆம் தேதியிலிருந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
1 முதல் 9 வகுப்பு வரையிலான பாடநூல்கள் மே 25-ஆம் தேதியிலிருந்தும், பிளஸ் 1 வகுப்புக்கான பாடநூல்கள் மே 26-ஆம் தேதியிலிருந்தும் விற்கப்பட்டு வருகின்றன.
சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த மே 27 வரை ரூ.39.13 கோடி மதிப்பில் பாடநூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்த பள்ளிகளுக்கு 22 வட்டார அலுவலகங்கள் மூலமாக பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அஞ்சல் மூலம் பெறலாம்: பாடநூல்களை இணைய தளத்தின் மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் தனிநபர்கள் அவர்கள் குறிப்பிடும் முகவரியிலேயே அஞ்சல் வழியாகப் பெற்றுக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது சேவை மையம் (சிஎஸ்சி) மூலமாகவும் பாடநூல்களை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்த பாடநூல்கள் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்பதால் விற்பனை நோக்கில் ஒரே தலைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடநூல்களை பதிவு செய்து வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் செயல் தடுக்கப்பட்டுள்ளது. பாடநூல் கழகத்தின் தலைமையிடத்தில் (சென்னை) பாடநூல்கள் விற்பனைக்கென பிரத்யேக விற்பனை மையங்கள் ஏற்படுத்தி பாடநூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அண்ணா நூலகத்தில் ஏற்பாடு: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமை நூலகத்திற்கும் போட்டித்தேர்வுக்கு பயன்படும் வண்ணம் 6 முதல் 12 வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாடநூல் விற்பனை நிலையத்தை அமைக்கும் நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com