ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 63: பாதிரியார்கள் நேசித்த சைவ மடம்!

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 63: பாதிரியார்கள் நேசித்த சைவ மடம்!

தினமணியில் நான் கட்டுரை எழுதத் தொடங்கியதும் முதல் கட்டுரையைப் படித்துவிட்டு மதுரை ஆதீனமும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜசேகரனும், லேனா தமிழ்வாணனும் பாராட்டியதாக


தினமணியில் நான் கட்டுரை எழுதத் தொடங்கியதும் முதல் கட்டுரையைப் படித்துவிட்டு மதுரை ஆதீனமும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜசேகரனும், லேனா தமிழ்வாணனும் பாராட்டியதாக ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.

அதில் நான்காவது கட்டுரை வெளிவருகிற நேரத்தில் தொலைபேசியில் பாராட்டியதோடு நின்றுவிடாமல் இருபத்தையாயிரம் ரூபாய் காசோலை அனுப்பி பாராட்டுக் கடிதமும் எழுதிப் பாராட்டியவர் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள்தான். தினமணி எனக்கு சன்மானம் அளிப்பதற்கு முன்பே சன்மானம் அளித்தவர் அவர்.

பத்திரிகையில் வரக்கூடிய கதையோ அல்லது கட்டுரையோ அல்லது புத்தகமோ நன்றாக இருந்தால் பணம் அனுப்பிக் கடிதமும் எழுதிப் பாராட்டுவார் ஜி.கே. மூப்பனார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வேறு எந்தத் தலைவரும் அப்படிச் செய்ததில்லையென்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட அந்தப் பண்பை ஒரு ஆதீனம் பெற்றிருக்கிறாரென்றால் அது மதுரை ஆதீனம்தான்.

அந்தக் காலத்தில் மதுரை ஆதீனத்தோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற அரசியல், ஆன்மீக ஞானிகள், அதற்குமுன்பு இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, பாண்டித்துரைத் தேவர் போன்றவர்கள் அதற்கு முன்பு வள்ளலார் போன்றவர்கள் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு முன்பாக சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்களுக்கும் ஆதீனத்திற்கும் தொடர்பு இருந்திருக்கிறது. மதுரை ஆதீனம் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது உலகம் அறிந்த செய்தி.
ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பாதிரியார்கள் மதுரை ஆதீனத்திற்கு வருவதை ஒரு பெருமையாகக் கருதிய காலம் அன்றைய காலம்.

ரோமாபுரியில் கி.பி. 1577-இல் பிறந்த ராபர்ட் டி. நோபிலி என்பவர் கி.பி. 1606 ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்திற்கு வருகை தந்தார். முதன்முதல் மதுரை ஆதீனத்திற்கு வந்த வெளிநாட்டுப் பாதிரியார் இவர்தான். இவர் தமிழை நன்கு கற்றுக்கொண்டு ஞான உபதேச காண்டம், ஞான தீபிகை, மந்திரமாலை, தத்துவக் கண்ணாடி போன்ற பல தமிழ் நூல்களை எழுதித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார். நமது துறவிகள் போல் காவி உடை அணிந்த பாதிரியார் இவர்தான்.

அதற்குப் பிறகு ஆதீனத்திற்கு வருகை தந்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீகன் பால்கு. இவர் தன்னை சீகன் பால்கு ஐயர் என்று சொல்லிக் கொண்டார். ஏற்கெனவே ஒரு கட்டுரையில் இவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். இவர் "தமிழ் - லத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு' நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அன்றைய மதுரை ஆதீனத்தின் மூலம் தமிழின் பெருமையை நன்குணர்ந்தவர் இவர்.

இவருக்குப் பிறகு 1710-இல் வீரமாமுனிவர் இங்கு வருகை தந்தார். இவரைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். என்றாலும் இவர் எழுதிய "தேம்பாவணி' என்ற நூலைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிட்டவர் 1813-ஆம் ஆண்டு சென்னை கலெக்டராக இருந்த எல்லீஸ் என்பவர். இவர் இல்லையென்றால் தேம்பாவணி நமக்குக் கிடைத்திருக்காது. இவரைப் பற்றித் தனிக் கட்டுரையே எழுதவேண்டும்.

இவருக்குப் பிறகு 1840, 1841, 1842 ஆகிய மூன்றாண்டுகளில் மூன்று முறை மதுரை ஆதீனத்திற்கு வருகை தந்து சிறப்பித்தவர் ஜி.யு.போப். இவர், தான் மறைந்துவிட்டால் தன் கல்லறையில் "இங்கே தமிழ் மாணவன் ஒருவன் உறங்குகிறான்' என்று எழுதிவைக்க வேண்டும் என்றவர்.

இத்தகைய சிறப்புமிக்கவர்களால் போற்றப்பட்ட மதுரை ஆதீனத்தின் இன்றைய மடாதிபதி தனது மடத்திற்கு அழைத்து எனக்குச் சால்வை அணிவித்துப் பாராட்டியதை என்னால் என்றும் மறக்கமுடியாது. அதற்குக் காரணம் தினமணியில் இடம்பெற்று வரும் எனது கட்டுரைகள்தாம். அதற்காகத் தினமணிக்கு எனது நன்றி.

மதுரை ஆதீனம் போன்ற தமிழ் வளர்த்த சான்றோர்களைப் பாராட்டும் போது சில போலிச் சாமியார்கள் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஊரெங்கும் போலிச் சாமியார்கள் பெருகிவிட்டார்கள். காவி உடைக்குள் கபட வேடதாரிகளின் தொகை பெருகிவிட்டது. அக்கிரமச் செயல்களுக்கு ஆசிரமம் என்ற அரண் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் சில வசதி படைத்த காவியுடைச் சாமியார்களுக்கு அடிவருவடிகளாகச் சில பத்திரிகையாளர்களும், பாராள்வோரும் துணை போகின்றனர்.

சாலை ஓரத்தில் கறையான் புற்றோ பாம்புப் புற்றோ இருந்தால்போதும் பக்கத்தில் சாமியாரோ, சாமியாரிணியோ அமர்ந்துகொண்டு அருள்வாக்குச் சொல்லத் தொடங்கி விடுகிறார்கள். ஏமாறுவோர் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் - ஆரும் துறத்தல் அரிதரிது" என்று பட்டினத்தாரைப் போற்றி ஒரு புலவர் வெண்பாப் பாடியிருக்கிறாரே. அப்படிப்பட்ட துறவிகளை இன்று யாராவது கண்ணில் கண்டதுண்டா?

குங்குமம், திருநீறு வரவழைத்துக் கொடுத்துவிட்டால் போதும் அவர்களை ஆண்டவன் அவதாரம் என்று எண்ணுகின்றனர். அவற்றை எப்படி வரவழைக்கிறார்கள் என்று யாரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை.

குங்குமம் திருநீறு கையிலிருந்து கொட்டச் செய்பவர்கள் யாரேனும் ஓர் ஏழையின் பசியைப் போக்கத் தங்கள் கைகளை உயர்த்தி சோறும் குழம்பும் கொட்டச் செய்திருக்கிறார்களா? என்று யாரும் சிந்திப்பதில்லை. பக்தி என்ற பெயரில் பகுத்தறிவை இழந்துவிடுகிறார்கள்.

"மாமுனிவர் தோன்றி மனமுயர்ந்த நாட்டினிலே 
காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே'
என்று பாரதியார் அப்போதே மனம் வருந்திப் பாடியிருக்கிறார்.

அப்படி உலகை ஏமாற்றும் போலிச்சாமியார்களைப் பற்றி 1957-ஆம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த "ராஜராஜன்' என்ற படத்தில் மருதகாசி புரட்சிகரமான பாடலொன்றை எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்.

"சாமி சாமியென்று ஊரை ஏய்க்கிற - ஆ
சாமி ரொம்பஇந்த நாட்டிலே - ஒருச்
சாண் வயித்துக்காக ஆண்டவன் பேரையும்
சந்திக் கிழுக்கிறாங்க பாட்டிலே
தாடி சடைமுடி தண்டு கமண்டலம்
கொண்டவன் எல்லோரும் சாமி -  

என்று தொடங்கும் பாடலில்.. சாமி வேடம் பூணும் ஆசாமிகளை அக்குவேறாய் ஆணி வேறாய்ப் பிய்த்து எறிந்துவிட்டார். மருதகாசி, கே.வி. மகாதேவன் இசையில் டி.எம். செளந்தரராஜன் பாடிய பாடல் இது. ஆனால் இந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை.

(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com