மொழியின் அழகை எடுத்துக் காட்டியவர் கண்ணதாசன்: எழுத்தாளர் மாலன் புகழாரம்

மொழி மிகவும் அழகாகவும், எளிமையாகவும் இருக்கிறது என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர் கண்ணதாசன் என்று எழுத்தாளர் மாலன் புகழாரம் சூட்டினார்.
மொழியின் அழகை எடுத்துக் காட்டியவர் கண்ணதாசன்: எழுத்தாளர் மாலன் புகழாரம்
Published on
Updated on
1 min read

மொழி மிகவும் அழகாகவும், எளிமையாகவும் இருக்கிறது என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர் கண்ணதாசன் என்று எழுத்தாளர் மாலன் புகழாரம் சூட்டினார்.
 கோவை கண்ணதாசன் கழகம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கண்ணதாசன் பிறந்த நாளான ஜூன் 24-ஆம் தேதி, படைப்பிலக்கியம், கலைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கண்ணதாசன் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
 இந்த ஆண்டுக்கான கண்ணதாசன் விருதை எழுத்தாளர் மாலன், திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் நல்ல ஜி.பழனிசாமி வழங்கினார்.
 இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மாலன் பேசியதாவது: ஒரு பத்திரிகை ஆரோக்கியமாகவும், விற்பனையிலும் சிறப்பாக இருக்கிறதா என்பதை கோவையில் விற்பதை வைத்தே கணித்து விடலாம். நூற்பாலைகள் இருக்கும் இடத்தில் நூலுக்கு எப்படி ஆதரவு இல்லாமல் போகும்?
 விருதுகளுக்கு என்று தனி சிறப்புகள் கிடையாது. கொடுப்பவர்களாலும், பெறுபவர்களாலும்தான் விருதுகள் சிறப்புப் பெறுகின்றன.
 மொழி மிகவும் அழகாகவும், எளிமையாகவும் இருக்கிறது என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர் கண்ணதாசன். மொழி எளிமையாக இருக்கும், எளிமையாக இருப்பது வலிமையாகவும் இருக்கும் என்பதைக் காட்டிக் கொடுத்தவர் பாரதியார்.
 பாரதியின் மொழியில் உணர்ச்சி இருக்கும், அழகு இருக்காது. ஆனால், கண்ணதாசனின் மொழியில் அழகும் இருக்கிறது. அவரது தனிப்பாடல்களில் காணப்படும் அறச்சீற்றம் இதுவரையில் எந்தக் கவிஞருக்கும் இல்லை. அது இன்றைக்குத் தேவை என்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார்.
 இந்த விழாவில் வாழ்த்துரை வழங்கிய கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, சரஸ்வதியை ஆண் உருவமாகப் பார்க்க வேண்டும் என்றால் கண்ணதாசனைப் பார்த்தால் போதும். கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவடிகளையும் திருக்குறளையும் கம்ப ராமாயணத்தையும் சங்க இலக்கியத்தையும் நமக்குப் புரியும் மொழியில் சொன்ன கவிஞன் கண்ணதாசன் மட்டும்தான். உழைப்பாளிக்கும் ரிக்ஷா தொழிலாளிக்கும் இலக்கியம் சொந்தமாக முடியும் என்பதைக் காட்டியவர் கண்ணதாசன் என்றார்.
 பின்னர், பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஏற்புரையாற்றினார். முன்னதாக, எழுத்தாளர் மாலன், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு விருதுடன் பாராட்டுப் பட்டயம், தலா ரூ.1 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது.
 இவ்விழாவில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் ம.கிருஷ்ணன், பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் செயலாளர் மரபின்மைந்தன் முத்தையா, கண்ணதாசன் கழகப் பொறுப்பாளர் எம்.குணசேகரன், விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம், கங்கா மருத்துவமனை தலைவர் மருத்துவர் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com