ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -37: சுரதா கொடுத்த ஒரு ரூபாய்!

இந்தப் பாடலையும் இதைப் போன்ற பல நல்ல பாடல்களையும் எழுதியவர் நாமக்கல்

""மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா - பெற்றெடுத்த
குழந்தை தாய்க்குப் பாரமா''

இந்தப் பாடல் ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல். இந்தப் பாடலையும் இதைப் போன்ற பல நல்ல பாடல்களையும் எழுதியவர் நாமக்கல் முத்துச்சாமி என்ற கவிஞர். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா இவரது சிரமத்தை அறிந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அதை அன்றைய அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும், நத்தம் விசுவநாதனும் சேர்ந்து கொடுத்தார்கள்.

இவர் "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்றொரு படத்தைத் தயாரித்தார். தொடர்ந்து தயாரிக்க அவரால் இயலாததால் அப்படத்தைத் தன்னகப்படுத்தி, திரைக்கதை வசனத்தை மாற்றி தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை மேற்கொண்டு படத்தை முடித்தவர் ஏ.கே. வேலன்.
ஏ.கே.வேலன், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் படித்து புலவர் பட்டம் பெற்றவர். கதை வசனம் எழுதியவர்களில் முதன்முதல் படப்பிடிப்பு நிலையம் கட்டியவர் இவர்தான். இவரது தந்தையார் பெயரில் அருணாசலம் ஸ்டுடியோ என்று ஒரு ஸ்டுடியோவை நிறுவினார். அந்த ஸ்டுடியோ பெயரை வைத்துத்தான் அந்த வீதிக்கு "அருணாசலம் ரோடு' என்று பெயர் வந்தது. "தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்தில் வந்த லாபத்தில் அந்த ஸ்டுடியோவைக் கட்டினார். 

"தை பிறந்தால் வழி பிறக்கும்' படம் தயாரிக்கும்போது ஏ.கே.வேலன் தி.மு.கழகத்தில் இருந்தார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கலையுலகை ஆதிக்கம் செய்த காலம் அது.

"சர்வாதிகாரி' படத்திற்கு வசனம் எழுதிய ஏ.வி.பி. ஆசைத்தம்பி, "ஆட வந்த தெய்வம்' படத்திற்கு வசனம் எழுதிய சி.பி. சிற்றரசு, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பாசவலை' போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதிய சலகை ப. கண்ணன். "குலதெய்வம்', "அன்னையின் ஆணை', "மரகதம்' போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய முரசொலி மாறன், "சந்திரோதயம்' படத்திற்கு வசனம் எழுதிய ஏ.கே.வில்வம், எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களுக்கு வசனம் எழுதிய சொர்ணம், "தாய் மகளுக்குக் கட்டிய தாலி' போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதி பல படங்களைத் தயாரித்த அரங்கண்ணல், "ரத்தக் கண்ணீர்' படத்திற்கு வசனம் எழுதிய திருவாரூர் தங்கராசு, இவர்கள் எல்லோருக்கும் மேலாக அண்ணா, கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோர் திராவிட இயக்க எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இருந்தாலும் கருணாநிதியைப் போல், வெற்றி பெற்ற வசனகர்த்தாக்கள் திராவிட இயக்கத்தில் யாருமிலர்.
ஏ.கே.வேலனுக்குப் பிறகு சொந்தமாகப் படப்பிடிப்பு நிலையம் உருவாக்கியவர். கே.எஸ். கோபாலகிருஷ்ணன். "கற்பகம்' படம் தந்த லாபத்தில் கட்டியதால் கற்பகம் ஸ்டுடியோ என்று பெயர் வைத்தார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை வசனம் எழுதுவதற்கு முன்பு பாடலாசிரியராகவும் துணை இயக்குநராகவும் இருந்தார். உடுமலை நாராயண கவியிடம் உதவியாளராகவும் இருந்தார். குட்டையாக இவர் இருப்பதால் "குட்டைக் கவி' என்று இவருக்குப் பட்டப் பெயரும் உண்டு. இவர் டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக இருந்து நடிகர் நடிகையருக்கு வசனம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இவரைப் போல பாடலாசிரியராகவும் இருந்து கதை, வசனம் எழுதியவர்கள் எஸ்.டி.சுந்தரம், சுரதா, கம்பதாசன், தஞ்சை ராமையாதாஸ், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, கங்கை அமரன் என்று பலர் உண்டு.

1934-ஆம் ஆண்டில் வெளிவந்த "நல்லதங்காள்' படத்திற்கு கதை, வசனம் எழுதியதுடன் அதில் 62 பாடல்களையும் எழுதியவர் பரமக்குடி சிவராமலிங்கம் பிள்ளை என்பவர். இவர் தமிழாசிரியராக இருந்தவர். பெரும் வித்துவான். தமிழ் வித்வான்களில் முதன் முதல் திரையுலகில் புகுந்தவர் இவர்தான்.
இவருக்குப் பிறகுதான் பாரதிதாசன், புலவர் ஏ.கே.வேலன் போன்றவர்கள் சினிமாவில் புகுந்தார்கள்.

ஏ.கே.வேலன், பாரதிதாசன் மேல் மிகுந்த பற்றுடையவர். அதனால் பாரதிதாசனை வைத்து தன் படத்திற்குப் பாடல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் அதிகம் இருந்தது.

ஒரு நாள்  மெட்டமைத்து  வைத்துக் கொண்டு, ""நீங்கள் சொன்ன காட்சிக்கு ஒரு டியூன்  போட்டு  வைத்திருக்கிறேன். பாடலாசிரியரைக் கூட்டி வாருங்கள்; பாடல் எழுதலாம்'' என்று கே.வி. மகாதேவன், ஏ.கே.வேலனிடம் கூறியிருக்கிறார்.

உடனே ஏ.கே.வேலன் சென்னை ராமன் தெருவில் இருந்த பாரதிதாசன் வீட்டிற்குச் செல்ல, அவர் புதுச்சேரி சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது.
எப்படியாயினும் புதுச்சேரிக்குச் சென்று புரட்சிக் கவிஞரை அழைத்து வந்து விடவேண்டும் என்று காரில் பெட்ரோல் நிரப்பிக் கொள்வதற்காக புரசைவாக்கத்திலிருந்த ஒரு பெட்ரோல் பங்க்கில் காரை நிறுத்தினார்.

அப்போது அந்த வழியாக தனது நண்பர் ஒருவருடன் உரையாடியவாறு சுரதா நடந்து வந்து கொண்டிருந்தார். ஏ.கே. வேலனுக்கு திடீரென்று ஓர் எண்ணம் உண்டானது.

நாம் புதுச்சேரிக்குச் சென்றதும் பாரதிதாசன் நம்மோடு வந்தால் நல்லது. "வர மாட்டேன்' என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? அல்லது வந்தபின் நான் டியூனுக்கு எழுதமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னாவது? என்று பல வகையிலும் சிந்திக்கத் தொடங்கி விட்டார். புரட்சிக் கவிஞர் மெட்டுக்குப் பாட்டெழுத கொஞ்சம் சிரமப்படுவார் என்பார்கள். இதை மருதகாசி போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆக ஏ.கே.வேலன் இப்படிப் பல வகையிலும் சிந்தித்து பாரதிதாசனுக்கு அடுத்தபடியாக அவர் மதித்த பெருங்கவிஞர் சுரதா என்பதால் சுரதாவை வைத்து பாட்டெழுதிக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார்.

சுரதாவின் இயற்பெயர் இராசகோபால். பாரதிதாசன் இயற்பெயர் சுப்புரத்தினம். சுப்புரத்தினத்தின் தாசன் என்பதால் சுரதா என்று வைத்துக் கொண்டார். ஆரம்ப காலத்தில் இந்த விவரம் தெரியாமல் சுரதா என்பது பெண் பெயர் போலே இருப்பதால் பெண்ணென்று நினைத்து இவருக்கு காதல் கடிதம் எழுதியவர்கள் பலர் உண்டு. அவர்களில் நானும் ஒருவன்.

ஏ.கே.வேலன் சுரதாவை அழைத்துக் கொண்டு இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் செல்ல அவர் டியூன் போட்டுக் காட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அங்கேயே பாடலை எழுதிவிட்டார். சுரதாவின் பேர் சொல்லும் பாடல்களில் அதுவும் ஒன்று. அது தான் "அமுதம் தேனும் எதற்கு?' என்ற பாடல். கண்ணதாசனின் சில பாடல்களைப் போல் காலம் கடந்தும் நம் நெஞ்சில் நிற்கும் பாடல் இது.

நான் சென்னைக்கு வந்த புதிதில் மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கவிஞர் சுரதாவிடம் சிவகங்கையைச் சேர்ந்த வான்மதி என்ற திராவிட கழகத் தோழர் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ""இவர் எங்கள் சிவகங்கையைச் சேர்ந்தவர். நல்ல கவிஞர். நாங்கள் கவிஞர் முத்துலிங்கம் என்றுதான் இவரை அழைப்போம்'' என்றார்.

""சிவகங்கை முத்துலிங்கம் என்ற பெயரில் "இலக்கியம்' பத்திரிகையில் உன் கவிதையை வெளியிட்டிருக்கிறேனே?'' என்றார் சுரதா. ""அதனால்தான் உங்களிடம் அறிமுகப்படுத்தினார்'' என்றேன் நான். கொஞ்ச நேரம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த சுரதா, ""நீங்கள் என்ன முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவரா?'' என்று கேட்டார்.

""ஆமாம். நான் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவன்தான். அதிலும் அகம்படியர் (அகமுடையார்). சிவங்கையை ஆண்ட மருதுபாண்டியர் பரம்பரையைச் சேர்ந்தவன்'' என்றேன். ""இதெல்லாம் உன்னிடம் கேட்டேனா? முக்குலத்தோரா என்றால் ஆமாம். இல்லையென்று ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியது தானே?'' என்றார்.

""சரி, நான் முக்குலத்தோர் என்று யார் சொன்னது? உங்களுக்கு எப்படித் தெரியும்?'' என்றேன். ""யாரும் சொல்ல வேண்டுமா என்ன? தலையைப் பார்க்கும் போதே தெரியுதே, அதனால் அப்படிக் கேட்டேன்'' என்றார். அவருடைய குணங்களை அறியாதவர்களாக இருந்தால் அவருடன் சண்டை போட்டிருப்பார்கள். ஏற்கெனவே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் எனக்குக் கோபம் வரவில்லை. கள்ளங்கப்படம் இல்லாதவர் அவர். அப்போது எனது தலைமுடி சுருள் சுருளாக அழகாக இருக்கும்.

ஒருவரைப் பாராட்ட வேண்டுமென்றால் மனம் திறந்து நிறைவாகப் பாராட்டுவார். ஜெயா தொலைக்காட்சியில் கோயில்களைப் பற்றிய நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த ஸ்ரீகவி என்பவரின் திருமண விழாவில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. சுரதா தான் அதன் தலைவர். எனக்கு "சேய்' என்ற தலைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.

நான் பாடும்போது "சேய்' என்றால் குழந்தையென்று பொருள். ""சேய்மை என்றால் தூரம் என்று பொருள். சேய் என்ற சொல்லில் இருந்து வந்ததுதான் சேய்மை. ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடைவெளி அதிகம் இருக்க வேண்டும். அதாவது தூரம் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைக்கு சேய் என்று பெயர் வைத்தார்கள்'' என்று கூறினேன்.

உடனே சுரதா எழுந்து, ""நான் ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் படித்திருக்கிறேன். சேய் என்றால் குழந்தையென்றும் சேய்மை என்றால் தொலைவு என்றும் பொருள் உண்டென்று தெரியும். ஆனால் ஒரு குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தை பிறக்க சில ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். அதனால் தான் குழந்தைக்கு சேய் என்று பெயர் வைத்தார்கள் என்று சொல்லக் கூடிய சிந்தனை எனக்குத் தோன்றவில்லை. முத்துலிங்கத்திற்குத்தான் தோன்றியிருக்கிறது. ஆகவே அவரைப் பாராட்டுகின்ற வகையில் என்னிடம் இருக்கும் ஒரு ரூபாயை அன்பளிப்பாகக் கொடுக்கிறேன்'' என்று கொடுத்தார். அதை நான் பெற்றுக் கொண்டு, ""சுரதா நடத்தும் பத்திரிகைக்கு நிதியாகக் கொடுக்கிறேன்'' என்று திருப்பிக் கொடுத்தேன்.

உடனே அவர், ""இப்படி நான் கொடுக்க அதை வாங்கி நீ என்னிடம் திருப்பிக் கொடுத்தால் நாம் பேசி வைத்துக் கொண்டு செய்வதாக யாரேனும் நினைப்பார்கள். ஆகவே நீயே வைத்துக் கொள்'' என்று திரும்பக் கொடுத்தார். அப்போது பேருந்தில் செல்வதற்கு அதைத் தவிர வேறு காசில்லை. ஆகவே அதை நான் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

(இன்னும் தவழும்)
படங்கள் உதவி: ஞானம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com