ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 50: "புதுவசந்தம்' படத்தால் விருது

'மகிழம்பூ' என்ற படத்தில் டி.பி. ராமச்சந்திரன் இசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல் ஒன்றுண்டு.
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 50: "புதுவசந்தம்' படத்தால் விருது
Published on
Updated on
3 min read

'மகிழம்பூ' என்ற படத்தில் டி.பி. ராமச்சந்திரன் இசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல் ஒன்றுண்டு.
""தனக்குத் தனக்கு என்று ஒதுக்காதே - செய்த
தர்மம் தலைகாக்கும் மறக்காதே
தனக்கு மிஞ்சித்தான் தானம் என்கின்ற
தத்துவம்பொய் அதை மதிக்காதே''
என்று ஒருவன் பாடுவான். அதற்கு அவன் மனச்சாட்சி இப்படிப் பாடும்.
""இருக்கு இருக்குஎன்று கொடுக்காதே - பணம்
இல்லாத காலத்தில் தவிக்காதே
தனக்கு மிஞ்சித்தான் தானம் என்கின்ற
தத்துவம் மெய் அதை மறக்காதே''
இதுபோன்று சரணத்திலும் நல்ல கருத்துகள் வரும்படி எழுதியிருப்பார்.
நானும் மாயவநாதனும் சென்னை வானொலி நிலையம் நடத்திய "குடும்பக் கட்டுப்பாடு' பற்றிய கவியரங்கில் கலந்துகொண்டு கவிதை பாடினோம். ""கவியரங்கத்தில்கூட இவ்வளவு நகைச்சுவையாகப் பாட முடியும் என்பதை உங்களிடத்தில்தான் தெரிந்து கொண்டேன்'' என்று என்னையும் என் கவிதையையும் பாராட்டிப் பேசினார்.
"மறக்கமுடியுமா' என்ற படத்தில் இவர் எழுத வேண்டிய பாடலுக்குத் தத்தக்காரம் சொல்லும்போது ""தானன னானா தானன னானா'' என்று சொல்வதற்குப் பதில் ""மாயவநாதன் மாயவநாதன் இதுதான் அளவு இதற்கு எழுதுங்கள்'' என்று இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி சொல்ல, தன்னைக் கிண்டல் செய்கின்றாரோ என்று நினைத்து எழுதாமல் கோபமாக எழுந்து போய்விட்டாராம். அதன் பிறகு அந்த மெட்டுக்கு கலைஞர் எழுதிய பாடல்தான்
""காகித ஓடம் கடலலை மேலே
போவது போலே மூவரும் போவோம்''
என்ற பிரபலமான பாடல்.
"பராசக்தி' படத்தில் 
"பூமாலை - நீயே புழுதி மண்மேலே - 
வந்தேன் தவழ்ந்தாய்'
என்ற பாடலும் மெட்டுக்கு ஏற்ப கலைஞர் எழுதிய பாடல்தான்.
கதை வசனமும் பாடல்களும் தானே எழுதவேண்டும் என்று கலைஞர் நினைத்திருந்தால் அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த கவிஞர்கள் பலர் திரைக்கு வராமலே போயிருப்பார்கள். அவர்களெல்லாம் வரவேண்டுமென்று காலம் தீர்மானித்திருந்த காரணத்தால்தான் கலைஞர் பாடல்கள் எழுதாமல் வசனத்தோடு நின்றுவிட்டார்.
ராயப்பேட்டை அஜந்தா ஓட்டலுக்கு எதிரில் இருந்த சந்திரபவன் என்ற தங்கும் விடுதியில் மாயவநாதனை அடிக்கடி சந்தித்திருக்கிறேன். அங்கு தோழர் ஜெயகாந்தனையும் பார்த்திருக்கிறேன் ஆனால், ஜெயகாந்தனோடு அப்போது எனக்குப் பழக்கம் கிடையாது. "முரசொலி' பத்திரிகையில் நான் பணியாற்றிய காலம் அது.
மாயவநாதன் தன் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளைச் சொல்லியிருக்கிறார். ஒருமுறை காசில்லாமல் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு நடந்தே வந்ததாகவும் சொல்லியிருக்கிறார். தன்மானம் மிகுந்த கவிஞர். யாரிடத்திலும் எதுவும் கேட்க மாட்டார். பாடல் எழுத வாய்ப்புக் கேட்க மட்டும்தான் தெரியும்.
ஒருநாள் சாலையில் நடந்து செல்லும்போது வெயில் தாளாமல் 
மயங்கிவிழுந்து கழுத்து முறிந்து இறந்துவிட்டார். அவர் உடலை ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர்தான் உதவி செய்தார். இன்ன நாளில் இது நடக்கும் என்று காலதேவன் எழுதி வைத்திருக்கும்போது அதை மாற்றி எழுத யாரால் இயலும்?
காலச்சக்கரத்தில்தான் நமது வாழ்க்கை உருண்டுகொண்டிருக்கிறது. ஆட்சிச் சக்கரமும் அப்படித்தான். இன்று ஆளும்கட்சியாக இருப்பது நாளை எதிர்க்கட்சியாகும். இன்று எதிர்க்கட்சியாக இருப்பது நாளை ஆளுங்கட்சியாகும். இதுதான் உலக இயல்பு.
ஒரு நாளைக்கு இரவு பகல் என்று இரு பெரும்பொழுது இருப்பதைப் போன்று, ஏறுவரிசை இறங்கு வரிசையென்று சங்கீதத்தில் ஆரோகணம், அவரோகணம் இருப்பதைப் போன்று வாழ்க்கையில் ஏற்றமும் தாழ்வும் மாறி மாறிவரும். எதற்கும் கலங்கக் கூடாது. துணிந்து நிற்பவனுக்குத் துக்கமில்லை. எதிர்த்து நிற்பவனுக்கு இன்னல் இல்லை. துணிச்சலாலும் திறமையாலும் காலத்தைக் கூட நாம் மாற்றிக் காட்டலாம். கடலுக்குப் பயந்தவர்கள் கரையில் நிற்பார்கள். கடலுக்குள் சென்றவர்கள்தாம் முத்துக்கள் எடுப்பார்கள்.
"ஊழிற் பெருவலி யாவுள' என்று கேட்கும் வள்ளுவர் "ஊழையும் உப்பக்கம் காண்பர். உலைவின்றித் தாழா துஞற்றுபவர்' என்றும் ஒரு குறளிலே சொல்வார். எதிர்நீச்சல் போடும் துணிச்சல் இருந்தால் எதையும் நாம் சாதிக்கலாம். ஆகாத காரியம் என்று மற்றவர் சொல்வதை ஆகும்படி செய்யலாம். அப்படிப்பட்ட கருத்தை ஒரு பாட்டில் நான் எழுதியிருக்கிறேன்.
அந்தப் பாடல் இடம்பெற்ற படம் "புது 
வசந்தம்'. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் செüத்திரி 
தயாரித்த இரண்டாவது படம். அந்தப் பாடலைப் பற்றிச் சொல்வதற்கு முன் அந்தப் படத்தில் நான் எழுதிய முதற்பாடலைச் சொல்ல விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலம்தான் விக்கிரமன் இயக்குநராக அறிமுகமானார். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் நான் பாடல் எழுதிய முதல் படமும் இதுதான். பாடல் எழுத அமர்ந்ததும், ""முத்துலிங்கம் சார், இந்தப் படம் உங்களுக்குப் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று. ஆனால் இதுதான் எங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும் படம். அதனால் நல்ல வரிகளாக எழுதுங்கள் சார்'' என்று அந்தப் படத்தின் அன்றைய இணை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.
""எந்தப் படமாக இருந்தாலும் நன்றாகத்தான் எழுதுவோம். நன்றாக எழுதினால்தானே அடுத்த படத்திற்குக் கூப்பிடுவீர்கள். கவலை வேண்டாம். டியூனைப் பாடுங்கள்'' என்று இசையமைப்பாளரிடம் சொன்னேன்.
""தானன தனனா தானன னனனா
தனனா
தனனா தனனா
தானன தனனா தானன னனனா
தனனா
தனனா தனனா''
என்று ராஜ்குமார் தத்தக்காரம் பாடியதும்,
""ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்
வரலாம்
இதுபோல் வருமா
சந்தன மலர்கள் வாசனை தரலாம்
தரலாம்
அன்பைத் தருமா''
என்று எழுதிக் காட்டினேன். எல்லாருக்கும் அது பிடித்துவிட்டது. பல்லவி இன்னும் தொடரும். இதில் முதல் சரணம் இப்படி வரும்.
""இறைவன் எழுதும் கவிதைகள் யாவும்
இயற்கை அழகாய்ச் சிரிக்கிறதே
இயற்கை சிரிக்கும் அழகினைக் கண்டு
இதயம் சிறகை விரிக்கிறதே
சோலைப் பூங்காற்று இசைபடிக்கும்
சொந்தம் கொண்டாடி மலர் அழைக்கும்
நதிகளில் அலைமோதி கரைகளில் விளையாடும்
பறவைகள் அதைப் பார்த்து புதுவகைப் பண்பாடும்
இனிமை வசந்தம் இதுதானோ''
இதுபோல் இன்னொரு சரணம் வரும். 1991-ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராக "சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகை இந்தப் பாடலுக்காக என்னைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது. ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு ரசிகர்கள் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்ததாக 
அப்போதைய சினிமா எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ராமமூர்த்தி கூறினார்.
இதில் இன்னொரு பாடல் எழுதினேன். அதுதான் நான் சொல்ல வந்த பாடல்.
""போடு தாளம் போடு - நாங்க
பாடாத தெம்மாங்கு ஏது
அந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து
இந்தப் பக்கம் திரும்பும் ஒருநாள் பாத்து
காலத்தை மாத்துவோம்
ஜெய்ச்சுத்தான் காட்டுவோம்''
இது பல்லவி.
""வாழ்வே எந்நாளும் எதிர்நீச்சல் தானே
வருத்தம் கொண்டேநீ வாடாதே வீணே
என் பாட்டுத்தான் செல்வாக்கைத்தான்
எப்போதும் இங்கே உருவாக்குமே
அதிர்ஷ்டம் கூடிவந்தா அவனும் இங்கே ராஜாதான்
அதுவும் ஒதுங்கிநின்னா அவனும் இங்கே கூஜாதான்
கவலையை நீக்குவோம் பறவைபோல் வாழுவோம்''
இதுபோல் இன்னொரு சரணம் வரும்.
அதில்,
""இருக்கும் காலம்வரை இன்பங்களைக் கொண்டாடு
எதிலும் இடைஞ்சல்வந்தா எதுத்து நின்னு முன்னேறு
வாலிபம் என்பதே இன்பமாய் வாழவே''
என்ற மூன்று வரிகளை நடிகர் முரளி என்னைப் பார்க்கும் போதெல்லாம் கூறுவார். இதில் எல்லாப் பாடல்களுமே பிரபலம். படமும் நூறுநாள் ஓடியது. முரளி, சார்லி, சித்தாரா, ஆனந்த்பாபு ஆகியோர் நடித்த படம்.
செüத்திரி தமிழில் தயாரித்த முதல் படம் "முதல் பாவம்'. இது தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. நடிகை அபிலாஷா நடித்த படம். இதில் எல்லாப் பாடல்களையும் நான்தான் எழுதினேன். மலையாள இசையமைப்பாளர் ஜெர்ரி அமல்தேவ் இசையமைத்திருந்தார். இதில் என்னுடைய பாடல்களைப் பாராட்டி "கல்கி' பத்திரிகை விமர்சனம் எழுதியது இன்னும் என் நினைவில் நிற்கிறது.
"என் பாட்டுத்தான் செல்வாக்கைத்தான் எப்போதும் இங்கே உருவாக்குமே' என்று நான் எழுதுவதற்கு முன்னால் என் பாட்டைப் பற்றிய நம்பிக்கையாலோ என்னவோ தேர்தல் நேரத்தில் கட்சியைப் பற்றி ஒரு பாட்டு எழுது என்று சில கருத்துக்களைச் சொல்லி எம்.ஜி.ஆர் என்னைப் பாடல் எழுதச் சொல்வார். எழுதிக் காண்பித்தால் ஒன்றும் சொல்லமாட்டார். அப்படியே மடித்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்வார். அதை ரிக்கார்ட் பண்ணவும் மாட்டார். அப்படி ஒரு வகையான சென்ட்டிமெண்ட் அவருக்குண்டு.

(இன்னும் தவழும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com