கரை புரளும் காவிரி: காயும் கடைமடை

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, மேட்டூர் அணை இருமுறை முழு கொள்ளளவை எட்டிய நிலையிலும், கடைமடை பகுதிகளை காவிரி நீர் எட்டாதது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை
நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியில் வானம் பார்த்த பூமியாக கிடக்கும் விளைநிலங்கள்.
நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியில் வானம் பார்த்த பூமியாக கிடக்கும் விளைநிலங்கள்.


கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, மேட்டூர் அணை இருமுறை முழு கொள்ளளவை எட்டிய நிலையிலும், கடைமடை பகுதிகளை காவிரி நீர் எட்டாதது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஜூலை மாதத்தில் நீடித்த கனமழை காரணமாக, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபிணி அணைகளிலிருந்து சுமார் 1.25 லட்சம் கனஅடிக்கும் அதிகமான அளவில் தமிழத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, மேட்டூர் அணை 39-ஆவது முறையாக 120 அடியை எட்டியது.
மேட்டூரிலிருந்து ஜூலை 19-ஆம் தேதி சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அதிகரித்து காணப்பட்ட நீர் வரத்து, அணையின் முழு கொள்ளளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் 30 ஆயிரம் கனஅடியிலிருந்து 50 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. 
கல்லணையிலிருந்து காவிரியில் 9 ஆயிரம் கனஅடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதே போல, கல்லணைக் கால்வாயில் 2,750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் திறப்பு அளவுகள், காவிரி மற்றும் வெண்ணாற்றின் உச்சபட்ச தண்ணீர் திறப்பு அளவீடுகள்தான் எனினும், காவிரியின் கடைமடை பகுதிகளான நாகை மாவட்டத்தின் திருமருகல் உள்பட பல பகுதிகளை இதுவரை தண்ணீர் எட்டவில்லை.
கல்லணையிலிருந்து ஜூலை 22-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் ஆக. 2-ஆம் தேதி அளவிலேயே திருமருகல் முடிகொண்டான் ஆற்றில் கிடைத்தது. ஆனால், ஆற்றைத் தொட்ட தண்ணீர், ஒரு வாய்க்காலைக் கூட எட்டாதது விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில், முடிகொண்டான் ஆறு, திருமலைராஜனாறு, அரசலாறு, வடக்குப் புத்தாறு, தெற்குப் புத்தாறு, வளப்பாறு, நரிமணியாறு, பிராவடையானாறு, ஆழியானாறு ஆகியவற்றின் மூலம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் சுமார் 13 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர் சாகுபடி நடைபெறுவது வழக்கம் என்ற நிலையில், காவிரி கரை புரளும் காலத்திலும் கூட, வாய்க்கால்களில் தண்ணீர் கிடைக்கவில்லை. 
கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஏறத்தாழ 20 நாள்களைக் கடந்த நிலையிலும், ஆறுகளில் போதுமான தண்ணீர் கிடைக்காததும், வாய்க்கால்களின் பாசனம் உறுதி செய்யப்படாததாலும் பல கிராமங்களின் சம்பா நெல் சாகுபடி, தொடர்ந்து கேள்விக் குறியாகவே உள்ளது. ஏறத்தாழ இதே போன்ற நிலையே காவிரி வடிநிலக் கோட்டப் பகுதிகளிலும் நீடிக்கிறது.
ஆற்றுப் பாசனத்தை நம்பி நேரடி விதைப்பு மேற்கொள்ளப்பட்ட பல இடங்களில் நெல் பயிர்கள் தற்போது, தண்ணீரின்றி காயத் தொடங்கியுள்ளன. இதே போல, உழவு செய்யப்பட்ட விளைநிலங்கள் வானத்தையும், வாய்க்காலையும் எதிர்பார்த்துக் காத்துள்ளன.
ஜூலை 22-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டபோது, தூர் வாரும் பணி, மதகுகள் சீரமைப்புப் பணி என்ற பெயரில் ஆங்காங்கே தண்ணீர் தடுக்கப்பட்டதும், பல வாய்க்கால்கள் தூர்வாரப்படாததும் கடைமடை பகுதிகளை காவிரி வந்தடையாததற்குக் காரணம் என்கின்றனர் விவசாயிகள். 
இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் வி. தனபாலன் தெரிவித்தது : கல்லணைக்குக் கீழே 1,505 ஏ சேனல் வாய்க்கால்கள் உள்ளன. இதில், பெரும்பாலான வாய்க்கால்கள் தூர்வாரப்படாததே கடைமடை பகுதிகளை காவிரி நீர் வந்தடையாததற்குக் காரணம். ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதுடன் கடமை முடிந்ததாகக் கருதாமல், வாய்க்கால்களின் பாசனத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றார்.
இதுகுறித்து வெண்ணாறு வடிநிலக் கோட்ட மேற்பார்வைப் பொறியாளர் திருவேட்டைசாமியிடம் கேட்ட போது, மதகுகள் சீரமைப்பு, தூர்வாரும் பணி உள்ளிட்டவைகளுக்காக எந்தப் பகுதியிலும் ஆற்றுப் பாசனம் தடுக்கப்படவில்லை. தற்போது கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் வெண்ணாற்றில் விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி என்ற அளவில் பெறப்படுகிறது. வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் கடைமடை பகுதிகளை தண்ணீர் வந்தடையும் என்றார்.
குறுவைக்கும், சம்பாவுக்கும் இடைப்பட்ட காலத்தில், இயற்கை கொடையால் கிடைக்கப் பெற்ற தண்ணீரைக் கொண்டு வேளாண் பணிகளைத் தொடங்கிய விவசாயிகள், காவிரி கரைபுரளும் காலத்திலும், கடைமடை விளை நிலங்கள் காயும் நிலை நீடிப்பதால், வாழ்வாதாரம் குறித்த அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
வாய்க்கால்களை அடையாத ஆற்றுப் பாசனம் காகிதத்தில் எழுதப்பட்ட சர்க்கரையாகதான் இருக்குமே தவிர, இனிப்பைத் தராது. எனவே, வாய்க்கால் பாசனத்தை உறுதி செய்யும் வரை முறைவைக்காமல் தண்ணீர் திறக்க பொதுப் பணித் துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com