ஆர்.எம்.வீ. தயாரிப்பில் எழுதிய பாடல்கள் - கவிஞர் முத்துலிங்கம்

அருளாளர் அண்ணன் ஆர்.எம்.வீ.யின் சத்தியா மூவிஸ் தயாரித்த பத்துப் படங்களில் பாடல் எழுதியிருக்கிறேன். இதில் சத்தியா மூவிஸ் தயாரிப்பில் முதலில் எழுதிய படம் "வெள்ளாடு வேங்கையாகிறது'.
ஆர்.எம்.வீ. தயாரிப்பில் எழுதிய பாடல்கள் - கவிஞர் முத்துலிங்கம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 47

அருளாளர் அண்ணன் ஆர்.எம்.வீ.யின் சத்தியா மூவிஸ் தயாரித்த பத்துப் படங்களில் பாடல் எழுதியிருக்கிறேன். இதில் சத்தியா மூவிஸ் தயாரிப்பில் முதலில் எழுதிய படம் "வெள்ளாடு வேங்கையாகிறது'. சிவகுமாரும், சரிதாவும் நடித்த படம்.
கள் குடித்துவிட்டுப் பாடுவதைப் போல ஒரு காட்சி.
ஆண் :- இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ளே - எனக்கு
என்னமோ பண்ணுது உள்ளே
உன் - கண்ணில் இருந்து ரெண்டு அம்பு பறந்து
நெஞ்சில் வந்து பாயுதடி
அது - பாயும் பொழுது இதைப் போடும்பொழுது
பூமி ரொம்ப சுத்துதடி
பெண் :- வேண்டியதைக் கேளுங்க சாமி - நான் 
கேட்டதைத் தருகிற பூமி
இந்த - மங்கை உடம்பு நீங்க தின்னும் கரும்பு
போதைதரும் புதுவிருந்து
இந்தத் - தங்கக் கொலுசு உங்க ரொக்கப் பரிசு
பாருங்கய்யா இதைப் பக்கம் இருந்து''
இப்படிப் போகும் அந்தப் பாடல். அந்தக் காட்சிக்கு ரொம்பப் பொருத்தமான பாடலென்று ஆர்.எம்.வீ.யே பாராட்டிச் சொல்லியிருக்கிறார். இது எம்.எஸ். விசுவநாதன் இசையமைத்த படம்.
அடுத்து அந்த நிறுவனத்தில் நான் எழுதிய இரண்டாவது படம் "ராணுவ வீரன்'. இது ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்த படம். இந்தப் படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதினேன். தேங்காய் சீனிவாசனும், இன்னொருவரும் சேர்ந்து பாடுவதைப் போல ஒரு காட்சி. இதுவும் ஒருவகையில் போதையான பாட்டுத்தான். இந்தப் படத்திற்கும் இசை எம்.எஸ். விசுவநாதன்தான்.
"மல்லிகைப் பூ வாசத்திலே - உன்னை
மல்லுக்கட்டத் தோணுதடி
செங்கரும்பு அங்கங்களை - கண்ணுரெண்டும்
தின்றுவிடப் பார்க்குதடி'' 
என்று தொடங்கும் அந்தப் பாடல்.
அந்தப் பாடலை நான் எழுதி முடித்த பிறகு இன்னொரு காட்சிக்குப் பாடல் எழுத வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜானை அழைத்திருந்தார்கள். நான் கொஞ்ச நேரம் அங்கிருந்தேன். அப்போது வலம்புரி ஜானிடம் காட்சியைச் சொன்னார்கள்.
தன் தங்கையின் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்தவன், தன் திருமணத்திற்கு மட்டும் ஏன் காலதாமதம் செய்கிறான் என்று அவன் காதலி அவன்மீது கோபத்தில் இருக்கிறாள். அதனால் அவனுடன் பேச மறுக்கிறாள். ஏன் பேச மறுக்கிறாய் என்று காதலன் கேட்பதுபோல் பாடல் ஆரம்பமாக வேண்டும் என்று காட்சியை விளக்கினார் டைரக்டர்.
"மெட்டுக்குப் பாட்டு எழுதுவீர்களா?'' என்று விசுவநாதன் அண்ணன் கேட்டார். "எழுதுவேன்'' என்றார் வலம்புரி ஜான். உடனே,
"தன்னா னான னனனா - தனத்
தன்னா னான னனனா
தனன தனனா தானன் னனன்னா
தான தனனா தானன் னனன்னா''
என்று ஆர்மோனியத்தில் பல்லவிக்கான மெட்டை வாசித்துக் காட்டினார் எம்.எஸ்.வி.
வலம்புரி ஜான் யோசித்துக் கொண்டிருந்தார். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை மெட்டைப் பாடிக் காட்டினார். அப்புறம் இரண்டு முறை பாடிக் காட்டினார். வலம்புரிஜான் அப்போதும் எழுதவில்லை. பத்து நிமிடம் கழித்து அந்த மெட்டை என்னைப் பார்த்து வாசித்துக் காட்டினார். என்னை எதுவும் வார்த்தை சொல்லச் சொல்கிறாரோ என்ற எண்ணத்தில், 
"தன்னா னான தனனா - தனத்
தன்னா னான தனனா'' என்ற தத்தகாரத்தைக் கேட்டவுடன்
"சொன்னால் தானே தெரியும் - எனைக் 
கண்ணால் பாரு புரியும்''
என்று வார்த்தையைச் சொன்னேன். ஆர்.எம்.வீ., எம்.எஸ். விசுவநாதன் மற்றும் கதை இலாகாவைச் சேர்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
"முத்துலிங்கம் உங்கள் பாட்டு முடிந்துவிட்டது. இது ஜான் எழுத வேண்டிய பாட்டு. நீங்கள் புறப்படலாம்'' என்றார் ஆர்.எம்.வீ. நானும் வந்துவிட்டேன்.
இரண்டு நாள் கழித்து அந்தக் கம்பெனியிலிருந்து ஒருவர் வந்து, "ஆர்.எம்.வி உங்களை அழைத்து வரச் சொன்னார்'' என்று அழைத்துச் சென்றார். அங்கே எம்.எஸ்.வி ஆர்மோனியப் பெட்டியுடனும் தபேலா, வயலின் வாசிக்கக் கூடிய கலைஞர்களுடனும் அமர்ந்திருந்தார்.
"சொன்னால்தானே தெரியும் - எனைக்
கண்ணால் பாரு புரியும்''
என்ற வரியைப் போல பொருத்தமான வரி அமையவில்லை. ஆக, நீங்களே அந்தப் பாடலை எழுதிவிடுங்கள்'' என்றார் ஆர்.எம்.வீ. மறுபடி மெட்டை வாசித்துக் காட்டினார் எம்.எஸ்.வி.
"தனன னனனா தானன் னனனா
தான னனனா தானன் னனன்னா''
என்று பாடியவுடன்,
"அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு''
என்று எழுதிக் காட்டினேன். "நன்றாக இருக்கிறது'' என்று சரணத்திற்கு டியூன் போட்டார். மறுநாள் டியூனுக்கேற்ப நான்கு சரணங்கள் எழுதிச் சென்றேன். அதில் மூன்றைத் தேர்ந்தெடுத்தார்கள். மூன்று சரணமும் படத்தில் வரும். அதில் ஒரு சரணம் இப்படி வரும்,
பெண் :- கோழியும் இங்கே சேவலும் இங்கே
குடும்பத்தைப் பார் இங்கே
ஜோடிகளின்றிப் பறவைகள் கூட
வாழ்வது தான்எங்கே
ஆண் :- பறவைகள் நிலைவேறு
மனிதனின் கதைவேறு
மனிதர்கள் இனம்போலவே
பறவைகள் கடமையை அறியாது''
இந்தப் பாடல் அந்தப் படத்தில் ஓரளவு பிரபலமானது. எஸ்.பி. பாலசுப்பிரமணியமும், எஸ்.பி. சைலஜாவும் பாடிய பாடல். படத்தின் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்.
இதற்கடுத்து ரஜினிகாந்த் நடித்த "மூன்றுமுகம்' என்ற படத்திலும், "தங்கமகன்' என்ற படத்திலும் எழுதியிருக்கிறேன். "மூன்றுமுகம்' படத்தின் இசையமைப்பாளர் சங்கர்கணேஷ். "ஆசையுள்ள ரோசக்கார மாமா' என்ற பாடலை இதில் எழுதினேன். படம் நூறுநாள் ஓடியது. இதில் என் பாடல் அவ்வளவு பிரபலமாகவில்லை. இதை இயக்கியவர் ஏ.ஜெகந்நாதன்.
"தங்கமகன்' படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இதில் எல்லாப் பாடல்களும் பிரபலம். இதில் நான் எழுதிய பாடல்,
"வா வா பக்கம் வா
பக்கம்வர வெக்கமா
மன்மத மோகத்திலே
வாலிப வேகத்திலே
ஏங்குது இளமை இன்பம்தரும் பதுமை
இனிமை காணவா''
என்று தொடங்கும். ரஜினிகாந்தும், பூர்ணிமா ஜெயராமும் இந்தப் பாடல் காட்சியில் நடித்திருப்பார்கள். இப்போது அவர் பூர்ணிமா ஜெயராம் இல்லை. பூர்ணிமா பாக்கியராஜ். எஸ்.பி. பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராமும் பாடிய பாடல். இதற்கும் ஏ. ஜெகந்நாதன்தான் டைரக்ஷன். நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்று. சத்தியா மூவிஸ் தயாரிப்பில் இளையராஜா இசையமைத்த முதல் படம் "தங்கமகன்'தான். இந்தப் பாடலில் வரக்கூடிய ஆங்கில வசனங்களைத் தாளத்திற்கு ஏற்ப எழுதியவர் டைரக்டர் ஜெகந்நாதன். ஆங்கிலத்தில் புலமைமிக்கவர் அவர்.
இதுபோல் கமல்ஹாசன் நடித்த "காக்கிச்சட்டை' படத்தில் ஒரு பாடல். சத்தியா மூவிஸ் கமலஹாசனை வைத்துத் தயாரித்த முதல் படம் இது. இதற்கும் இசை இளையராஜாதான். இதில் நான் எழுதிய பாடல்,
"பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள
ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக் கொள்ள
உள்ளம் துள்ளும்
தென்றல்வந்து உன்னைக் கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா''
என்று தொடங்கும்.
இந்தப் பாடல், அந்தப் படத்தின் வசனகர்த்தா ஏ.எல். நாராயணனுக்கு மிகவும் பிடித்த பாடல். அடிக்கடி அவர் இந்தப் பாடலைப் பாடுவார்.
அதில் இந்தச் சரணம் அவருக்கு மிகவும் பிடித்த சரணமென்று சொல்லியிருக்கிறார்.
ஆண் :- நீல நதிக் கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒருநாள்
உந்தன் பூவிதழ் ஓரத்தில் என்னை மறந்திருந்தேன் பலநாள்
பெண் :}வானத்து மீன்களை மேகம் மறைப்பதுபோல் தினமும்
எந்தன் மோகத்தை நாணத்தில் மூடி மறைத்திருந்தேன் மனதில்
ஆண் :- நாணம் யாவும் நூலாடை 
நானே உந்தன் மேலாடை
பெண் :-மங்கை இவள் அங்கங்களில்
உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே''
இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், 
பி. சுசீலாவும் பாடியிருப்பார்கள்.
கமல்ஹாசன் முதன்முதல் கதாநாயகனாக நடித்த "உணர்ச்சிகள்' என்ற படத்திற்கும் நான் பாடல் எழுதியிருக்கிறேன். ஷியாம் இசையில் "பெண்ணாலே போதை முன்னாலே எல்லாமே அதன் பின்னாலே' என்று ஆரம்பமாகும். இதை டி.எம். செüந்தரராஜன் பாடியிருப்பார். ஆனால் 
கமல்ஹாசன் நடித்த பல படங்கள் வெளிவந்த பிறகுதான் இது வெளிவந்தது. ஆர்.சி. சக்தி டைரக்ட் செய்த முதல் படம் இது. படம் சுமார்.
(இன்னும் தவழும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com