எழுத்தாளர்கள் ராஜ் கெளதமன், சமயவேலுக்கு விளக்கு விருது

எழுத்தாளர்கள் ராஜ் கெளதமன், சமயவேலுக்கு 2016-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
எழுத்தாளர்கள் ராஜ் கெளதமன், சமயவேலுக்கு விளக்கு விருது
Published on
Updated on
1 min read

எழுத்தாளர்கள் ராஜ் கெளதமன், சமயவேலுக்கு 2016-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
அமெரிக்கத் தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பின் சார்பில் 1996-ஆம் ஆண்டு முதல் புதுமைப்பித்தன் நினைவு விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள இந்த விருது, தமிழின் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பா, பிரமிள், பூமணி, சி.மணி, ஞானக்கூத்தன் உள்பட பலர் இவ்விருது பெற்றுள்ளனர்.
2016-ஆம் ஆண்டு விருதுக்கு எழுத்தாளர்கள் ராஜ் கெளதமனையும், சமயவேலுவையும் நடுவர்களாக அம்பை, தமிழச்சி, பெருந்தேவி ஆகியோர் கொண்ட குழு தேர்ந்தெடுத்துள்ளது. 
எழுத்தாளர் ராஜ் கெளதமன் விருதுநகரில் 1950-இல் பிறந்தவர். புதுச்சேரி காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ் ஆகிய நாவல்களுடன் 17 ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளார். 
சமூக வரலாற்றெழுத்துக்கும், திறனாய்வுக்கும் நவீனத்துவத்துக்கும் அளப்பரிய பங்காற்றியதற்காக ராஜ் கெளதமனுக்கு இந்த விருதை அளிப்பதாக விளக்கு அமைப்பு தெரிவித்துள்ளது. 1957-இல் வெம்பூரில் பிறந்த கவிஞர் சமயவேல் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, தற்போது மதுரையில் வசிக்கிறார். காற்றின் பாடல், அகாலம், அரைக்கணத்தின் புத்தகம், மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் உள்ளிட்ட 6 கவிதைத் தொகுப்புகளையும், நான் டைகர் இல்லை என்ற சிறுகதை தொகுப்பையும், ஆண் பிரதியும் பெண் பிரதியும் என்ற கட்டுரைத் தொகுப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்க் கவிதைப் பரப்பில் தனித்ததொரு அடையாளத்துடன், அதன் செழுமைக்கு செறிவான பங்களிப்பதைச் செய்திருப்பதற்காக சமயவேலுக்கு இந்த விருதை அளிப்பதாக விளக்கு அமைப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com