மஹா புஷ்கரம்: தாமிரவருணியில் ஆதீனங்கள், ஜீயர்கள் புனிதநீராடல்

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, திருநெல்வேலி தைப்பூச மண்டப படித்துறையில் ஆதீனங்கள், ஜீயர்கள் வெள்ளிக்கிழமை புனிதநீராடினர்.
மஹா புஷ்கரம்: தாமிரவருணியில் ஆதீனங்கள், ஜீயர்கள் புனிதநீராடல்

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, திருநெல்வேலி தைப்பூச மண்டப படித்துறையில் ஆதீனங்கள், ஜீயர்கள் வெள்ளிக்கிழமை புனிதநீராடினர்.
 தாமிரவருணி புஷ்கர குழு சார்பில், திருநெல்வேலி தைப்பூச மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை திருப்பள்ளியெழுச்சி, மங்கள நாகசுர இசை ஆகியவை நடைபெற்றன. அதன்பிறகு, கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் இருந்து ஆதீனங்கள், ஜீயர்கள் தைப்பூசமண்டப படித்துறைக்கு வந்தனர். பஞ்சவாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்க, தாமிரவருணி அன்னையையும், மும்மூர்த்திகளையும் வழிபட்ட பிறகு தாமிரவருணி நதியில் புனிதநீராடினர். அப்போது, நமசிவாய மற்றும் கோவிந்தா முழக்கங்களுடன் பக்தர்களும் நீராடினர்.
 திருவாவடுதுறை தம்பிரான் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், திருக்குறுங்குடி எம்பெருமானார் ஜீயர், சிவபுரஆதீனம் திருநாவுக்கரச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வரன் சுவாமிகள், துலாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய தேசிக சுவாமிகள், புதுக்கோட்டை சந்திரசேகர மஹா சுவாமிகள், ராமகிருஷ்ண மடத்தின் பக்தானந்த மஹராஜ் ஆகியோர் ஒரே நேரத்தில் தாமிரவருணியில் நீராடியதைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். புனிதநீராடியதும் ஆதீனங்கள் மற்றும் ஜீயர் சுவாமிகளை பக்தர்கள் வணங்கினர்.
 வெளிமாநில பக்தர்கள்: தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை திரண்டனர். அவர்கள் தாமிரவருணியில் நீராடிய பிறகு அருள்மிகு நெல்லையப்பர் கோயிலுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 தாமிரவருணி மஹா புஷ்கர விழா வரும் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரையிலுள்ள 143 தீர்த்தகட்டங்களிலும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் நீராடலாம் என காவல் துறை அறிவித்துள்ளது. மக்கள் அதிகம் குவியும் முக்கிய தீர்த்தகட்டப் படித்துறைகளில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் தனித்தனியே நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 புஷ்கர விழாவையொட்டி, தாமிரவருணியில் நீராட ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் விமானம், ரயில், பேருந்துகள் மூலம் திருநெல்வேலிக்கு வந்தனர்.
 இதுகுறித்து விஜயவாடாவைச் சேர்ந்த பிரகாஷ்-மணி தம்பதி கூறியது:
 ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைப் பொருத்தவரை புஷ்கர நாள்களில் புனித நீராடல் மிக முக்கிய கடமைகளில் ஒன்று. சூரியன், சந்திரன், நதி, இறைவன், முன்னோரை எண்ணி இந்த நாள்களில் நாங்கள் வழிபடுகிறோம். மனிதன் உயிர்வாழ நீரே ஆதாரமாக உள்ளது. அதை நமக்குத் தரும் நதியைப் போற்றி நன்றி சொல்வது மிகவும் முக்கியம். விசாகப்பட்டினம், விஜயவாடா, நெல்லூர், கர்னூல், காக்கிநாடா, திருப்பதி, கடப்பா, ராஜமுந்திரி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தாமிரவருணி மஹா புஷ்கர விழாவில் நீராட உள்ளனர்.
 ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்துள்ள எங்கள் குடும்பத்தினர், தைப்பூச படித்துறையில் நீராடினோம். இங்கிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள பாபநாசம், அகஸ்தியர் அருவிக்குச் செல்ல முடிவு செய்துள்ளோம். அங்கிருந்து முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்குச் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு, ஊர்திரும்ப உள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com