ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 75: அனுபவச் சுவடே வழிகாட்டும்!

சென்ற வாரத்தில் அண்ணல் தங்கோவைப் பற்றி எழுதும் போது அன்றைய திரைப்படத் தணிக்கைக் குழுவில் இருந்த "சண்டே  அப்சர்வர்'  பி. பாலசுப்பிரமணியத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 75: அனுபவச் சுவடே வழிகாட்டும்!

சென்ற வாரத்தில் அண்ணல் தங்கோவைப் பற்றி எழுதும் போது அன்றைய திரைப்படத் தணிக்கைக் குழுவில் இருந்த "சண்டே  அப்சர்வர்'  பி. பாலசுப்பிரமணியத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.  துணைத் தலைவராக இருந்த பாலசுப்பிரமணியம் என்று குறிப்பிடாமல் உறுப்பினராக இருந்த பாலசுப்பிரமணியம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதை ஒரு நண்பர் சுட்டிக்காட்டி  ""சண்டே  அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் துணைத்தலைவராக இருந்தவர்; அவர்தான் மற்ற மூன்று தணிக்கைக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி இவரும் கையெழுத்திட்டு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சான்றிதழ் கொடுத்தார்''  என்று கூறினார். அப்படிக் கூறியவர் என்னுடன் முரசொலியில் அந்நாளில் பணியாற்றிய கே.கே.ராஜன் என்பவர். அவர் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

அந்த கே.கே.ராஜன் புரட்சித்தலைவி ஜெயலலிதாவைப் பற்றி பலர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளைக் கவிதைகளைத் தேடிப் பிடித்துப் புத்தகமாக ஆக்கியிருக்கிறார். விரைவில் வெளியீட்டுவிழா நடைபெற இருக்கிறது.

சண்டே  அப்சர்வர் பி. பாலசுப்பிரமணியம் என்றால் அரசியல் உலகில் அனைவரும் அறிவர். இவர் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவர். வடமாநிலங்களில் பெரியார் சுற்றுப் பயணம் செய்யும் போது அவர் பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்காகக் கூடச் சென்றவர். மேலும் தமிழ் நாட்டில் அம்பேத்கர், முகமது அலி ஜின்னா ஆகியோரின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழிபெயர்த்துக் கூறியவரும் இவர்தான்.

ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த போது சீனாவின் இந்தியத் தூதராக இந்திய அரசு இவரை நியமிக்க முன்வந்தது. ஆனால் அதை ஏற்க இவர் மறுத்துவிட்டார்.

ஒருமுறை சண்டே அப்சர்வர் பத்திரிகையில் காந்தியடிகளைத் தாக்கிக் கடுமையாக எழுதியிருந்தார். அதனால் ராஜாஜி, காந்தியடிகளை எப்படித் தாக்கி எழுதலாம் என்று பாலசுப்பிரமணியம் மீது வழக்குத் தொடுத்தார். ஆனால் சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியத்திற்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வந்தது. வக்கீலான ராஜாஜி அவர்களையே தனது வாதத் திறமையால் திணற வைத்தவர் சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம். 

இவரது வாதத் திறமையைக் கண்டு ராஜாஜி வியந்து மகிழ்ந்து மயங்கிப் போனார் என்று கூடச் சொல்வார்கள். அப்படிப்பட்ட திறமையாளர் என்பதால்தான் சீனாவுக்கான இந்தியத் தூதராக ராஜாஜி இவரை நியமிக்க உத்தரவிட்டார். இது அந்நாளைய அரசியல் அறிஞர்கள் அனைவரும் அறிந்த செய்தி. பணம் பதவிக்காக இன்றைய அரசியலில் புகுந்திருக்கும் பல தலைவர்களுக்கு இந்த வரலாறு தெரியாது.

இப்படிப்பட்ட புலமையாளர்கள் திறமையாளர்கள் நேர்மையாளர்கள் இன்றைய திராவிட இயக்கங்களிலும், வேறு இயக்கங்களிலும் எவராவது இருப்பார்களா? தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

சரி. நாம் திரைப்பாடல் பற்றிய நமது கட்டுரைக்கு வருவோம். மெல்லிசை மன்னர்  எம்.எஸ்.விசுவநாதன் இசையில் 45 படங்களில் நான் பாடல் எழுதியிருக்கிறேன். அதில் கடைசியாக எழுதிய படம்  "சுவடுகள்'.  இது 2013-இல் வெளிவந்தது. இது வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் தயாரித்தப் படம். இதில் நான் மூன்று பாடல்கள் எழுதினேன்.

"உலகத்தில் சுவடுகள் பலவுண்டு
ஒவ்வொரு சுவடுக்கும் கதையுண்டு
ஆயிரம் சுவடுகள் இருந்தாலும்
அனுபவச் சுவடே வழிகாட்டும்
அதுதான் வாழ்வில் ஒளியேற்றும்'
என்ற பல்லவியுடன் ஒரு பாடல் தொடங்கும்.
"தரையில் பதிந்த சுவடுகள் யாவும்
தண்ணீராலே அழிந்துவிடும்
காதல் என்னும் சுவடுகள் கூட
கனவாய் ஒருநாள் மறைந்துவிடும்
பாதம் பதிந்த சுவடுகளே
பாதை ஆனது பூமியிலே
எல்லாச் சுவடும் குறிப்பிட்ட திசையில்
இலக்கை நோக்கிச் செல்கிறது - அதில்
எங்கள் சுவடும் பதிகிறது'

இதுபோல் இன்னொரு சரணம் வரும். இதை ஸ்ரீநிவாஸ் என்ற பாடகர் பாடியிருப்பார்.

"உயிரெழுத்தை மெய்யெழுத்தில்
ஒளித்துவைத்த இறைவனே
என்னெழுத்தை மாற்றி எழுதி
இரக்கம் காட்டு இறைவனே
இருக்குமென்று நினைப்பதெல்லாம்
இமைப்பொழுதில் மறையுது
இறக்குமென்று நினைப்பதெல்லாம்
எமனை வென்று சிரிக்குது
வாழ்க்கை யென்னும் பாதையிலே
பயணம் கொஞ்சக் காலம்
வாழும்வரை மனித மனம்
அங்கும் இங்கும் ஓடும்'

என்று மற்றொரு பாடல் எழுதினேன். இதை அனந்த ராமகிருஷ்ணன் பாடியிருப்பார். இவர் எம்.எஸ்.வியின் உதவியாளர். இந்தப் பாடலில் சில வரிகளைத்தான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். இதுபோல்  ("பூப்பூத்தது சங்கீதப் பூப்பூத்தது')  என்று இன்னொரு பாடலையும் எழுதினேன். இதை அனந்தராமகிருஷ்ணனும், கல்பனாவும் பாடியிருப்பார்கள். கவிஞர் காமகோடியனும் இதில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

என்னுடைய திரைப்பாடல்களை  நண்பர் கே.பி.பாலகிருஷ்ணன் என்பவர் 1997-இல் முதன்முதல் புத்தகமாக வெளியிட்டார்.  அதன் பின் 2000-ஆம் ஆண்டில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.  2013-இல் நெல்லை ஜெயந்தாவை உரிமையாளராகக் கொண்ட வாலி பதிப்பகம் வெளியிட்டது.  வாலி பதிப்பகம் வெளியிட்டதில் நேரடித் தமிழ்ப் படத்திற்கு நான் எழுதிய இருபத்து நான்கு பாடல்கள் விடுபட்டுவிட்டன.

அதற்குப் பதில் நான் எழுதிய மொழி மாற்றுப் படங்களின் சில பாடல்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.  ""அடுத்த பதிப்பில் அதில் சில பாடல்களை நீக்கிவிட்டு நேரடித் தமிழ்ப்படத்திற்கு எழுதிய சில பாடல்களைச் சேர்க்கிறோம்''  என்று கவிஞர் நெல்லை ஜெயந்தா சொல்லியிருக்கிறார். அப்படி விடுபட்ட  பாடல்களில் இரண்டு மூன்று பாடல்களையாவது குறிப்பிட விரும்புகிறேன்.

நடிகர் சத்தியராஜ் நடித்த அவரது மேலாளர் இராமநாதன் முதன் முதல் தயாரித்த  "வாத்தியார் வீட்டுப் பிள்ளை'  என்ற படத்தில்

"ஒரு - பூஞ்சோலை ஆளானதே
ஒரு - பொன்மாலை தோள்சேருதே
மலர்களில் முன்னும் பின்னும்
பனித்துளி மின்னும் மின்னும்
பருவங்கள் துள்ளும் துள்ளும்
பழகிடச் சொல்லும் சொல்லும்'
என்ற பாடல். இது எஸ்.பி. பாலசுப்பிர
மணியமும்,  சித்ராவும் பாடியது. இளையராஜா இசையமைத்த படம்.

"இது எங்கள் ராஜ்யம்" என்ற படத்தில் 
"கனவுத் தோட்டம் நூறு
மனதில் ஆடும் போது
கண்ணாலே சொன்னாளே
புதிய பாடம் ஒன்று'
என்ற பாடல். இதை மலேசியா வாசுதேவனும், ஜானகியும் பாடியிருப்பார்கள். இது சந்திரபோஸ் இசையில் உருவான படம்.
மணிவண்ணன் இயக்கத்தில் இளையராஜா இசையில்  "அன்பின் முகவரி'  என்ற படத்தில்
"வான் சிவந்தது பூ மலர்ந்தது
வாலிபக் கிளியே - சிறு
பூமலர் விழியே'
என்ற பாடல். இது எஸ்.என். சுரேந்தரும்,  எஸ். ஜானகியும் பாடிய பாடல்.
சந்திரபோஸ் இசையில்  "தரையில் வாழும் மீன்கள்'  என்ற படத்தில்
"அன்பே சிந்தாமணி
இன்பத் தேமாங்கனி
பொங்கும் தேனாறுநீ - நெஞ்சில்
மணம்தரும் புதுமலர் நீ'

என்ற பாடல்.  இதை மலேசியா வாசுதேவனும்,  ஜானகியும் பாடியிருப்பார்கள்.
அதுபோல்  "கடவுளுக்கு ஒரு கடிதம்'  என்ற படத்தில்

"என்னதான் இந்த மெüனம்
சந்நிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கெந்த தியானத்தில் கவனம்'
என்ற பாடல். இது ஜெயச்சந்திரனும், வாணிஜெயராமும் பாடியது.

அதுபோல்  "ராசாத்தி ரோசாக்கிளி'  என்ற படத்தில் மூன்று பாடல்கள் விடுபட்டுப் போய்விட்டது. "வா மகளே வா' என்ற படத்தில் இரண்டு பாடல்கள் விடுபட்டுப் போய் விட்டது. இப்போது நான் சொல்கிற எல்லாப் பாடல்களும் பிரபலமான பாடல்கள்.

"கல்யாண ராசி'  என்ற படத்தில்,
"பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம்
இதயம் பாடுதே' 
என்ற பாடல். இது ஜெயச்சந்திரனும்,  
சித்ராவும் பாடியது. மனோஜ் (கியான்) இசையமைத்தபடம். என்னை சினிமாவில் அறிமுக
ப்படுத்திய டைரக்டர் பி. மாதவன் தயாரித்து இயக்கிய  "சின்னக் குயில் பாடுது' என்ற 
படத்தில்,
"சித்திரை மாசத்துப் பூங்காத்து - ஏ
முத்திரை போடுது பூமீது
குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
சந்தனத் தோப்புக்குள் மானிருக்கு
சந்தர்ப்பம் காத்திருக்கு'

என்ற பாடல். இது இளையராஜா இசையமைத்த படம். மலேசியா வாசுதேவனும்,  சித்ராவும் பாடியிருப்பார்கள். இதுபோல் பல பாடல்கள் என் திரைப்பாட்டுப் புத்தகத்தில் விடுபட்டுப் போய்விட்டன.  நானும் சில பாடல்களை எழுதி வைக்காமல் விட்டுவிட்டேன்.

மொழிமாற்றுப் படங்களுக்குப் பாடல் எழுதியவர்களில் கம்பதாசன், தஞ்சை ராமையாதாசுக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்தவர்கள் எங்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த புரட்சிதாசனும், குயிலனும் ஆவார்கள். இதில் புரட்சிதாசன் "கல்லல்' பகுதியைச் சேர்ந்தவர். குயிலன் மானாமதுரையைச் சேர்ந்தவர்.

விட்டலாச்சாரியார் தயாரித்த மொழி மாற்றுப் படங்களில் பெரும்பாலான படங்களுக்கு வசனம் பாடல்கள் எழுதியவர் புரட்சிதாசன். அவரே மொழி மாற்றுப் படங்கள் பலவற்றைத் தயாரித்து வசனம் பாடல்கள் எழுதியிருக்கிறார்.  ஆனாலும் கம்பதாசன் தஞ்சை ராமையாதாஸ் போல் அவர் மிளிரவில்லை.

ஆனால் அவர் நேரடித் தமிழ்ப்படத்திற்கு எழுதிய சில பாடல்கள் பிரபலமாகியிருக்கின்றன. அதில் தேவர் பிலிம்ஸ் தயாரித்த  "யானைப் பாகன்' படத்தில்

"செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே
செங்கனி வாய்திறந்து சிரித்திடுவாய்
பொங்கும் எழில்பருவம் பெண்களின் இளம்பருவம்
சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்'

என்ற பாடல். இதை சீர்காழி கோவிந்தராஜனும்,  பி. சுசீலாவும் பாடியிருப்பார்கள். படத்திற்கு இசை கே.வி. மகாதேவன். இந்தப் பாடலை எனக்கு நினைவூட்டியவர் புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர் பாரதி வசந்தன். எனது நண்பர்களில் இவரும் ஒருவர்.

(அடுத்த இதழில் நிறைவு பெறும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com