ஜடாயு தீர்த்தத்தில் தாமிரவருணி மஹா ஆரத்தி

திருநெல்வேலி அருகே அருகன்குளத்தில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி மஹா ஆரத்தி வியாழக்கிழமை மாலையில்
ஜடாயு தீர்த்தக்கட்டத்தில் நடைபெற்ற மஹா ஆரத்தி.
ஜடாயு தீர்த்தக்கட்டத்தில் நடைபெற்ற மஹா ஆரத்தி.
Published on
Updated on
2 min read


திருநெல்வேலி அருகே அருகன்குளத்தில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி மஹா ஆரத்தி வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று வழிபாடு செய்தார்.
தாமிரவருணி மஹா புஷ்கரம் விழாவையொட்டி, அருகன்குளம் ஜடாயு தீர்த்தத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிதாக படித்துறை கட்டப்பட்டது. 144 அடி அகலத்தில் 7 படிகளுடன் கருங்கல்லால் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. தாமிரவருணி மற்றும் அகஸ்தியர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தாமிரவருணி மஹா புஷ்கரம் தொடங்கியுள்ள நிலையில் படித்துறையை மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தல், மஹா ஆரத்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து குத்துவிளக்கேற்றிய ஆளுநர், தாமிரவருணி நதியில் புனித நீரை ஊற்றினார். காசியில் இருந்து வந்திருந்த 54 வேத விற்பன்னர்கள் மந்திரங்களை உச்சரித்தனர். 7 ரிஷிகள் தாமிரவருணி அன்னைக்கு ஆரத்தி எடுத்து வழிபடுவதை உணர்த்தும் வகையில் 7 மேடைகளில் வேதவிற்பன்னர்கள் நின்று ஆரத்தி எடுத்தனர். பின்னர், ஆற்றில் மலர் தூவி வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சடகோப ராமானுஜ ஜீயர், அகில பாரதிய துறவியர்கள் சங்கத்தின் செயலர் ராமானந்தா சுவாமி, புஷ்கர ஒருங்கிணைப்பாளர் பக்தானந்தா, தமிழக அரசின் ஓய்வுபெற்ற கூடுதல் செயலர் ராஜாராம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கி.பாஸ்கர், எட்டெழுத்து பெருமாள் தருமபதி கோயில் நிர்வாகிகள் வரதராஜபெருமாள் சுவாமி, ராமலட்சுமியம்மாள், காவல்துறையின் தென்மண்டல தலைவர் சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவர் கபில்குமார் சராட்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே.அருண்சக்திகுமார், அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல முதல்வர் சக்திநாதன், வழக்குரைஞர் மீனாட்சிசுந்தரம், பெருமாள்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
அருகன்குளம், நாரணம்மாள்புரம், தாழையூத்து, ராஜவல்லிபுரம், சீவலப்பேரி, திருநெல்வேலி சந்திப்பு, பொட்டல், பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரத்தியில் பங்கேற்றனர்.

தீர்த்தக்கட்டத்தின் சிறப்பம்சம்
ராமாயணத்தில் ராமரின் வனவாசத்தின்போது ராவணன் சீதாபிராட்டியை தூக்கிச் சென்றார். அப்போது காவலுக்காக இருந்த ஜடாயு, ராவணனை வழிமறித்து போர் செய்தார். போரில் வெற்றி பெற முடியாது என உணர்ந்த ராவணன், ஜடாயுவின் இறக்கைகளை சந்திரஹாஸ வாளால் வெட்டி வீழ்த்துகிறான். ராமர்-லட்சுமணருக்கு ஜடாயு தகவலை தெரிவித்த பின்பு, அவரது வேண்டுதலுக்கேற்ப லட்சுமிநாராயணராக விஷ்ணு காட்சியளித்தார். ஜடாயு உயிர்நீத்த இடத்தில் இந்தத் தீர்த்தக்கட்டம் உள்ளது. இது, ஜடாயுவுக்கு திலதர்ப்பணம் அளித்து மோட்சம் கொடுத்த இடமும் ஆகும்.


ராவண தீர்த்தமானது பிகார் மாநிலத்தில் உள்ள தேவ்கரில் உள்ளது. இத் தீர்த்த குண்டத்தின் கரையில் உள்ள கல்வெட்டில் சம்ஸ்கிருத மொழியில் ஜடாயு, ராம, சிவ தீர்த்த குண்டங்கள் பற்றிய குறிப்பு இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com